25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா

சாய்ந்தமருதில் நடந்தது என்ன?

0 1,133

அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற விடயமே பெரும் அச்சம் நிறைந்ததொரு கொடூர துன்புறுத்தலாக நோக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக தெரிவித்து, இதுவரை 130 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றுவரை நாளாந்தம் இக்கொடூரம் அரங்கேறியே வருகிறது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் சாதகமான முடிவைத் தரவில்லை. கபன் துணியில் தொடங்கிய போராட்டங்களும் ஓய்வுநிலைக்கு வந்துள்ளன. இறுதியாக நிபுணர் குழுவின் அறிக்கையை மலைபோல் நம்பியிருந்தோம். ஆனால் அந்த நிபுணர் குழுவையே செல்லுபடியற்ற குழுவென்று அரசாங்கம் அறிவித்து விட்டது. இதுவே புதுவருடப் பிறப்பின் தலைப்புச் செய்தியாக அமைந்ததுடன் முஸ்லிம் விரோத கடும்போக்காளர்களுக்கான புதுவருடப் பரிசாகவும் அமைந்தது.

சம்மாந்துறை நபரின் ஜனாஸா விவகாரம்

இந்நிலையில்தான் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி தொடக்கம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்ற சம்மாந்துறையை சேர்ந்த ஒரு முதியவரின் ஜனாஸாவை தகனம் செய்வதற்காக இம்மாதம் 5 ஆம் திகதியன்று சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க முற்பட்டிருந்தனர்.

அன்றைய தினம் இந்த நடவடிக்கைக்கு ஏதுவாக அமைந்த காரணி யாதெனில், 80 வயது நிரம்பிய குறித்த நபர் நோய்வாய்ப்பட்டு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2020.12.10 ஆம் திகதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து, அன்றைய தினமே கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில், அவர் மரணமடைந்திருந்தார். அதனைத் தொடர்ந்து மீளவும் அஷ்ரப் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, பிரேத அறையில் அவரது ஜனாஸா வைக்கப்பட்டது.

இதுவே கிழக்கு மாகாணத்தில் பதிவான முதலாவது கொவிட் தொற்று மரணம் என சுகாதாரத்துறையினரால் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது ஜனாஸாவை, நல்லடக்கத்திற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனது தந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து, மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மகள்- அதுவும் அந்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பெண் வைத்தியர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதனை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றமானது, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு பாரப்படுத்தியிருந்த நிலையில், அந்த வழக்கு கடந்த 2021.01.04 ஆம் திகதி திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மரணித்தவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் கண்டறிவதற்காக மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி, தமது வாதங்களை முன்வைத்தனர். ஆனால் அத்தகைய விசாரணைக்கான அவசியம் எமக்கு எழவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் அந்த உடலத்தை தகனம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் இது தொடர்பில் எவ்வித கட்டளையையும் பிறப்பிக்கும் அதிகாரம் தமக்கில்லை எனத் தெரிவித்து, நீதிமன்றம் தீர்ப்பு எதனையும் வழங்காமல் தவிர்ந்து கொண்டது.

நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு தவறான பொருள்கோடல் செய்தே மறுநாள் 05ஆம் திகதி குறித்த ஜனாஸாவை எரிப்பதற்காக, அதனை அம்பாறைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் கல்முனைப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று முழுக்க வைத்தியசாலை சுற்றுப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் மேற்படி வழக்கு தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதனால் அந்த ஜனாஸா மீதான கெடுபிடி தளர்வுக்கு வந்தது.

