அமைப்புகளை தடை செய்யும் விவகாரம் : அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னரே பட்டியல் தயாராகும்

அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்

0 1,098

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அடிப்படைவாதமே இயங்கியுள்ளது,  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபட்ட அமைப்புகளும், நபர்களும் இன்னமும் இரகசியமாக நாட்டிற்குள் இயங்கிக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்பித்த பின்னர் இலங்கை பல முஸ்லிம் அமைப்புகளை தடைசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘நாட்டில் மத்ரஸா பாடசாலைகள் அடிப்படைவாதத்தை போதிக்கின்றன, அதனால் இன்னும் சில தினங்களில் பெரும் எண்ணிக்கையிலான மத்ரஸா பாடசாலைகளை தடை செய்யவுள்ளோம்’ என சிவில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெறும்பொருட்டு தொடர்பு கொண்டபோதே அமைச்சர்  இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தாக்குதல் இலங்கையின் அடுத்தகட்ட அடிப்படைவாத எழுச்சியின் ஆரம்பம் என்றே நாம் கருதுகிறோம். இந்த தாக்குதலின் பின்னணியில் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள், மௌலவிமார் உள்ளனர். இந்த நாட்டிற்கு அவசியமற்ற பலர் கடந்த காலங்களில் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலின் பின்னர் பலர் தலைமறைவாகியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல கடந்த காலங்களில்  பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1600 வாள்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த வாள்கள் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் ஆராய்ந்தோம். இவைகள் வன்முறைகளுக்கு பயன்படுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்களின்படி எமக்கு அறிய முடிந்துள்ளது. இவ்வாறான பாரிய தாக்குதல் நடக்கும் என்பது தெரிந்து அதன் பின்னர் வரும் கலவரங்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் தான் இவ்வாறான திட்டங்களை வகுத்துள்ளனர். பல மௌலவிமார் இதற்கு பின்னால் இருந்து செயற்பட்டுள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட 32 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக கொலை மற்றும் கொலைக்கான தூண்டுதல் சதித்திட்ட குற்றச்சாட்டில் வழக்கு தொடர முடியும். இவர்கள் நேரடியாக தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள். மேலும் 250 இற்கு அதிகமான நபர்கள் மறைமுக தொடர்புபட்டவர்கள் உள்ளனர். சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அடிப்படைவாத கொள்கையில் உள்ளவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர், அவர்களின் கொள்கையில் உள்ளவர்களே இலங்கையில் இயங்கிக் கொண்டுள்ளனர். இன்னமும் இவர்களின் செயற்பாடுகள் நாட்டில் நடக்கின்றன. இதனை தடுக்கும் விதமாக நாம் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை முழுமையாக அழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். அடிப்படைவாத அமைப்புகள் பல நாட்டில் இயங்கிக்கொண்டுள்ளன, அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இப்போது வரையில் அதற்கான தேடுதல்களை  நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

இதேவேளை குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “எமது நாட்டில் பிள்ளையொன்று பிறந்தால் அப்பிள்ளைக்கு கல்வி போதிக்கும் போது 18 வயது வரை அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு அமைவாகவே படிப்பிக்க வேண்டும். தாம் நினைத்தவாறு பாடசாலைகளை ஆரம்பித்து நினைத்தவாறு பாடங்களைக் கற்பிக்க முடியாது. அவ்வாறான பாடசாலைகள் மீது நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடை செய்யும் விடயம் எனக்கு தரப்பட்டுள்ளது. மத்ரஸா பாடசாலைகள் அடிப்படைவாதத்தை போதிக்கின்றன. அதனால் மத்ரஸா பாடசாலைகளுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியும். இது லேசான காரியமல்ல. கடினமான பணியாகும். ஜனாதிபதி இந்த பணியினை எனக்கு வழங்கியுள்ளார். கடினமான பணியென்றாலும் நான் இதனைச் செய்து முடிப்பேன்’ என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.