இம்­ரானின் 24 மணி நேர விசிட்!

ஜனாஸா விவ­காரம் பற்றி பேசி­னாரா?

0 499

றிப்தி அலி

இலங்­கையின் தேசிய அர­சி­ய­லிலும் ஆசியப் பிராந்­தி­யத்­திலும் இந்த வாரம் அதிக கவ­ன­யீர்ப்பைப் பெற்ற விவ­கா­ரமே பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் இலங்கை விஜ­ய­மாகும். சீனா­வுடன் நெருங்­கிய உறவைக் கொண்­டுள்ள பாகிஸ்­தானின் தலைவர், அதே சீனா­வுடன் அண்­மைக்­கா­லங்­களில் நெருக்­கத்தை வளர்த்து வரும் இலங்­கைக்கு விஜயம் செய்­வ­தா­னது இலங்­கை­யி­னதும் பாகிஸ்­தா­னி­னதும் அயல் நாடான இந்­தி­யாவின் கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது.

இம்ரான் கான் இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான வர்த்­தக உற­வு­களை முன்­னேற்­று­வதை இலக்­காகக் கொண்டே இந்த விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த போதிலும் இலங்­கையில் வாழு­கின்ற முஸ்­லிம்கள் மத்­தியில் அவ­ரது விஜயம் வேறொரு நோக்­கத்தில் எதிர்­பார்ப்­பு­களைத் தோற்­று­வித்­தி­ருந்­தது.

இலங்கை வாழ் முஸ்­லிம்கள் இன்­றைய கால­கட்­டத்தில் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை பல­வந்­த­மாக தனகம் செய்­வது இதில் முதன்­மை­யா­ன­தாகும். இம்ரான் கானின் விஜ­யத்தின் ஊடாக இலங்கை வாழ் முஸ்­லிம்கள் தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள ஜனா­ஸாக்­களை எரிக்கும் விவ­கா­ரத்­திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் மேலோங்­கி­யி­ருந்­தது.

இதே காலப்­ப­கு­தியில் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கையின் மனித உரிமை நிலை­வ­ரங்கள் தொடர்­பிலும் குறிப்­பாக ஜனா­ஸாக்­களை எரிக்கும் தீர்­மா­னத்­திற்கு எதி­ரா­கவும் பிரே­ரணை ஒன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலை­யி­லேயே ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பின் உறுப்பு நாடாக செயற்­ப­டு­கின்ற, தெற்­கா­சிய பிராந்­தி­யத்தின் வலு­வான ஒரு முஸ்லிம் நாடா­க­வுள்ள பாகிஸ்­தானின் பிர­தமர் இம்­ரான்­கானின் இலங்­கைக்­கான விஜயம் முக்­கி­யத்­து­வ­மு­டை­ய­தாக நோக்­கப்­ப­டு­கி­றது.

கொரோனா வைரஸ் பர­வ­லிற்கு பின்னர் உலகத் தலைவர் ஒருவர் இலங்­கைக்கு மேற்­கொள்ளும் முத­லா­வது விஜயம் என்­பதால் இம்ரான் கானின் விஜயம் கொவிட் 19 சுகா­தார பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு அமைய பலத்த கட்­டுப்­பா­டு­க­ளுடன் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. இந் நிகழ்­வு­களை அறிக்­கை­யிட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் கூட பி.சி.ஆர் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்ட பின்­னரே அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

அதே­நேரம் சில சக்­திகள் இந்த விஜ­யத்தை தவ­றான கண்­கொண்டு நோக்­கின. குறிப்­பாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சில­ரது பங்­கேற்­புடன் கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக இம்­ரானின் வரு­கையை எதிர்த்து ஆர்ப்­பாட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. அதே­போன்று ஏலவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இம்ரான் கானின் பாரா­ளு­மன்ற உரையும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்­யப்­பட்­டது.
முன்னர் மூன்று நாட்­க­ளுக்கு என திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இம்ரான் கானின் இலங்­கை­கான விஜயம் பின்னர் இரண்டு நாட்­க­ளாக சுருக்­கப்­பட்­டது. எனினும் அவர் மொத்­த­மாக 24 மணி நேரம் மாத்­தி­ரமே இலங்­கையில் தங்­கி­யி­ருந்தார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தினை பி.ப 4.05 மணி­ய­ளவில் வந்­த­டைந்த இம்ரான் கானை, பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விமான நிலை­யத்தில் வர­வேற்றார்.
அத்­துடன் 19 துப்­பாக்கி வேட்­டுகள் முழங்­கப்­பட்டு, இரா­ணுவ மரி­யாதை அணி­வ­குப்­புடன் செங்­கம்­பள வர­வேற்பும் அளிக்­கப்­பட்­டது.

பிர­தமர் இம்ரான் கானுடன் பாகிஸ்தான் வெளி விவ­கார அமைச்சர், வர்த்­தக அமைச்சர் உட்­பட தொழி­ல­தி­பர்கள் உள்­ளிட்ட தூதுக்­கு­ழு­வொன்றும் இலங்­கைக்கு வந்­தது.

இந்த விஜ­யத்தின் முதற்­கட்­ட­மாக பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கும் இம்ரான் கானிற்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர சந்­திப்­பொன்று அன்று மாலை அலரி மாளி­கையில் இடம்­பெற்­றது.

இதன்­போது, பாது­காப்பு கட­னாக 50 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ரி­னையும், விளை­யாட்டுத் துறையின் அபி­வி­ருத்­திக்­காக 52 மில்­லியன் பாகிஸ்தான் ரூபா­வினை வழங்­க­வுள்­ள­தாக இதன்­போது இம்ரான் கான் அறி­வித்தார். மேலும் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் ஐந்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. சுற்­றுலா ஒத்­து­ழைப்பு, முத­லீட்டு சபை­க­ளுக்கு இடை­யி­லான ஒப்­பந்தம், இலங்கை தொழில்­துறை தொழில்­நுட்ப நிறு­வனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் கராச்சி பல்­க­லைக்­க­ழகம் இடை­யி­லான ஒப்­பந்தம், கொழும்பு தொழில்­துறை தொழில்­நுட்ப நிறு­வனம் மற்றும் இஸ்­லா­மா­பாத்தின் COMSATS பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பு, கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொரு­ளா­தார கல்­லூரி ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஆகி­ய­னவே இவ்­வாறு கைச்­சாத்­தி­டப்­பட்­டன.

மறுநாள் காலை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கும் பாகிஸ்தான் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. முதலில் இரு நாட்டு தலை­வர்­களும் தனி­யாக சிநே­க­பூர்வ கலந்­து­ரை­ய­ட­லொன்றை மேற்­கொண்­ட­தனைத் தொடர்ந்தே இரா­ஜ­தந்­திர மட்­டத்­தி­லான சந்­திப்­பினை மேற்­கொண்­டனர்.

இதன் பின்னர் பாகிஸ்தான் பிர­தமர் ஷங்க்­ரிலா ஹோட்­டலில் இடம்­பெற்ற வர்த்­தக மாநாட்டில் சிறப்­பு­ரை­யாற்­றினார்.

இலங்கை விஜ­யத்­தின்­போது சீனாவைப் பற்றி இம்ரான் கான் அதிகம் புகழ்ந்து பேசி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அத்­துடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோரை பாகிஸ்­தா­னுக்கு வரு­மாறும் இம்ரான் கான் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அழைப்பு விடுத்தார்.

அத்­துடன் கடந்த காலங்­களைப் போன்றே எதிர்­கா­லத்­திலும் இலங்­கைக்கு பாகிஸ்தான் ஆத­ரவு வழங்க ஒரு­போதும் தயங்­க­மாட்­டாது என்றும் பிர­தமர் இம்ரான் கான் இந்த விஜ­யத்தில் குறிப்­பிட்டார்.

