அதிகரிக்கும் நுண் கடன் நிறுவனங்களின் ஊடுருவல்

0 1,315

போருக்குப் பின்னரான இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சினையே நுண்கடன் தொல்லையாகும்.

‘மைக்ரோ பினான்ஸ்’ என்றழைக்கப்படும் சில நிதி நிறுவனங்கள் நுண் கடனை வழங்குகின்றன. நுண் கடன் நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயற்படுகின்றன. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையே இவை பிரதான இலக்காகக் கொண்டுள்ளன.

இந் நுண் கடன் முறை என்பது இலங்கையில் புதிதாக செயல்முறையில் காணப்படும் திட்டமாக இயங்குகின்றது. கூடுதலான மக்கள் இந்த முறையில் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு முன் வருகின்றனர். அதிகளவிலான வட்டியை இந்த நிறுவனங்கள் விதிக்கின்ற போதிலும் அங்கு கடன்களை பெற்றுகொள்வதற்கு மக்கள் முண்டியடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. இதற்குக் காரணம் மக்கள் மத்தியில் நிலவும் வறுமையே ஆகும். இந்த வறுமையை மூலதனமாகக் கொண்டே நுண்கடன் நிறுவனங்கள் தமது கைவரிசையைக் காட்டுகின்றன.

நுண் கடன் நிறுவனங்களின் முக்கிய அம்சங்களாக, அதிகளவிலான வட்டி, குறைந்தளவிலான அடிப்படையில் கடன்களை வழங்குவது,பெண்களை இலக்காகக் கொள்வது, அதிகாரிகள் வீடுகளுக்கே வருவது,  நுண் கடன்களை வீட்டிற்கே வந்து வழங்குவது, கடன்களை மீள அறவிடுவதற்கும் வீட்டிற்கே வருவது, வாராந்த முறையில் கடன்கள் மற்றும் வட்டியைப் பெற்றுக்கொள்வது, மக்கள் கேட்ட உடனேயே கடன்களை வழங்குவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நுண் கடன் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து கடன்களை வழங்குகின்றனர். இவர்களின் பிரதான இலக்கு வீடுகளில் இருக்கும் பெண்களே. வீடுகளில் அதிக நேரம் இருப்பது பெண்கள் என்பதனால் பெண்களை மையப்படுத்தி கடன்களை வழங்குகின்றனர். குறிப்பாக கணவனை இழந்த, அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களை அதாவது பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை இலக்கு வைத்தே கடன் வழங்குகின்றனர்.

பெண்கள் தலைமை தாங்கும் வீடுகளுக்கு ஆண்களான கடன் அறிவிடும் அதிகாரிகள் தினசரி வருவதனால் அப் பெண்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. கடன் தேவை இருக்கும் நபர்களுக்கு மாத்திரமன்றி தேவையில்லாத நபர்களுக்கும் கடன்களை வழங்குகின்றார்கள். தேவையற்ற நபர்களுக்கும் தேவைகளை உருவாக்கி கடன்களை வழங்குவது இந்த நுண் கடன் நிறுவனங்களின் திட்டமிட்ட செயற்பாடாக உள்ளது.

இந்த நுண்கடன் நிறுவனங்களின் ஊடுருவலுக்குப் பிற்பாடு நாட்டின் தற்கொலை வீதமும் அதிகரித்துள்ளமை ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும். அதிக வட்டி காரணமாக கடனை மீளச் செலுத்த வழியின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கி அழுத்தங்களுக்குட்பட்டு இறுதியில் தற்கொலையையே இறுதித் தீர்வாகத் தேர்ந்தெடுக்கின்ற துரதிஷ்ட நிலை நீடிக்கின்றது.

அதிகளவில் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களே இந்த நுண்கடன் தொல்லைக்கு முகங்கொடுத்தாலும் தற்போது இந்த நிறுவனங்கள் முஸ்லிம் கிராமங்களினுள்ளும் ஊடுருவியுள்ளன. இஸ்லாம் தடை செய்த வட்டியை இந்த நிறுவங்கள் முஸ்லிம்கள் மத்தியில் ஊக்குவிக்கின்றன. இது தொடர்பில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகங்களும் சம்மேளனங்களும் பொது நிறுவனங்களும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.