சாய்ந்தமருது நபரின் ஜனாஸாவுக்கும் ஆபத்து

இந்த சூழ்நிலையிலேயே அவ்வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு உடலமான சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் ஜனாஸாவை மேலும் தாமதிக்காமல் மீட்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா, மீனவர் சமூகத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளியாவார். அவருக்கு வயது 58 ஆகும். சாய்ந்தமருது கடற்கரை வீதியில் தேநீர் கடையொன்றை நடத்தி வந்த இவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுள் மூத்தவர் சக்தி எப்.எம். வானொலியின் அறிவிப்பாளரான முஹம்மட் சௌக்கியாவார். இவருக்கு அடுத்ததாக ஒரு பெண் பிள்ளை உள்ளார். 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து, சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

கடந்த 2020.12.21ஆம் திகதி காலையில் வழமை போன்று காலை 6.00 மணிக்கு முன்னதாக தனது கடையைத் திறந்து பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், காலை 7.00 மணி தாண்டியவேளை திடீரென சற்று மயக்கமடையவே சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு வைத்தியர் பரிசோதிக்கிறார். சக்கரை சடுதியாக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து, மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் மரணிக்கிறார்.

இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, ஜனாஸாவை மீட்டு, நல்லடக்கம் செய்யும் வரையான அத்தனை நடவடிக்கைகளிலும் முன்னின்று பங்காற்றிய, ஹனிபா அவர்களது மனைவியுடைய சகோதரியின் புதல்வரான நவ்சாத் ஏ.ஜப்பார் அவர்கள் மேற்கொண்டு நடந்தவற்றை ‘விடிவெள்ளி’க்கு விபரிக்கையில்;

“வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட எனது சாச்சா ஹனிபா அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பல வைத்தியர்கள் சேர்ந்து, பிரயத்தனம் மேற்கொண்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் சக்கரை நோய் திடீரென அதிகரித்த நிலையில், அதன் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, அவர் மரணித்து விட்டார் என சிறிது நேரத்தில் எமக்கு கூறப்பட்டது. அது மிகவும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

அது இறைவன் ஏற்பாடு என பொருந்திக்கொண்டு, மைய்யித்தை அடக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், எத்தனை மணியளவில் ஜனாஸாவைத் தருவீர்கள் என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கேட்டோம். இரு மணித்தியாலங்களுள் தர முடியும் என்று பதில் கிடைத்தது. நேரம் சென்றது. என்ன தாமதம் என்று கேட்டோம். அவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் பொசிட்டிவ் முடிவு வந்திருக்கிறது என்று தரப்பட்ட பதில் எம்மை நிலை குலையச்செய்தது.

சற்றுநேரத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எம்மிடம் வந்து, எம்மை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்திச் சென்றனர். மரணித்தவருடன் முதலாவது தொடர்புடையவராக என்னை அடையாளப்படுத்தினர். அடுத்தடுத்த நாட்களில் நான் உட்பட எனது குடும்ப உறவினர்கள் 25 பேரும் சாச்சாவின் குடும்பத்தினர், உறவினர்கள் என்று 100 பேருமாக மொத்தம் 125 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு

சாச்சாவுடன் நேரடி தொடர்புபட்ட எம்மில் எவருக்கும் தொற்று இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் கொரோனாவா என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பொசிட்டிவ்தான் என்று கூறப்பட்டபோதிலும் தெளிவான முடிவை உறுதியாக கண்டறிய முடியவில்லை என்பதால் அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரி மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது.

இதையடுத்து, சந்தேகம் வலுத்ததால் இந்த விடயத்தை ஆராயுமாறு கோரி வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் பொலிஸாருக்கும் முறைப்பாட்டுக் கடிதங்களைக் கொடுத்தோம்.

அதன் பின்னர், மட்டக்களப்பிலுள்ள விசேட தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் வைதேகி பிரான்சிஸ் அவர்களினால் டிசம்பர் 23ஆம் திகதியளவில் குறித்த பி.சி.ஆர். அறிக்கை, வைத்தியசாலை அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி குறித்த உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமக்கு தெரியவந்தது. ஆனால் அந்த அறிக்கை எம்மிடம் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருந்தது.

இவரது பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை நெகட்டிவ்தான் என்று முடிவாகியிருந்த நிலையில், அதன் உண்மைகள் மறைக்கப்பட்டு, ஜனாஸாவை  கையளிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறித்து வைத்தியசாலை அத்தியட்சகரிடம் தொலைபேசியில் வினவினோம். ஆனால் நெகட்டிவ்தான் என்று உறுதிப்படுத்திச் சொல்வதற்கு அவர் முன்வரவில்லை. அந்த அறிக்கையின் பிரகாரம் எமது வைத்தியசாலை தொழில்நுட்பக்குழு ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு (DGHS) கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்குமாறு அறிவுரை சொல்லப்பட்டது. இரண்டு வாரங்கள் கடந்தும் அந்த நல்ல செய்தி எமக்குக் கிடைக்கவேயில்லை.

இப்பின்னணியில், எமது தனிமைப்படுத்தல் காலமும் நிறைவடைந்த நிலையில், இம்மாதம் 05ஆம் திகதி இவ்வைத்தியசாலையிலுள்ள ஜனாஸாக்களை எரிப்பதற்காக இராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர் என்ற கதை எமக்கு எட்டியது. நாங்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று நிர்வாகத்தினரை சந்தித்தோம்.
எமது முறைப்பாட்டுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல், எவ்வாறு எங்களது ஜனாஸாவை எரிக்கக் கொடுப்பீர்கள் என்று கேட்டோம். சம்மாந்துறை நபர் தொடர்பிலான வழக்கின் முடிவாக சுகாதாரத்துறை மேல்மட்டம்தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது என்று வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டது. இதில் இராணுவம் தலையிட்டிருப்பதால், அவர்களுக்கு மேலிடத்து உத்தரவு எவ்வாறு வந்திருக்கும் என்று எம்மால் சொல்ல முடியாது. அதில் தலையிடும் அதிகாரம் எமக்கில்லை என்றவாறு வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பதில் கூறப்பட்டதுடன் எம்மை விடுத்து, மாற்று வழியைத் தேடுங்கள் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

இவ்வாறானதொரு பதற்றம், பரபரப்புக்கு மத்தியில்தான் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தரின் ஏற்பாட்டில் கல்முனை மேயரான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை அவசரமாக சந்தித்து, நிலைமையை எடுத்துச் சொன்னோம். மேயர் திகைத்துப் போனார். பி.சி.ஆர். நெகட்டிவ் என்று வந்துள்ள நிலையிலா அந்த ஜனாஸாவைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சீற்றமடைந்தார்.

ஆம், நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டும், ஜனாசாவைத் தராமல் பொடுபோக்காக நடத்தப்படுகிறோம் என துயரங்களை வெளிப்படுத்தினோம். இனியும் தாமதித்தால் வாப்பாவின் ஜனாஸாவை எரித்து விடுவார்கள் என்று கனத்த இதயத்துடன் மகன் சௌக்கி எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, ஜனாஸாவை மீட்கும் விடயத்தில் மேயர் முழுமூச்சாக இயங்கினார். அவர் ஒரு மேயராகவோ சட்டத்தரணியாகவோ என்றில்லாமல், எங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றே செயற்பட்டார். அவருடன் தொடர்புபட்டு, ஜனாஸாவை கையேற்று, நல்லடக்கம் செய்யும் வரையான 10 நாட்களும் அவர் எம்முடன் இருந்தார். நீதிமன்ற நடவடிக்கையில் மாத்திரமல்லாமல், இதர நடவடிக்கைகள் அனைத்தையும் கச்சிதமாக வழிநடத்தி, வென்று தந்தார்” என நவ்சாத் ஏ.ஜப்பார் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கை

மர்ஹூம் ஹனிபாவின் புதல்வர் மற்றும் உறவினர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், தன்னுடன் இருந்த சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோருடன் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எவ்வாறு கையாளலாம் என ஆலோசிக்கிறார். அன்றைய தினம் சம்மாந்துறை நபர் தொடர்பிலான வழக்கு கட்டளை எதுவுமின்றி காலாவதியான நிலையில், இந்த ஜனாஸா தொடர்பில் எந்த சட்டத்தின் கீழ் எவ்வாறு வழக்குத் தொடர்ந்தால், சாதகமான தீர்ப்பைப் பெறலாம் என்று துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்.

சரி, ஜனாஸா வைக்கப்பட்டுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் ஜனாஸாவை விடுவிக்கச் சொல்லி பேசிப்பார்ப்போம் என்று வைத்தியசாலைக்கு செல்கிறார். ஜனாஸாவை விடுவிக்கும் அதிகாரம் தனது அதிகாரத்திற்குட்பட்டதல்ல என அத்தியட்சகர் கைவிரிக்கிறார். அத்துடன் இந்த ஜனாஸா தொடர்பிலும் சுகாதாரத்துறை நிர்வாக ரீதியில் ஏற்பட்டுள்ள பல சிக்கலான விடயங்களையும் மேயர் அறிந்து கொள்கிறார்.

அதனால் இந்த விடயத்தில் நீதிமன்ற நடவடிக்கையை ஆரம்பிக்கும் பொருட்டு, தான் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் உடனடியாக வைத்திய அத்தியட்சகருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எனது கட்சிக்காரரின் ஜனாஸாவை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவியுங்கள் என்று அந்த வக்கீல் நோட்டிஸ் ஊடாக வைத்திய அத்தியட்சகரிடம் அவர் கோரிக்கை விடுக்கிறார். எனினும் ஜனாஸா விடுவிக்கப்படவில்லை.

மறுநாள் 06ஆம் திகதி இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 162 இன் கீழ் தனிப்பட்ட பிராதாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முறைப்பாட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். கொரோனாவால் மரணித்ததாக கூறி, விடுவிக்கப்படாமல் இருக்கின்ற சாய்ந்தமருது முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் பிரகாரம் குறித்த நபருக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதிப்படுத்தப்படுமாயின் அவரது ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியுமே இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அது அன்றைய தினமே நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணியின் வாதத்தில் திருப்தியுற்ற நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஏற்றுக் கொண்டதுடன் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 66 இன் கீழ் குறித்த பி.சி.ஆர். அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை 2021.01.08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

இக்கட்டளையின் பிரகாரம் குறித்த அறிக்கை கடந்த 08ஆம் திகதி நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆவணத்தை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தியதுடன் இந்த ஆவணத்தை மையப்படுத்தி 2021.01.11ஆம் திகதியன்று வழக்கை ஆதரிப்புக்காக எடுக்குமாறு பணித்தது. இதன் மூலம் குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கை நெகட்டிவ்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 11ஆம் திகதியும் 13ஆம் திகதியும் இவ்வழக்கு மீதான சமர்ப்பணங்கள் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையிலான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்டன. இதன்போது நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை செயற்படுத்துவதில் ஓர் அதிகாரி தாமதம் காட்டினார். இதனால் 13ஆம் திகதி புதன்கிழமை விடுவிக்கப்பட வேண்டிய ஜனாஸா விவகாரம் மேலும் இழுத்தடிப்புக்குள்ளானது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பது போல் அன்றைய நிலைவரம் காணப்பட்டது.

இந்த இழுபறியைக் கருத்தில் கொண்டு, கடந்த 15ஆம் வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது நீதிமன்றம் மீண்டும் வழங்கிய அறிவுறுத்தல்களின் பிரகாரம் ஜனாஸாவை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஹனிபாவின் பி.சி.ஆர். அறிக்கை, வைத்தியசாலையில் சிகிச்சையளித்த வைத்தியர்களின் அறிக்கை, வைத்தியசாலை தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை உள்ளிட்ட பல ஆவணங்களை பரிசீலித்த, திடீர் மரண விசாரணை அதிகாரி, குறித்த நபரின் மரணமானது, அவருக்கிருந்த சக்கரை நோய் திடீரென அதிகரித்ததால், அதன் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதனால் சம்பவித்தது என அறிக்கையிட்டிருந்தார். இதையடுத்து அன்றைய தினம் இரவு குறித்த ஜனாஸா குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு அதிரடியாக நீதிமன்ற நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படாமல் விட்டிருந்தால், இந்த ஜனாஸாவுக்கு நல்லடக்கம் எனும் பாக்கியம் இழக்கப்பட்டு, தீயிற்கு இரையாகியிருக்கலாம் எனவும் சட்டரீதியான இந்தப் போராட்டம் ஒரு  சாதனையே என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நீதிமன்ற நடவடிக்கையானது எமது நாட்டில் முஸ்லிம் ஜனாஸாக்கள் மீது அநியாயமாக அரங்கேற்றப்பட்டு வருகின்ற கொடூரங்களை ஓரளவாவது தடுப்பதற்கு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மகன் சௌக்கியின் பகிர்வு

தனது தந்தையாரின் ஜனாஸா கிடைக்கப்பெற்று, தமது கரங்களால் நல்லடக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு, மகன் சௌக்கி  பின்வருமாறு கூறுகிறார்;

“எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலம் தொட்டு, இன்றளவில் எமது முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அநியாயம் தொடர்கிறது. அவ்வாறானதொரு ஆபத்து எமது குடும்பத்தை நோக்கி வந்தபோதே அதன் பாரதூரத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் ஓர் ஆபத்து அவரவருக்கு வரும்போதே அதன் தாக்கம் எத்தகையது என்பதை உணர முடிகிறது. தொற்றுக்குள்ளாகி மரணிக்கின்ற ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதையே அநியாயம் என்று ஜீரணிக்க முடியாதிருக்கின்ற சூழ்நிலையில் தொற்று ஏற்படாத ஜனாஸா எரிக்கப்படுவதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியுமா?

அந்த வகையில் வாப்பாவின் மைய்யித்தை பெற்றுக் கொள்வதற்காக கடும் சோதனைகளுக்கு மத்தியில் நம்பிக்கையை கைவிடாமல் 25 நாட்கள் ஓயாமல் போராடினோம். வெற்றிபெற்றோம்.

கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் வாப்பாவின் ஜனாஸா எங்களிடம் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டு வந்த நிலையில் வாய்ச்சொல்லை நம்பாமல் உரிய அறிக்கை, ஆவணங்களைப் பெற வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் மிகச் சாதுரியமாக ஆரம்பத்தில் சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து, பின்னர் நீதிமன்றம் சென்று, அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றம் ஊடாகப் பெற்று, நீதிமன்றிலேயே நியாயம் கேட்டு வாதாடி, ஜனாஸாவை மீட்டு, நல்லடக்கம் செய்யும் வரையான பணியில் முக்கிய பங்காற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சட்டத்தரணி ரோஷன் அக்தர் மற்றும் சட்டத்தரணி சஞ்சித் அகமட் ஆகியோருக்கும் குடும்பம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் எமக்கு ஒத்துழைப்பு நல்கிய சுகாதார அதிகாரிகள், வைத்தியசாலை நிர்வாகத்தினர், குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்று பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அனைவருக்கும் விசேடமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாடு பூராக இருந்து வரும் அழைப்புக்களும் அவர்கள் கூறும் வார்த்தைகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்கள் தந்தையின் ஜனாஸா விவகாரம் தொற்று இல்லாத ஒரு ஜனாஸாவை எவ்வாறு பெற வேண்டும் என்ற முன்மாதிரியை காட்டிவிட்டு சென்றுள்ளார். அவருக்கு இறைவனிடத்தில் உயர்ந்த இடம் இருக்கிறது- கவலைப்பட வேண்டாம் என்ற வார்த்தைகள் எம்மனதை திருப்திப்படுத்துகின்றன” என அவர் குறிப்பிடுகிறார்.

ஆக, சகோதரர் ஹனிபாவின் ஜனாஸாவைப் பெறுவதற்காக அக்குடும்பத்தினர் முன்னெடுத்த சட்ட ரீதியான போராட்டம் இவ்வாறான சவால்களைச் சந்தித்துள்ள ஏனையோருக்கும் முன்மாதிரியானதாகும். இதனை முன்னுதாரணமாக கொண்டு நம்பிக்கையை இழக்காது போராட அனைவரும் முன்வர வேண்டும்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.