ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் விவகாரங்கள் சிலவற்றுக்கு புதிதாக தனியான சட்டங்கள் இயற்றப்படவுள்ளன. இதற்கென 10 பேர் கொண்ட ஆலோசனை குழுவொன்றை நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமித்துள்ளார்.
இதற்கமைவாக தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் மற்றும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. பள்ளிவாசல்களின் பதிவுகள் மற்றும் முஸ்லிம் அறக்கட்டளை (நம்பிக்கை நிதியம்) என்பனவும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
அத்தோடு தேசிய ஹஜ் விவகாரங்களுக்கான ஒரு சட்டமும் மத்ரஸாக்களின் பதிவுகள், செயற்பாடுகள் மற்றும் பாடவிதானம் தொடர்பிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய குறித்த முஸ்லிம் தனியார் சட்டங்களை மீள்பரிசீலனை செய்து தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கும் ஆலோசனைக்குழுவொன்றினை நீதியமைச்சர் நியமித்துள்ளார்.
இக்குழுவுக்கு 31.12.2020 திகதியிட்ட நியமனக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இக்குழுவில் வக்பு சபையின் தலைவர், முன்னாள் தலைவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர், ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதி மற்றும் இரு பெண் சட்டத்தரணிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
10 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் தலைவராக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சட்டத்தரணி நாமிக் நபாத் (ஒருங்கிணைப்பாளர்), அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அஷ்ரப், சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸீன், சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம், சட்டத்தரணி எர்மிஸா தீகல், சட்டத்தரணி எஸ்.எம். ருஷ்தி, சட்டத்தரணி சபானா குல் பேகம், அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூர் ஆமித், அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதியமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். சிறுபான்மையான முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் இந்நாட்டில் நல்லிணக்கத்துடனும் நல்லுறவுடனும் வாழும் வகையில் தேவையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்தகால அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது ஹஜ்ஜுக்கென தனியான சட்டவரைவு முன்மொழியப்பட்டது. அதேபோன்று மத்ரஸா கட்டமைப்புக்கும் சட்டவரைபொன்று முன்வைக்கப்பட்டது. வக்பு சட்டத்திலும் திருத்தங்கள் செய்வதற்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றின் சிபாரிசுகள், அறிக்கைகளையும் இக் குழு கவனத்தில் கொள்ளவுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. தேவையேற்படின் பொது கருத்தரங்குகளும் நடத்தப்படும் என ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு நேற்று அமைச்சரை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. – Vidivelli