பட்ஜட் சமர்ப்பிக்கப்படாவிடின் அரச நிறுவனங்களுக்கு நெருக்கடி

இடைக்கால பட்ஜட் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்கிறார் ரவி

0 748

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாமல்  இருப்பதால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். அதனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தையேனும் சமர்ப்பித்து நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெவிக்கையில்,

அடுத்த வருட அரச செலவுகளுக்கான நிதியை பாராளுமன்றமே ஒதுக்கவேண்டும். ஆனால் இந்த வருடம் நிறைவடைய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. அதில் 16 நாட்களே பாராளுமன்றம் இடம்பெறவிருக்கின்றது. ஆனால் இதுவரை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு அடுத்த வருடத்துக்கு நிதியை ஒதுக்கப்போகின்றோம்.

அத்துடன் எதிர்வரும் 16 நாட்களுக்குள் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் இயங்கமுடியாத பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதனால் எஞ்சியிருக்கும் சில தினங்களில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றையேனும் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக சபாநாயகர், ஜனாதிபதியிடம் இந்த ஆபத்தான நிலையை எடுத்துக்கூறி இடைக்காகல வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் இருக்கவேண்டிய நாங்கள் சதித்திட்டம் காரணமாக பெரும்பான்மை அதிகாரத்துடன் எதிர்க்கட்சிப் பகுதியில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரசதரப்பு என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்கின்றனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதியவேண்டிய விடயமாகும் என்றார்.
-Vidivelli

 

 

Leave A Reply

Your email address will not be published.