‘ஹலால்‘ என்ற வார்த்தையை நீக்கியது இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்

0 1,737

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சிக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழை எதிர்த்து இந்து வலதுசாரி குழுக்கள் மற்றும் சீக்கிய அமைப்புகள் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இறைச்சி கையேட்டிலிருந்து ‘ஹலால்‘ என்ற வார்த்தையை நீக்கியுள்ளது.

ஹலால் இறைச்சி தொடர்பாக இந்திய அரசு தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை என்று வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏ.பி.இ.டி.ஏ) தெளிவுபடுத்தியுள்ளது. “இறைச்சி இறக்குமதி செய்யும் நாடுகளில் / இறக்குமதியாளர்களில் பெரும்பான்மையினரின் தேவையாக ஹலால் சான்றிதழ் உள்ளது. ஹலால் சான்றிதழ் முகவர் நிறுவனங்கள் அந்தந்த இறக்குமதி நாடுகளால் நேரடியாக அங்கீகாரம் பெறுகின்றன. இதில் எந்த அரசாங்க நிறுவனத்திற்கும் எந்தப் பங்கும் இல்லை” என்று ஏ.பி.இ.டி.ஏ தெரிவித்துள்ளது.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் வேளாண் ஏற்றுமதியைக் கையாளும் ஏ.பி.இ.டி.ஏ-வின் முந்தைய சிவப்பு இறைச்சி கையேட்டில் “இஸ்லாமிய நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஹலால் முறையின்படி விலங்குகள் அறுக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது “இறக்குமதி செய்யும் நாடு அல்லது இறக்குமதியாளரின் இறக்குமதி செய்வதற்கான தேவைக்கேற்ப விலங்குகள் அறுக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அது, “இஸ்லாமிய ஷரீஆ கொள்கைகளின்படி (அ) அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பின் கடுமையான விழிப்புணர்வின் கீழ் ஹலால் அமைப்பால் விலங்குகள் அறுக்கப்படுகின்றன. ஹலாலுக்கான சான்றிதழ் பதிவுசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதியால் வழங்கப்படுகிறது. அதன் மேற்பார்வையின் கீழ் இறக்குமதி செய்யும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அறுக்கப்படுகிறது” என்ற வரிகளையும் நீக்கியுள்ளது.

இறைச்சி ஏற்றுமதியில் பழைய கையேட்டில் ஹலால் என்ற வார்த்தையின் பயன்பாடு, அனைத்து இறைச்சி ஏற்றுமதிக்கும் இது கட்டாயமானது என்ற தோற்றத்தை அளித்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

இஸ்லாமிய நாடுகள் ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட இறைச்சியை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றன. இந்தியா பல இஸ்லாமிய நாடுகளுக்கு எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. 2019-20 ஆம் ஆண்டில், இந்தியா ரூ .22,668.48 கோடி மதிப்புள்ள எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் முக்கியமான வாங்கும் நாடுகளாக வியட்நாம் (ரூ.7,569.01 கோடி), மலேசியா (ரூ.2,682.78 கோடி), எகிப்து (ரூ.2,364.89 கோடி), இந்தோனேசியா (ரூ.1,651.97 கோடி), சவுதி அரேபியா (ரூ.873.56 கோடி), ஹாங்காங் (ரூ.857.26 கோடி), மியன்மார் (ரூ.669.20 கோடி), ஐக்கிய அரபு அமீரகம் (ரூ.604.47 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வியட்நாம் மற்றும் ஹாங்காங்கிற்கு செய்யப்படும் பெரும்பாலான இறைச்சி ஏற்றுமதிகள் சீனாவுக்கு திருப்பி விடப்படுகின்றன.

அரசாங்கம் ஹலால் இறைச்சியை ஊக்குவிப்பதாகத் தெரிகிறது என்று ஏ.பி.இ.டி.ஏ கையேட்டை சுட்டிக்காட்டிய வலதுசாரிக் குழுக்கள், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள கையேடு “சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் படி” என்று அழைத்துள்ளன. இருப்பினும், ஹலால் சான்றிதழுக்கு எதிரான முன்னணி பிரசாரகர்களில் ஒருவரான ஹரிந்தர் சிக்கா, “இது முதல் படி மட்டுமே. நாங்கள் எங்கள் பிரசாரத்தைத் தொடருவோம். ஹலால் இறைச்சி என்பது சீக்கியர்களாகிய எங்களுக்கு ஹராம் (சட்டவிரோதமானது).” என்று கூறினார்.

ஏர் இந்தியா விமானங்களில் ஹலால் இறைச்சி வழங்குவதை நிறுத்துமாறு சீக்கிய அமைப்புகள் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரியை அணுகியுள்ளன. ஹலால் சான்றிதழ் பிற சமூகத்தவர்களின் வேலை இழப்புக்கு வழிவகுத்துள்ளதாக ஹரிந்தர் சிக்கா கூறினார்.

ஹலால் இறைச்சி வணிகத்தை “ஹலாலானோமிக்ஸ்” என்று அழைத்த வி.எச்.பி.யின் வினோத் பன்சால், “நாட்டில் ஹலாலானோமிக்ஸ் நிறுத்தப்பட வேண்டும். அது முழு பொருளாதாரத்தையும் கைப்பற்றியுள்ளது. எல்லாவற்றிலிருந்தும் ஹலால் சான்றிதழ் அகற்றப்பட வேண்டும். ஹலால் சான்றிதழ் இருந்தால் ‘ஜட்கா’ சான்றிதழும் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.