முகத்தை மூடுவதை சட்டத்தினால் தடை செய்வது ஆரோக்கியமான விடயமல்ல
கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த சமூகம் விரும்பவில்லை என்கிறது உலமா சபை
முகத்தை மூடி ஆடைகளை அணியக் கூடாது எனும் தீர்மானத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பெரும்பான்மையான முஸ்லிம்களும் எதிர்க்காவிட்டாலும் கூட, சட்டத்தின் ஊடாக தடை செய்வதானது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவதைத் தடை செய்யும் வகையிலான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஊடாக தடை கொண்டுவருவதானது மனித உரிமை கண்ணோட்டத்தில் ஒரு சமூகத்திற்கு நல்லதல்ல. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி (நாளை) உலமா சபை கூடி ஆராயவுள்ளது. எனினும் முஸ்லிம் சமூகம் இந்த தடைக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்த விரும்பவில்லை.
தற்போது முகக்கவசம் அணிவது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இத்தடை முஸ்லிம் சமூகத்தினால் அவ்வளவு உணரப்படவில்லை. முகத்தை முழுமையாக மறைக்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சமூகத்தை அறிவூட்டி வருகிறது. இதுவே முஸ்லிம்களின் பெரும்பான்மையானோரின் நிலைப்பாடுமாகும் என்றார்.
இதேவேளை முகத்தை மறைப்பதற்கான தடை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகையில், ஒரு சமூகத்தின் கலாசார விடயங்களை சட்டத்தின் ஊடாக தடை செய்ய முனையக் கூடாது. இந்த வழக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான அழுத்தம் சமூகத்தின் உள்ளிருந்தே வெளிப்பட வேண்டும். தத்தமது மத மற்றும் கலாசார வழக்காறுகளை கடைப்பிடிப்பது அவரவரது உரிமையாகும். முகத்தை மூடுவது இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்றார்.-Vidivelli