றிப்தி அலி
இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இம்ரான் கானுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட அமைப்புகள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்தும் எழுத்துமூலமும் இவ் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை என மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
” இலங்கை முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான நிலைமைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இம்ரான் கான் இங்கு வருகை தரவுள்ளார். உலக முஸ்லிம்களின் மதிப்பை வென்ற தலைவர் என்ற வகையில் அவரது வருகை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கிரிக்கட் மூலமாகவும் பாகிஸ்தானுடனான நெருங்கிய உறவுகள் காரணமாகவும் இலங்கை முஸ்லிம்கள் இம்ரான் கானை விரும்புகின்றனர். அவரது வருகையானது தமது நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என இலங்கை முஸ்லிம்கள் நம்புகின்றனர். அந்த வகையில் அவரைச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக்கூற சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருக்கின்றனர்’’ என தாம் தூதரக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியதாக முஸ்லிம் அமைப்பொன்றின் முக்கியஸ்தர் தெரிவித்தார். அவ்வாறு தீர்வொன்றைப் பெற்றுத்தர முடியாதவிடத்து இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தருவது பொருத்தமானதல்ல என்ற செய்தியையும் தாம் தூதரக உயரதிகாரிகளிடம் விளக்கிக் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். – Vidivelli