உரிமைகளுக்காக ஒன்றுபட்டுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்களின் செய்தி

0 590

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கண்டித்தும் அவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் தமிழ் சிவில் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை‘ எனும் தலைப்பிலான பேரணி தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்துள்ளதுடன்  பெரும்பான்மை சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் சில செய்திகளையும் சொல்லியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அநியாயமாக கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலை, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்டமைக்காக கைதான 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள விவகாரம், நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை அபகரித்தல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் பலத்த அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்லட் வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கை இதன் பாரதூரத்தை உணர்த்துகிறது.

எனினும் அரசாங்கம் இதுவிடயத்தில் சிறுபான்மை சமூகங்களின் கோரிக்கைகளையும் சர்வதேச சமூகத்தின் கரிசனைகளையும் அலட்சியப்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்கிறது. நேற்றைய தினம் ஜனாதிபதி ஆற்றிய சுதந்திர தின உரையிலும் இதே தொனியே வெளிப்பட்டது.

தமது உரிமைகளுக்காக குரலெழுப்பும் மக்களை தேசத் துரோகிகளாக சித்திரிப்பது கவலைக்குரியதாகும். அரசாங்கம் சகல சமூகங்களினதும் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து நடந்து கொள்ளுமாயின் எவரும் சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படாது. துரதிஷ்டவசமாக உள்நாட்டில் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வாயில்களை அரசாங்கம் மூடிவிட்டது. முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பது முஸ்லிம்களை விரக்தியின் விளிம்புக்கே இட்டுச் சென்றுள்ளது.
தமக்காக குரல்கொடுக்கவென தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட 20 ஆம் திருத்தத்தின் பின்னர் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து மெளனித்துப் போயுள்ள நிலையில்தான் முஸ்லிம்கள் இன்று தமிழ் அரசியல்வாதிகளுடன் இணைந்து தமது பிரச்சினைகளைப் பேசத் தலைப்பட்டுள்ளனர். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் முஸ்லிம்கள் பெருமெடுப்பில் பங்கேற்றமைக்கு இதுவே காரணமாகும்.

அன்று சுதந்திரத்திற்காகப் போராடிய டி.பி.ஜாயா உள்ளிட்ட தலைவர்கள் சர்வதேசத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே போராடினர். உள்நாட்டில் தமக்கு பிரச்சினைகள் இருப்பினும் சுதந்திரத்திற்காக அவற்றைக்கூட விட்டுக் கொடுக்கத் தயார் என ஜாயா ஆற்றிய உரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான முஸ்லிம் தலைவர்களின் போராட்ட வரலாறுகளை மறந்து, புறந்தள்ளி இன்று முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளிலும் உணர்வுகளிலும் விளையாடுகின்ற அரசாங்கத்தின் செயற்பாடு மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும். இது ஏற்படுத்தப் போகின்ற பின்விளைவுகளை நினைக்கும்போது அச்சமே மேலெழுகிறது.

எனவேதான் அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற போர்வையில் சிறுபான்மை சமூகங்களை ஒதுக்கித்தள்ளுகின்ற தனது கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.