பாகிஸ்தான் பெளத்த மத புரா­தன சின்­னங்­களைப் பாது­காப்­ப­தற்கு வழங்­கி­யுள்ள முக்­கி­யத்­துவம் குறித்து தனது உரை­களில் இம்ரான் கான் அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்து வலி­யு­றுத்­தினார். இலங்கை மக்­க­ளுக்கு பௌத்த மத சுற்­று­லா­வுக்­கான முக்­கிய தல­மாக பாகிஸ்தான் உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், பாகிஸ்­தானின் வள­மான பெளத்த பாரம்­ப­ரி­யத்தை பற்­றியும் அரச தலை­வர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தினார்.

பிராந்­திய சூழலில், அமைதி, அபி­வி­ருத்தி மற்றும் நாடு­க­ளுக்கு இடையே உள்ள தொடர்­புகள் பற்­றிய தனது பார்வை குறித்து அவர் தெளி­வு­ப­டுத்­தி­ய­துடன், சார்க் அமைப்பின் மூலம் பிராந்­திய ஒத்­து­ழைப்பின் முக்­கி­யத்­து­வத்­தையும், சி.பி.இ.சி (CPEC) மூலம் பிராந்­திய அபி­வி­ருத்­திக்­கான வாய்ப்­புக்­க­ளையும் வலி­யு­றுத்­தினார். சீனாவின் பட்­டுப்­பா­தைத்­திட்­டத்தில் பாகிஸ்­தானும் இலங்­கையும் முக்­கிய கேந்­தி­ரஸ்­தா­னங்கள் என்­ப­தையும் அவர் தனது உரையில் நினை­வு­ப­டுத்­தினார்.

தனது விஜ­யத்தின் போது தான் கிரிக்கட் வீர­ராக இருந்த காலத்தில் இலங்­கை­யுடன் கொண்­டி­ருந்த நெருக்­க­மான உற­வு­க­ளையும் அவர் நினை­வு­கூர்ந்தார். இந்த விஜ­யத்தின் போது சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­த­னவும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நாமல் ராஜ­பக்­சவும் இணைந்து வழங்­கிய விருந்­து­ப­சா­ரத்­திலும் அவர் பங்­கேற்றார். இந் நிகழ்­வுக்கு இலங்­கையின் முன்­னணி விளை­யாட்டு வீரர்­களும் அழைக்­கப்­பட்­டி­ருந்தனர். இதன்­போது இலங்­கையில் அமைக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள உயர் தர விளை­யாட்டு கட்­டிடத் தொகுதி தொடர்­பான திட்ட வரைபும் இம்ரான் கானிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இக் கட்­டிடம் அமைக்­கப்­பட்­ட ­பி­றகு இதற்கு இம்­ரானின் கானின் பெயர் சூட்­டப்­ப­ட­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. இந் நிகழ்வில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்­ஜுன ரண­துங்­கவும் கலந்து கொண்டார். தனது உரையில் அர்­ஜு­னவின் பெயரைக் குறிப்­பிட்டுக் கூறிய இம்ரான் கான், தனது அர­சியல் வாழ்க்­கையில் அர்­ஜு­ன­வுக்கும் படிப்­பி­னைகள் உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

இதே­வேளை, இலங்கை – பாகிஸ்தான் பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­ட­துடன் அதன் தலை­வ­ராக நிமல் சிறி­பால டி சில்­வாவும் செய­லா­ள­ராக றிசாத் பதி­யு­தீனும், பிரதித் தலை­வ­ராக ரவூப் ஹக்­கீமும் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

இத­னி­டையே பிர­தமர் இம்ரான் கான் இந்த விஜ­யத்தின் போது இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள கட்­டாய தகனம் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யா­டுவார் என பாரி­ய­ளவில் எதிர்­பார்க்­கப்­பட்­டது. இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சிகைள் தொடர்பில் பிர­தமர் இம்ரான் கானுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தறு­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாத் பதி­யுதீன் ஆகியோர் தனித் தனி­யாக இலங்­கைக்­கான பாகிஸ்­தானின் பிரதி உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ­ம­டினை சந்­தித்து அவ­ரது வரு­கைக்கு முன்­ன­ரா­கவே கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், 15 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட்­டாக கையெ­ழுத்­திட்டு இம்ரான் கானை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்தித் தரு­மாறு தூத­ர­கத்­திடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். எனினும் அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில் “பாது­காப்பு கார­ணங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இம்ரான் கானிற்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு ரத்துச் செய்­யப்­பட்­டது” என ஊடக அமைச்சர் ஹெக­லிய ரம்­புக்­வெல கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ரு­வ­ரினால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போது தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னி­டையே, இம்ரான் கான் கொழும்பை வந்­த­டை­வ­தற்கு முன்னர் அவர் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லிற்கு அரு­கி­லுள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­தினை அண்­மித்த காலி முகத்­தி­டலில் ஆர்ப்­பாட்­ட­மொன்று இடம்­பெற்­றது.

