முஸ்லிம்களின் தகவல் பெட்டகம்

0 622

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
 
முஸ்லிம் சமூ­கத்தின் தேவை­களும் பிரச்­சி­னை­களும் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே போகின்­றன. அவற்­றைப்­பற்றி மேடை­க­ளிலே அர­சி­யல்­வா­தி­களும் புத்­தி­ஜீ­வி­களும் ஓயாது கத­று­கி­றார்கள். அவற்­றையே துரும்­பாகப் பாவித்து தேர்தல்­க­ளிலும் ஜெயிக்­கி­றார்கள். மத­போ­தகர்களும் அவர்களுக்குத் தெரிந்த பாணியில் ஒப்­பாரி வைக்­கி­றார்கள். அர­சாங்­கம்தான் இத்­தே­வை­களைப் பூர்த்­தி­செய்து பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்­து­வைக்க வேண்­டு­மென இவர்கள் எல்­லா­ருமே விரும்­பு­வ­துபோல் தெரி­கி­றது. இது பரம்­ப­ரை­யாகப் பாடப்­படும் ஒரு பல்­லவி. இதன் அடிப்­ப­டை­யி­லேதான் அரசின் சலு­கை­களை நம்பி வாழும் ஒரு சமூ­க­மாக மற்ற இனங்கள் முஸ்­லிம்­களை இனங்­கண்­டுள்­ளன.

இந்த நிலை மாற­வேண்டும். நடப்­பி­லி­ருக்கும் இந்த அர­சாங்­கமோ அல்­லது புதி­தாக வரும் எந்த அர­சாங்­கமோ ஒரு தனிப்­பட்ட சமூ­கத்தின் தேவைகள் எல்­லா­வற்­றையும் பூர்த்­தி­செய்ய முடி­யாது. முத­லா­வ­தாக, அதற்­கான வளங்கள் அர­சிடம் கிடை­யாது.

இரண்­டா­வ­தாக, இன்று உலகை ஆளும் அர­சியல் பொரு­ளா­தாரச் சித்­தாந்­தங்கள் பொது­ந­லப்­ப­ணி­யி­லும்­கூட அரசின் பங்கைக் குறைத்துத் தனியார் பங்கைக் கூட்­டி­யுள்­ளது. அதற்­கேற்ப சமூ­கங்­களும் தமது தேவைகள் யாவற்­றையும் அர­சாங்­கமே பூர்த்­தி­செய்ய வேண்­டு­மென எதிர்ப்­பது தவறு. ஆகவே ஒரு சமூகம் அர­சாங்­கத்தின் பார­மாக இயங்­காமல் அதன் பங்­கா­ளி­யாக மாற­வேண்டும். உதா­ர­ண­மாக, ஒரு முஸ்லிம் பாட­சா­லைக்கு விஞ்­ஞான ஆய்­வு­கூடம் தேவைப்­ப­டு­வ­தாக வைத்­துக்­கொள்வோம். இதை நிறை­வேற்ற அர­சாங்­கத்­தையே முழு­மை­யாக நம்பி இராமல் கட்­டி­டத்தை அவ்வூர் மக்­களும் ஏனைய தள­பா­டங்­க­ளையும் விஞ்­ஞான உப­க­ர­ணங்­க­ளையும் அர­சாங்­கமும் பங்­கெ­டுத்தால் அர­சாங்­கத்தின் பாரமும் குறையும் ஊர்­மக்­களின் நாட்­டுப்­பற்றும் போற்­றப்­படும். இன­பே­தத்தை வளர்க்கும் ஒரு நாட்டில் முஸ்லிம் இனத்தின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் அந்த இனத்­தைப்­பற்­றிய அபிப்­பி­ரா­யங்­களை எவ்­வாறு மாற்றும் என்­பதைச் சிந்­திக்க வேண்டும்.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைப் பற்­றியும் தேவை­களைப் பற்­றியும் பொது மேடை­களில் சதா பேசிக்­கொண்டு பொருளும் புகழும் சம்­பா­திக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் அந்தப் பிரச்­சி­னை­களின் பர­வலும் ஆழமும் என்ன, அல்­லது தேவைகள் எவ்­வா­றா­னவை, அவை எங்­கெங்கே யார் யாருக்கு அவ­சியம் என்­பன பற்­றிய தக­வல்கள் உண்டா என்­பதே முதற் கேள்வி. அதா­வது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளையும் தேவை­க­ளையும் பற்­றிய ஒரு தகவல் திரட்டு இற்­றை­வரை இல்­லை­யென்­பதை உறு­தி­யுடன் கூறலாம். சென்­ற­கால முஸ்லிம் வர­லா­று­பற்­றிய எத்­த­னையோ தக­வல்கள் தனிப்­பட்ட சில­ரி­டையே சித­றுண்டு கிடக்­கின்­றன. அவற்­றை­யெ­ல்லாம் ஒன்று திரட்டி ஆவ­ணப்­ப­டுத்த வேண்­டாமா? அப்­ப­டிப்­பட்ட ஒரு தகவல் பெட்­டகம் இல்­லாமல் பிரச்­சினை­களைத் தீர்க்­கவும் தேவை­களைப் பூர்த்­தி­பண்­ணவும் எடுக்­கப்­படும் முயற்­சிகள் எதிர்­பார்க்கும் பயனைத் தர­மாட்டா. எனவே, அப்­பெட்­ட­கத்தை எவ்­வாறு உரு­வாக்­கலாம் என்­பது பற்­றிய சில சிந்­த­னை­களை இக்­கட்­டுரை வாசகர்களுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றது.

ஒரு சமூ­கத்­துக்­கு­ரிய தக­வல்­களை ஓரி­ரு­வரால் தனிப்­பட்ட முறையில் திரட்­ட­மு­டி­யாது. இத்­த­கவல் திரட்டு இலங்­கையின் குடி­சனக் கணக்­கெ­டுப்புத் திணைக்­களம் தேசிய மட்­டத்தில் மேற்­கொள்ளும் ஒவ்­வொரு தசாப்­தத்­துக்­கான கணக்­கெ­டுப்பு போன்று முஸ்­லிம்­களால் ஒரு முஸ்லிம் சமூ­க­நி­று­வ­னத்­தி­னதோ அமைப்­பி­னதோ தலை­மையில் முஸ்­லிம்­க­ளுக்­காக மேற்­கொள்­ளப்­படல் வேண்டும்.  அதற்கு அடிப்­ப­டை­யாக ஒரு முஸ்லிம் சமூக அமைப்பும், ஆட்­ப­லமும், நிதிப்­ப­லமும் அவ­சி­ய­மா­கின்­றன.

சமூக அமைப்பு

முஸ்­லிம்­க­ளுக்­குள்ளே எத்­த­னையோ சங்­கங்கள், இயக்­கங்கள், மன்­றங்­க­ளென்று மழைக்கு முளைக்கும் காளான்கள் போன்று காலத்­துக்குக் காலம் தோன்றி மறை­கின்­றன. அவை­களுள் எத்­த­னையோ பொது­வாக ஓரி­ரு­வரின் தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­கா­கவும் நலன்­க­ளுக்­கா­கவும் உரு­வாகி அந்த நோக்­கங்­களும் நலன்­களும் நிறை­வே­றியும் நிறை­வே­றா­மலும் இருந்த இடம் தெரி­யா­மலே மறைந்த வர­லாறும் உண்டு. ஆனாலும் சமூ­கப்­பற்றும், பொது­ந­லனும், தூர­நோக்கும் கொண்ட சிறந்த சிந்­த­னை­யாளர்கள் தோற்­று­வித்த ஓரிரு அமைப்­புகள் இன்னும் நிலைத்து நிற்­கின்­றன. அவற்றுள் ஒன்­றுதான் இளம் முஸ்லிம் இளைஞர் சங்கம் (YMMA). அது நல்ல பல பணி­களை அதுவும் குறிப்­பாகக் கல்­வித்­து­றையில் செய்­துள்­ளதை மறக்க முடி­யாது.

இன்­றைக்கு, அதுவோ அல்­லது அது போன்ற இன்­னொரு இயக்­கமோ தகவல் பெட்­டகம் ஒன்றை உரு­வாக்கும் பணியில் செயற்­பட வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றான பணிக்கு முக்­கிய தேவை ஒரு நிலை­யான ஆய்­வு­கூடம். முன்­னொரு கட்­டு­ரையில் நான் குறிப்­பிட்­டது போல் காலஞ்­சென்ற மு.கா. தலைவர் எம். எச். எம். அஷ்­ரபை நான் 1990களில் சந்­தித்­த­போது அவர் நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருந்த தாருஸ்­ஸலாம் என்ற கட்­டி­டத்தைச் சென்று பார்த்­து­விட்டு அதையே முஸ்­லிம்­களின் வர­லாறு, சமூகம், பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மான ஆய்வு கூட­மாக மாற்­ற­வேண்டும் என்றும் அதற்­கான பூரண ஒத்­து­ழைப்­பையும் நான் வழங்கத் தயா­ராக உள்ளேன் என்றும் கூறினேன். துர­திஷ்­ட­வ­ச­மாக அவ­ரு­டைய மறை­வுடன் அந்த வாய்ப்பு நழுவி விட்­டது. தாருஸ்­ஸலாம் கட்­டி­டத்தின் இன்­றைய நிலை­யென்ன, அதை யார் எதற்­காகப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள் என்­பது பற்­றி­யெல்லாம் எனக்கு எது­வுமே தெரி­யாது. ஆனால் அதனை ஆய்வு கூட­மாக மாற்ற வழி­யுண்டா என்­பதை சமூ­கமே தீர்­மா­னிக்க வேண்டும்.

