பிரபல எழுத்தாளராக உலகெங்கும் அறிமுகமான ஹாரூன் யஹ்யா என்றழைக்கப்படும் அத்னான் ஒக்தருக்கு துருக்கி நாட்டு நீதிமன்றம் 1075 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட 10 வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத அமைப்பொன்றை ஸ்தாபித்து தலைமைதாங்கியமை, பெடோ எனப்படும் தீவிரவாத அமைப்புக்கு உதவி ஒத்தாசைகள் வழங்கியமை, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக உளவு பார்த்தமை, இள வயதினரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, நபர்களின் சுதந்திரத்தை பறித்தமை, சித்திரவதை, கல்வி உரிமைக்கு இடையூறு விளைவித்தமை, தனிப்பட்ட தரவுகளை பதிவு செய்து வைத்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்னான் ஒக்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து இஸ்தான்புல் நீதிமன்றம் 236 பேரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தது. இவர்களில் 100க்கும் அதிகமானோர் பெண்களாவர்.
இவர்களில் அத்னான் ஒக்தருக்கு 1075 வருடங்களும் மூன்று மாதங்களும் கொண்ட சிறைத்தண்டனையும் இவ்வமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக விளங்கிய தர்கான் யவாசுக்கு 211 வருட சிறைத்தண்டனையும் ஒக்தார் பபூனா எனும் மற்றொரு நபருக்கு 186 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் தொடர்பான வழக்குகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
ஹாரூன் யஹ்யா எனும் புனைப் பெயரில், டார்வினின் கூர்ப்புக் கொள்கையை மறுத்து படைப்புவாதத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நூற்றுக் கணக்கான நூல்களை இவர் எழுதி வெளியிட்டதன் மூலம் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்று விளங்கினார். இவரது நூல்கள் மில்லியன் கணக்கில் விற்பனையானதுடன் 73 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
எனினும் இவர் சர்ச்சைக்குரிய சமய வழிபாட்டுக் குழுவொன்றை தலைமைதாங்கி நடாத்தி வந்ததுடன் தன்னைச் சூழ கவர்ச்சிகரமான ஆடை அணிந்த அழகிய பெண்களை வைத்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடாத்தி வந்தார். ஏ9 எனும் பெயரிலான தனியான தொலைக்காட்சி சேவையையும் இவர் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli