ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத்திற்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் இருந்த முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவை கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இது குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று பிற்பகல் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அத்மிரால் ரவீந்திரவை விடுவித்த நீதிவான் சி.ஐ.டி. அறிவிக்கும் எந்த தினத்திலும் அங்கு சென்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன் விசாரணைகளுக்கோ, விசாரணை அதிகாரிகளுக்கோ எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிவான் தனது பதவியை பயன்படுத்தி கடற்படை வீரர்களுக்கோ, இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான கலகம லக்சிரிக்கோ எவ்வித இடையூறுகளையும் செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இந்த நிபந்தனைகளை மீறினால் பிணையை ரத்து செய்ய வேண்டி வரும் எனவும் நீதிவான் எச்சரித்தார்.
அத்துடன் பிரதான சாட்சியாளரான கலகம லக்சிறி மீது தாக்கி அவரை கடத்த முயன்றமை தொடர்பில் கோட்டை பொலிஸார் முறையான விசாரணைகளை செய்யாது, சந்தேக நபர்களை காக்கும் வண்ணம் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெளிவாவதாக கூறிய நீதிவான் கோட்டை பொலிஸாரிடமிருந்து அந்த விசாரணைகளை அப்புறப்படுத்தி, வேறு பொருத்தமான அதிகாரி ஒருவரிடம் அதனை ஒப்படைக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக உத்தரவினை அனுப்பினார்.
மேர்படி சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.ஐ.டி. சார்பில் அதன் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகினர். சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவும் மன்றில் ஆஜராகினர்.
சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையொன்றினை தாக்கல் செய்தனர். அதில் ரவீந்திர விஜே குணரத்னவிடம் சிறையில் வாக்கு மூலம் பதிவு செய்ததாகவும், அதன்போது கடற்படையில் இரு லெப்டினன் கொமாண்டர்களுக்கு மட்டும் தான் விஷேட சலுகையளிக்கவில்லை எனவும் லக்சிரி எனும் லெப்டினன் கொமாண்டருடன் தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை எனவும், லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியை தனது கட்டளை பிரகாரம் கடற்படை தலைமையகத்தில் தங்க வைத்ததாக கூற்பபடுவதிலும் எந்த உண்மையுல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டதாக சி.ஐ.டி. மன்றுக்கு தெரிவித்தது. அத்துடன் இவ்விரு லெப்டினன் கொமாண்டர்களையும் தனிப்பட்ட ரீதியில் தனக்கு தெரியாது எனவும் அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்ததாக சி.ஐ.டி. மன்றுக்கு தெரிவித்தது.
சிறைச்சாலைக்கு நிஷாந்த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் சென்று வாக்கு மூலம் பெறும்போது, சந்தேக நபரான ரவீந்திர எந்த பாதிப்புக்களும் இன்றி பதிலளித்ததாக சி.ஐ.டி. சுட்டிக்காட்டியது.
அத்துடன் ரவீந்திரவின் செயலாளராக கடமையாற்றிய உதய தேசப்பிரிய ஹெட்டி ஆரச்சி எனும் ரியர் அத்மிரலிடம் சி.ஐ.டி. வாக்கு மூலம் பதிவு செய்ததாகவும், அவர் அத்மிராலின் உத்தரவின் பிரகாரம் தான் 5 இலட்சம் ரூபாவை லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சிக்கு கையளித்ததாக கூறும் விடயத்தை மறுத்ததாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது.
இந் நிலையில் இவ்வழக்கின் பிரதான சாட்சியாளரான லக்சிரி என்பவரை தாக்கியமை தொடர்பில் கோட்டை பொலிஸாரின் விசாரணைகளில் ரவீந்திரவை சந்தேக நபராக பெயரிடும் அளவுக்கு ஏதும் காரணிகள் உள்ளதா என நீதிவான் கோட்டை பொலிசாரிடம் வினவினார்.
அந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கவே தான் கடந்த வாரம் சந்தேக நபரான ரவீந்திரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாகவும் எனினும் கோட்டை பொலிசார் அந்த விசாரணைகளை சரியாக முன்னெடுக்கவில்லை என்பது தெளிவாவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிவான், கோட்டை பொலிசாரிடமிருந்து அந்த விசாரணைகளை வேறு பொருத்தமான ஒருவரிடம் ஒப்படைக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவு நீதிமன்ற பதிவாளர் ஊடாக விடுக்கப்பட்டது.
முன்னதாக நேற்று வழக்கு விசாரணைகள் பிற்பகல் 1.30 மணியின் பின்னரேயே இடம்பெற்ற நிலையில், சந்தேக நபரான அத்மிரால் ரவீந்திர காலை வேளையிலேயே நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இந் நிலையில் அவர் வழக்கு விசாரணைக்கு எடுக்கும்வரை சுமார் 4 மணி நேரம் சிறைச்சாலை பஸ் வண்டியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli