இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் எனும் தீர்மானத்தில் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட புதிய நிபுணர் குழு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாம் என வழங்கிய அறிக்கையை ஏற்பதற்கு சுகாதார அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஏலவே நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தீர்மானத்தையே சுகாதார அமைச்சு கடைப்பிடித்து வருகிறது. இதற்கமைய கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமான எரிக்கப்பட்டு வருகின்றன.
சில மாவட்டங்களில் கொவிட் மரணத்தில் சந்தேகம் எனத் தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த சடலங்கள் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை குளிரூட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நாடளாவிய ரீதியில் ஜனாஸா தகனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் தற்போது சோபையிழந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli