மூத்த ஒலி, ஒளிபரப்பாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமான ரஷீத் எம் ஹபீல் தனது 75ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். கொவிட் 19 அச்சத்திற்கு மத்தியிலும் ஏராளமானோர் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்றமை மர்ஹூம் ஹபீல் அவர்கள் தனது வாழ்நாளில் எந்தளவு தூரம் மனிதர்களோடு நெருக்கமாகப் பழகியிருந்தார் என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தது.
1946 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி மாளிகாவத்தையில் பிறந்த ரஷீத் எம். ஹபீல், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கல்வி கற்றார். இவருக்கு இரு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள்.
ஹபீல் அவர்களது மறைவு குறித்து பலரும் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளதுடன் அவருடனான கடந்த கால உறவுகளையும் நினைவுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் உமர் லெப்பை யாக்கூப் குறிப்பிடுகையில், “ஹபீல் அவர்கள் ஒலிபரப்புத்துறையின் மூத்த புதல்வர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட அவர் பின்னர் தயாரிப்பாளராக முஸ்லிம் சேவையில் கடமையாற்றினார். வீ அப்துல் கபூர், பி.எச்.அப்துல் ஹமீத், கே. எஸ். ராஜா, நடராஜ சிவம், பீ. விக்னேஸ்வரன், ஜோர்ஜ் சந்திரசேகரன் போன்ற மூத்த ஒலிபரப்பாளர்களுடன் தமிழ் சேவையில் அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.
1983 ஆம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அப்போது முஸ்லிம் நிகழ்ச்சிகளை தயாரித்துக்கொண்டிருந்த மொஹிதீன் என்பவருடன் இணைந்து இவரும் தயாரிப்பாளரானார். அதனைத் தொடர்ந்து ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் தலைமைப்பதவி இவருக்கு கிடைத்தது. நோன்பு துறக்கும் போது ஓதும் இவரது துஆ நாட்டில் மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் பெற்ற ஒன்றாகும்.
அவர் எப்போதும் சுறுசுறுப்பு மிக்க துடிப்பான இளைஞராகவே இருந்தார். 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலாக செய்தி வாசிக்கும் அரிய வாய்ப்பொன்றை அவரே எனக்கு ஏற்படுத்தி தந்தார். அத்துடன் பல முஸ்லிம் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியையும் அவர் எனக்கு வழங்கியதை நினைத்துப் பார்க்கிறேன். அவரிடம் இருந்த ஒரு சிறந்த குணம் என்னவென்றால், எவ்வளவு கடுமையான கருத்து மோதல்கள் வந்த போதும் அடுத்த கணமே ஓடி வந்து கரங்களைப் பற்றிக்கொண்டு ஸலாம் கூறும் இனிய பண்பு கொண்டவர். அதிகம் வேடிக்கையாகப் பேசும் அவரது பண்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. என்னோடு தமிழ் நிகழ்ச்சிப்பிரிவில் ஒன்றாக பணியாற்றிய பீ. விக்னேஸ்வரன், எஸ்.விஸ்வநாதன், கமலா தம்பிராஜா, பாலசிங்கம் பிரபாகரன் போன்ற ஒளிபரப்பாளர்களுடன் மிகுந்த நட்புறவுடன் பழகியவர். முஸ்லிம் பிரிவில் எம்.கே.எம். யூனுஸ், மபாஹிர் மௌலானா ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியவர். அங்குள்ள பெரும்பான்மை சகோதரர்களின் பெரும் அன்பையும் பெற்றவர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஹபீல் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடாக ஆற்றிய பணிகள் குறித்து அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் நினைவு கூர்ந்தார். ” ஊடகத் துறையில் பழுத்த அனுபவம் மிக்க ரஷீத் எம். ஹபீல், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் தலைவராக கடமையாற்றி இலங்கை முஸ்லிம் ஊடகவியல் பரப்பில் முன்னோடிகளுள் ஒருவராகவும் திகழ்ந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் போரத்தின் உதவிப் பொருளாளர், பயிற்சிக் குழு பொறுப்பாளர், உப தலைவர் முதலான பொறுப்புக்களை வகித்து வந்ததுடன் அந்திம காலத்தில் போரத்தின் ஆலோசகராகவும் செயலாற்றி வந்தார்.
பலர் ஊடகத் துறையில் கால் பதிப்பதற்கும் மற்றும் பல ஊடகவியலாளர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த அவர், இளம் ஊடகவியலாளர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதில் கூடுதல் கரிசனை செலுத்தி வந்தார். இளம் ஊடகவியலாளர்களது காரியாலயத்திற்கு, வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.
தனது காந்தக் குரலால் நேயர்கள், பார்வையாளர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணி புரிந்த மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்களது இழப்பு இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது
அவரது ஊடகத் துறைப் பங்களிப்புக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 2011ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கி கெளரவித்தது. இவர் ஊடகத்துறைக்கு ஆற்றிய பணிகளுக்காக பல்வேறு சமூக நிறுவனங்களாலும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட கலாபூஷணம் விருது இவற்றுள் முதன்மையானதாகும்.
கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல், மாளிகாவத்தை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபை அங்கத்தவராகவும் இலங்கை கல்வி மாநாட்டின் உறுப்பினராகவும் இருந்து சமூகப் பணிகளிலும் பங்கெடுத்தார்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், பெரியோர்- சிறியோர் வேறுபாடின்றி எல்லோருடனும் அன்பாகவும் இனிமையாகவும் தோழமையுடனும் பழகக்கூடிய மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்களுடைய மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது’’ என்றார்.
இதேவேளை அரசியல் தலைவர்கள் பலரும் ரஷீத் எம். ஹபீலின் மறைவு குறித்து தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர். ‘‘கம்பீரமான குரல் வளம் வாய்க்கப் பெற்ற பன்முக ஆளுமையான ரஷீத் எம் ஹபீல், வானொலி மற்றும் காணொளி நேயர்களினதும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களினதும் உள்ளம் கவர்ந்தவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
‘‘எனது மறைந்த தாயார் அவரது குரலை விரும்பிக் கேட்பது வழக்கமாக இருந்தது. கடல் கடந்தும் தமிழ் பேசும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் ரஷீத் எம் ஹபீலின் நினைவுகள் கண்முன் நிழலாடுகின்றன. புன்னகை பூத்த முகமும், ஒளிவு மறைவற்ற பேச்சும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையும் நண்பர் ஹபீலிடம் காணப்பட்ட சிறப்பம்சங்களில் சிலவாகும்’’ என ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், ‘‘இப்தார் பிரார்த்தனை புகழ், ரஷீத் எம் ஹபீல் இறையடி சேர்ந்த செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்புத் துறையில் தனி ஆளுமைத் தடம் பதித்த மர்ஹும் ரஷீட் எம் ஹபீல், வாஞ்சையுடன் பழகும் ஒரு மானிட நேயன்.
புனித நோன்பு காலங்களில் அவரது குரலால் கவரப்பட்ட பல முஸ்லிம்கள், அன்னாரது இழப்பால் கவலையடைகின்றனர். தன்னிடமிருந்த திறமைகளை பிறருக்கும் பயிற்றுவித்து, பழக்கி பல ஊடகவியலாளர்களை அவர் வளர்த்திருக்கிறார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவுப் பொறுப்பாளராகப் பணியாற்றி அவர் செய்த சேவைகளுக்கு, முஸ்லிம் சமூகம் நன்றிக் கடன்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
ரஷீத் எம். ஹபீல் அவர்கள் விடிவெள்ளி பத்திரிகையுடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். வாராந்தம் தவறாது விடிவெள்ளியை வாங்கிப் படிக்கும் அவர், அதிலுள்ள ஆக்கங்கள் தொடர்பான தனது கருத்துக்களை உடனுக்குடன் எம்முடன் பகிர்ந்து கொள்வார். சில பிரபலங்கள் தொடர்பான நினைவு தினங்கள் வரும் போது அது பற்றிய ஆக்கங்களைத் தந்து பிரசுரிக்குமாறு வேண்டுவார். இறுதியாக 2020 ஆம் ஆண்டு கொரோனா முடக்கத்திற்கு முன்பாக ஏக்கலையிலுள்ள எமது அலுவலகத்திற்கு தேடி வந்த அவர், நீண்ட நேரம் எம்முடன் அளவளாவினார். நாகூர் ஈ.எம். ஹனீபாவின் பாடல்களால் மிகவும் கவரப்பட்ட அவர், அவருடன் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஹனீபா அவர்களைப் பற்றி இந்திய சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த நீண்ட ஆக்கம் ஒன்றைக் கொண்டு வந்து, அதனை விடிவெள்ளியில் தொடராகப் பிரசுரிக்குமாறு ஆவன செய்தார். அதற்கமைய சில வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்ட அந்த ஆக்கம் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இவ்வாறு ஊடகங் களுடனும் ஊடகவி லாளர் களுடன் மிக நெருக்க மான உறவைக் கொண்டி ருந்த அவர், இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி மூலமாக தமிழ் பேசும் நெஞ்சங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்தார். அன்னாரின் இழப்பு இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத் துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை தோற்று வித்துள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸை அருள்வானாக. – Vidivelli