கட்­டாய தக­னத்­திற்கு எதி­ரான இந்த ஆர்ப்­பாட்­டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எனப் பலர் கலந்­து­கொண்­டனர். இதன்­போது, ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், “இம்ரான் கானு­ட­னான முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் சந்­திப்­பினை அர­சாங்கம் ரத்துச் செய்­தமை கோழைத்­த­ன­மான செயற்­பாடு” என்றார்.

இவ்­வா­றான நிலையில், கடந்த புதன்­கி­ழமை (24) காலை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இம்ரான் கான் சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டொன்றைச் செய்­துள்­ள­தாக கொழும்­பி­லுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானி­க­ரா­லயம் அறி­வித்­தது. இதற்­க­மைய சங்­க­ரில்லா ஹோட்­டலில் பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் இடம்­பெற்ற இந்ந சந்­திப்பு சுமார் 30 நிமி­டங்கள் நீடித்­தது.

“கொரோனா வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­ப­டு­வது தொடர்பில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருடன் பேச்சு நடத்­தி­யுள்ளேன். விரைவில் சாத­க­மான பதில் கிடைக்கும்” என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான், இதன்­போது முஸ்லிம் எம்.பிக்­க­ளிடம் தெரி­வித்தார்.

இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் உலக முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் இச் சந்­திப்பில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் சிறு­பான்­மை­யாக வாழு­கின்ற முஸ்­லிம்கள் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரை தூண்டும் வித­மாக நடந்­து­கொள்­ளாது அவர்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழு­மாறு பாகிஸ்தான் பிர­தமர் இதன்­போது முஸ்லிம் எம்.பி.க்களிடம் அறி­வுரை வழங்­கி­யுள்ளார்.

இந்த சந்­திப்பில் அமைச்சர் அலி சப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் றிசாத் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசல் காசிம், ஏ.எச்.எம். ஹலீம், நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ், அலி சப்ரி ரஹீம், எம்.எம்.முஷாரப், இஷாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

ஆளும் கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எல்.எம். அதா­உல்லா, காதர் மஸ்தான், மர்ஜான் பளீல் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரைக்கார் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.

இத­னி­டையே இந்த சந்­திப்பு இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வினை பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் சந்­தித்து பேச்சு நடத்­தினார். இந்த சந்­திப்பில் ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கபீர் காசீம் ஆகியோர் கலந்­து­கொண்­ட­மை­யினால் முஸ்லிம் எம்.பி.க்களு­ட­னான சந்­திப்பில் அவர்கள் இரு­வரும் கலந்­து­கொள்­ள­வில்லை.

இதே­வேளை, கொரோனா வைர­ஸினால் உயி­ரி­ழக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தகனம் செய்­வ­றத்கு ஐக்­கிய மக்கள் சக்தி தொடர்ந்து எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச இந்த சந்­திப்பில் இம்ரான் கானிடம் தெரி­வித்­துள்ளார்.

கட்­டாய ஜனாஸா எரிப்பு தொடர்பில் அர­சாங்­கத்­தினால் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்டு இலங்கை முஸ்­லிம்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான நிலையில் இம்ரான் கானின் விஜ­யத்தின் தொடர்ந்து இந்த விட­யத்தில் இலங்கை அர­சாங்கம், சாத­க­மான தீர்­வொன்­றினை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்கும் என்று முழு உல­கமும் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இம்ரான் கானும் அந்த உறு­தி­மொ­ழியை அளித்துள்ளார். இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.