ஜாமியா நளீ­மி­யாவும் இப்­ப­ணியைத் தலைமை தாங்கி நடாத்­தி­யி­ருக்­கலாம். 1983 இல் அங்கே சர்வதேச மகா­நா­டொன்று நடை­பெற்­ற­போது அந்தத் தேவை­யைப்­பற்­றியும் அப்­போது பிரஸ்­தா­பிக்­கப்­பட்ட ஞாபகம் உண்டு. அத்­துடன் கொழும்பு சாஹிராக் கல்­லூ­ரியின் நூல் நிலையக் கட்­டி­டத்தை அவ்­வா­றான தேவைக்­காக மாற்­ற­வேண்டும் என்ற எண்ணம் அன்­றைய அதன் அதிபர் சிந்­தனை­யாளர் அஸீஸ் அவர்களுக்­கி­ருந்­தது. ஆனால் சந்தர்ப்பங்கள் அதையும் கைகூடச் செய்­ய­வில்லை. இதற்கு மத்­தியில் இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கங்­களுள் எங்­கே­யா­வது அர­பு­மொ­ழித்­து­றையோ வேறு ஏதா­வது ஒரு துறையோ இதனைச் செய்­யு­மென்று அங்கே நிலவும் இன்­றைய சூழலில் எதிர்­பார்க்க முடி­யாது. ஆகவே எங்­கே­யா­வது முஸ்லிம் சமூ­கத்­துக்­கென சகல நவீன தொழில்­நுட்ப வச­தி­கள்­கொண்ட ஒரு பிரத்­தி­யேக ஆய்­வு­கூடம் அவ­சியம் தேவை.

ஆய்­வாளர்களும் தகவல் திரட்­டு­வோரும்

தகவல் திரட்­டுவோர் படை­யொன்று பொரு­ளியல், சமூ­க­வியல், கணி­த­வியல் போன்ற துறை­களிற் பாண்­டித்­தி­யம்­பெற்ற புத்­தி­ஜீ­வி­களின் தலை­மை­யின்கீழ் அவர்களின் வழி­காட்­டலில் செயற்­ப­ட­வேண்டும். பொது­வாக, இப்­புத்­தி­ஜீ­விகள் பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர்களா­கவோ சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்களா­கவோ அல்­லது அர­சாங்க நிர்­வா­கத்­த­ுறையில் நீண்ட அனு­ப­வ­முள்­ளவர்களா­கவோ இருத்தல் வேண்டும். அவர்களால் தயா­ரிக்­கப்­படும் வினாக்­கொத்தைக் கொண்டு அவ்­வி­னாக்­க­ளுக்­கு­ரிய விடை­களை ஒவ்­வொரு முஸ்லிம் குடும்பத் தலை­வி­யி­ட­மி­ருந்தோ தலை­வ­னி­ட­மி­ருந்தோ இப்­ப­டை­யினர் நேரிலே சென்று சேக­ரித்தல் வேண்டும். இது ஒரு செய­ல­ணிபோல் இயங்­குதல் அவ­சியம்.
இப்­ப­டை­யினர் பல்­க­லைக்­க­ழகப் பட்­ட­தா­ரி­க­ளாக அல்­லது இடை­நிலைப் பள்ளிக் கல்­வியை முடித்­தவர்களாக இருத்தல் நன்று. அவர்களுக்கு இரண்­டொரு நாட்கள் மேற்­கு­றிப்­பிட்ட புத்­தி­ஜீ­வி­களால் ஆய்­வு­கூ­டத்தில் பயிற்சிப் பாச­றை­யொன்று நடத்­தப்­ப­ட­வேண்டும். அப்­ப­டை­யினர் சேக­ரித்த விடை­களே புத்­தி­ஜீ­வி­களின் ஆய்­வுக்கு மூலப் பொரு­ளாகும். அதன் பிறகு இவ்­வா­றி­வா­ளிகள் கணி­னியின் துணை­யுடன் பல அம்சங்­க­ளையும் தொகுத்து வேண்­டி­ய­மா­திரி அட்­ட­வ­ணைகள் தயா­ரித்து அந்த ஆய்­வு­கூ­டத்தின் பொக்­கி­ஷ­மாக வைத்தல் வேண்டும். இதுவே தகவல் பெட்­டகம். இந்­தப்­ப­ணியை காலத்­துக்­குக்­காலம் மேற்­கொள்­வதால் சமூ­கத்தில் எத்­துணை மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன, சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் குறைந்­துள்­ள­னவா பெரு­கி­யுள்­ள­னவா அவற்றைத் தீர்க்க என்ன வழி என்­ப­தை­யெல்லாம் ஆத­ா­ர­பூர்­வ­மாக அணு­கலாம். ஆனால் இந்தப் பெட்­ட­கத்தை அமைப்­ப­தற்கு நிதி வேண்டும்.

தன­வந்தர்களின் கடமை

ஏற்­க­னவே முஸ்லிம் தன­வந்தர்களுக்கோர் விண்­ணப்பம் என்ற கட்­டு­ரையில் இக்­க­டமை பற்றிக் குறிப்­பிட்டேன். அதை மேலும் வலி­யு­றுத்­து­வது அவ­சி­ய­மா­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை பல தீய­சக்­தி­களின் அர­சியற் தந்­தி­ரங்­களும் சூழ்ச்­சி­களும் ஆபத்­தான ஒரு நிலையை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. திரு­ம­றையில் அல்லாஹ் ஓரி­டத்தில் பின்­வ­ரு­மாறு கூறு­கிறான்: “அவர்களும் திட்டம் தீட்­டு­கி­றார்கள், நானும் திட்டம் தீட்­டு­கிறேன், அவர்களை­விட நான் திட்­டம்­போ­டு­வதில் வல்­லவன்”. ஆகவே இறை­வனின் திட்­டத்தை நாம் அறியோம். ஆனாலும் நம்மை நாமே பாது­காக்க முயற்சி எடுக்க வேண்­டாமா?

எம்­மி­டையே திற­மை­வாய்ந்த புத்­தி­ஜீ­விகள் பல­ருண்டு. இது கடந்த முப்­பது அல்­லது நாற்­பது ஆண்­டு­க­ளுக்குள் நடை­பெற்ற மெச்­சத்­தக்க ஒரு வளர்ச்சி. அவர்களுள் ஆண்­களும் உண்டு, பெண்­களும் உண்டு. இவர்கள் சமூ­கத்தின் சொத்து. ஆனால் அவர்களிடம் அறிவும் சமூக உணர்வும் இருக்­கின்­றன, பண­மில்லை. இதனால் அவர்களால் தமது உணர்வுகளைச் சமூ­கத்­துக்குப் பய­னுள்­ள­தாக மாற்ற முடி­யா­ம­லி­ருக்­கி­றது. இது ஒரு தடை. அந்தத் தடையை தன­வந்தர்களா­லேயே அகற்ற முடியும். தன­வந்தர்களின் தனமும் புத்திஜீவிகளின் திறனும் சேர்ந்து செயற்படும்போது இறைவனின் வழிகாட்டல் நிச்சயம் கிடைக்கும். இது உலக முஸ்லிம் நாகரிகத்தின் வரலாறு புகட்டும் பாடம்.

முஸ்லிம்களுக்கு ஓர் ஆய்வுகூடம் வேண்டுமென நான் எண்ணியபோது எனது ஞாபகத்தில் வந்தது அப்பாசிய கலீபா மாமூனின் பைத்துல் ஹிக்மா என்ற அறிவுகூடம். அந்த அறிவுச்சாலையே முஸ்லிம் தத்துவ ஞானிகளதும், கணித மேதைகளதும் அறிவு விற்பன்னர்களினதும் பயிற்சிக் களமாக விளங்கி முஸ்லிம் அல்லாதவர்களையும் ஈர்த்தது. அப்பாசிய செல்வந்தர்களின் தனமும் அறிவாளிகளின் சிந்தனையும் ஆய்வும் சேர்ந்தே உலகிலேயே ஒப்பற்ற ஒரு நாகரித்தை தோற்றுவித்தது.

முஸ்லிம் தனவந்தர்களே! தகவல் பெட்டகமொன்றைப் படைக்கும் அரும்பணிக்கு உதவ முன்வாருங்கள். இதில் நீங்கள் முடக்கும் பல இலட்சம் ரூபாய்கள் எதிர்காலத்தில் பல வடிவங்களில் எத்தனையோ கோடி ரூபாய் பெறுமதியான நன்மைகளை சமூகத்துக்கு விளைவிக்கும். முயற்சி நம்முடையது. வெற்றியும் தோல்வியும் இறைவனுடையது. இறைவன் துணை செய்பவனே ஒழிய இயக்குபவன் அல்ல.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.