கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ராஜபக்ஷ ராஜதானி செல்லும் பாதையும் திசையும் தவறானவை. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் என்ற இறுமாப்பில் அதன் ஆட்சி நாட்டையும் வருங்காலச் சந்ததிகளையும் பிறநாட்டவர்களின் கடனாளிகளாக்கி, இப்போது வாழ்கின்ற மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளி, இனங்களைத் திட்டமிட்டுப் பிளவுபடுத்தி, பௌத்தத்தின் பாதையில் ஆள்கிறோம் என்று கூறிக்கொண்டு பிற மதங்களின் ஆசாரங்களையும் கலாசாரப் பண்புகளையும் இழிவுபடுத்தி, பிறநாடுகளின் கண்டனங்களுக்கும் இலங்கையை ஆளாக்கி ஓர் ஏதேச்சதிகார ஆட்சியாக ராஜபக்ச அரசு மாறியுள்ளதை இனியும் மறுப்பதிலோ மறைப்பதிலோ அர்த்தமில்லை.
ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்குண்டவர்கள்போல பெரும்பான்மை இனம் செயலிழந்து காணப்படுவது மயக்கத்தினாலா அல்லது யதார்த்த நிலைபற்றிய சிந்தனையே இல்லாமையாலா என்பது புரியவில்லை. ஆனால் அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்து யதார்த்தத்தையும் உணர்த்த சிறுபான்மை இனங்களிரண்டும் பாடுபடவேண்டிய ஒரு நிலை இப்போது உருவாகியுள்ளது. பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை நீண்ட நடைபவனியும் அதன் தனித்துவ வெற்றியும் பெரும்பான்மை மக்களை விழிப்படையச் செய்வதற்குத் தெளிக்கப்பட்ட நீர்த்துளி என்று கூறுதல் பொருந்தும்.
இந்தப் பவனியில் காணப்பட்ட புதுமை என்னவெனில் இரு சிறுபான்மை இனங்களும் ஒன்றாகக் கைகோர்த்துச் சென்றமை. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.
இரண்டு இனங்களும் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒரே தன்மையானவை. தொழில், கல்வி, நிலவுடமை, மதம், கலாச்சாரம், மொழி ஆகிய துறைகள் ஒவ்வொன்றிலும் இரு இனங்களும் பல இழப்புகளை அடைந்துள்ளன, இன்னும் அடையப்போகின்றன. பௌத்த பேராதிக்கவாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள இன்றைய அரசு, பேராதிக்கவாதிகளின் ஆதிக்கவெறியைத் தீர்க்க இரண்டு சிறுபான்மை இனங்களையும் பலிகொடுக்கத் தீர்மானித்து விட்டது. அதன் விளைவுகளையே கடந்த இரு ஆண்டுகளாக தமிழரும் முஸ்லிம்களும் தொடர்ந்து அனுபவிக்கின்றனர். இதிலிருந்து எவ்வாறு விடுதலையாகி மீண்டும் சுய கௌரவத்துடனும் பெரும்பான்மை இனத்துடன் சரிநிகர் சமானமாகவும் வாழலாம் என்பதே இருவருக்குமுள்ள ஒரே பிரச்சினை. அதனை தீர்ப்பதற்குள்ள ஒரே வழி இணைதலும் அணைத்தலுமே.
இங்கே பழைய குற்றங்களையும் குறைபாடுகளையும் மீட்டு வாசிப்பதில் அர்த்தமில்லை. அவை ஒரு நீண்ட பட்டியலாயினும் அவற்றை மறந்தேயாக வேண்டும். இது காலத்தின் தேவை. மொழியாலும் கலாசாரக் கலப்பாலும் அதற்கும் மேலாக இரத்தத்தாலும்கூட (இதனை சில முஸ்லிம்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை தாய்வழியாகப் புரட்டிப்பார்த்தால் இதன் உண்மை விளங்கும்) ஒன்றுபட்ட இரு இனங்கள் ஏன் அரசியல், உலகியல் பிரச்சினைகளைப் பொறுத்தவரை ஒரே நோக்கில் சமநிலையில் நின்று இயங்க முடியாது?
முஸ்லிம்களும் தமிழரும் எவ்வாறு சுமுகமாகவும் பாசத்துடனும் வாழ்கின்றனர் என்பதற்கு தமிழ் நாடு ஓர் எடுத்துக்காட்டு. முஸ்லிம்கள் கால் அணாக்கள், கால் அணா இல்லாமல் முழு அணா இருக்கமுடியாது என்று அறிஞர் அண்ணா ஒரு முறை பகிரங்கத்தில் தமிழரைப்பார்த்துக் கூறியதும், அதேபோன்று நாங்கள் திராவிட முஸ்லிம்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் உளந்திறந்து பேசுவதும் அந்தச் சுமுக மனப்பான்மையை வெளிக்காட்டவில்லையா?
காலங்காலமாக இரு இனங்களின் தலைமைத்துவங்களே இந்தப்பிரிவினையை வளர்த்துவந்தன. “நாங்கள் வாளுடன் வந்து அரண்மனையில் பங்கு கேட்கிறோம்;, நீங்கள் தராசுடனும் முழக்கோலுடனும் வந்து அங்காடியில் இடம் கேட்கிறீர்கள். நாங்கள் குடிசைகளில் வாழ்ந்துகொண்டு கல்விக்கூடங்களை மாளிகைகளாக்கியுள்ளோம், நீங்கள் மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு பாடசாலைகளை மாட்டுத் தொழுவங்களாக வைத்துள்ளீர்கள். ஆதலால் நாங்கள் எவ்வாறு உங்களுடன் சமநிலையில் நின்று பேசலாம்”, என்று கேட்டார் ஒரு தமிழ் தலைவர் அன்று. அதேபோன்று “படத்தில் இருக்கும் தமிழனையும் செத்த தமிழனையும் பிறவாத் தமிழனையும் மட்டும்தான் நம்பலாம், மற்ற எந்தத் தமிழனையும் நம்பக்கூடாது” என்று கூறினார் அன்றைய முஸ்லிம் தலைவரொருவர். இவ்வாறு பிரித்துப்பிரித்தே தலைவர்கள் தேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதிகளானார்கள்.
அவ்வாறான பிரிவினைச் சூழலிலே வளர்ந்துவந்தவர்களே இன்றைய தலைவர்களும். அதனாலேதான் மேடைகளிலே நின்று ஒற்றுமையாவோம் என்று பறையடித்துவிட்டு கீழே இறங்கியவுடன் அதனை மறந்து பழைய பிரிவினைப் பல்லவியையே இத்தலைவர்கள் பாடுகின்றனர். பழக்கதோஷம் அவ்வளவு இலகுவாக விட்டுப் போகுமா? ஆனால் இவர்களின் தலைமைக்குப் பின்னால் இன்றைய இளம் தலைமுறைகள் சென்றால் இரு சமூகங்களும் எதிர்காலத்தில் பௌத்த பேராதிக்கவாதிகளின் பொறிக்குள் சிக்கித்தவிப்பது திண்ணம். இதனை உணரவேண்டியவர்கள் வளரும் இளம் சந்ததியினரே. ஆகவேதான் முஸ்லிம் இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் – மலையகத்தமிழர் உட்பட – உள்ளத்தாலும் சிந்தனையாலும் இணைய வேண்டும். அவ்வாறு இணைந்து ஒருவரையொருவர் அரவணைக்கும்போது கிழக்கும் வடக்கும் சேர்ந்திருந்தாலென்ன பிரிந்திருந்தாலென்ன? அடுத்த நடைபவனி மலையகத்திலிருந்து புறப்பட வேண்டும்.
இந்த ஒற்றுமை நிச்சயம் பெரும்பான்மை இனத்தினரின் கவனத்தை ஈர்க்கத் தவறாது. இன்றைய ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளாகத் தமிழரையும் அடிப்படைவாதிகளாக முஸ்லிம்களையும் பெரும்பான்மை மக்களுக்குப் படம்பிடித்துக்காட்டி அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வந்த வீரர்களாகவும் தியாகிகளாகவும் தம்மை இனங்காட்டி பெரும்பான்மை இனத்தை ஒருவிதமான பொய் உறக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதே சமயம் பௌத்தபீடத்தின் ஒரு பகுதியினரைக்கொண்டு தாலாட்டி பௌத்த மக்களைத் தாலாட்டி உறங்கவிட்டு ஆட்சியாளர்கள் தமக்கு விரும்பியபடி ஆடுகின்றனர். எனவே பெரும்பான்மையினரின் உறக்கத்தைக் கலைக்க வேண்டியது சிறுபான்மை இளசுகளின் பொறுப்பு. சிறுபான்மை இனங்களின் உண்மையான நிலையையும் அவ்வினங்கள் நாட்டின் நலன் கருதியே தமது குறைகளைத் தீர்க்குமாறு களமிறங்கிப் போராடுகின்றனர் என்பதையும் எல்லா இனங்களும் சேர்ந்துதான் இலங்கையர் என்ற ஒரே குடையின்கீழ் நின்று இந்நாட்டை கட்டி எழுப்பலாம் என்பதையும் பெரும்பான்மையோர் விளங்கும் மொழியில் சிங்கள இளம் தலைமுறையினருக்குச் சிறுபான்மை இளவல்கள் எடுத்துரைக்க முடியுமாயின் அரசுக்கெதிரான ஒரு தேசிய எதிர்ப்பினை விரைவில் உருவாக்கலாம். அது கைகூடுமாயின் அடுத்த நடைபவனி மூவினங்களும் சேர்ந்த ஒரு பவனியாக நடைபெறுவது நிச்சயம். அதுவே ஆட்சியாளரையும் கதிகலங்க வைக்கும். அதற்கு அடித்தளமாகவே சிறுபான்மை இனங்களிரண்டும் முதலில் ஒற்றுமையாக வேண்டி இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் வந்த சமயம் நடைபெற்ற முஸ்லிம்களின் தகன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் பங்குகொள்ளாதது ஒரு பெருங் குறை.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமையால் சர்வதேச மட்டத்திலும் தாக்கங்களேற்பட இடமுண்டு. இந்த அரசு சர்வதேச அழுத்தங்களையெல்லாம் புலம்பெயர்ந்து வாழும் விரக்தியடைந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் செய்யும் சதியென்றே விமர்சிக்கின்றது. முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து தமது எதிர்ப்பினைக் காட்டும்போது அந்த விமர்சனம் அர்த்தமற்றதாகிவிடும். அரசாங்கம் திட்டமிட்டவாறு சிறுபான்மை இனங்களை ஒழித்துக்கட்ட எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சிறுபான்மை மக்கள் ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களாகவே அவை சர்வதேச அரங்குகளில் சித்தரிக்கப் படும். அந்த நிலையில் பெரும்பான்மை மக்களையும் அந்த ஆர்ப்பாட்டங்கள் ஈர்க்கு மானால் சர்வதேச அழுத்தங்கள் மேலும் வலுவடையும். இந்த நோக்கைக் கொண்டே ஆர்ப்பாட்டங்கள் அமைதல் வேண்டும்.
முஸ்லிம் இளவல்களே! தமிழ் இளசுகளுடன் இணையுங்கள். தமிழ் இளவல்களே! முஸ்லிம் இளசுகளை அரவணையுங்கள். அந்த இணைப்பிலும் அரவணைப்பிலும் இருந்து ஒரு புதிய தலைமைத்துவம் உருவாகி அந்தத் தலைமைத்துவம் பெரும்பான்மை இன வாலிபர்களையும் யுவதிகளையும் ஒருங்கிணைத்து எல்லா இனங்களையும் பேராதிக்கவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி நாட்டை நல்லதோர் பாதையில் வழிநடத்தட்டும்.- Vidivelli