கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரை மண்ணுக்குள் அடக்கினால் அப்புதை குழிக்குள் கசிந்துவரும் நீரின் மூலம் நோய்க் கிருமிகள் வெளியே பரவும் என்ற ஒரு புதுமையான மருத்துவச் சித்தாந்தத்தை உலகிலேயே முதன்முதலாகச் சிருஷ்டித்து, அந்நோயினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவேண்டுமெனக் கட்டளை பிறப்பித்த ஒரே நாடு இலங்கை. ஒருவேளை அதன் தோழமை நாடான சீனாவும் அவ்வாறு உய்கர் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கின்றார்களோ தெரியாது. ஆனாலும் அரசின் முடிவுக்கு சீன ஆலோசகர்களின் ஆதரவும் உண்டு.
உலக சுகாதார ஸ்தாபனம் தொடக்கம் உலக முஸ்லிம் நாடுகள், அவற்றின் அமைப்புகள் ஈறாக எழுந்த அத்தனை எதிர்ப்புகளும், இலங்கை அரசாங்கத்தின் காதில் ஊதிய சங்குபோல் ஆகிற்று. இந்தப்பிடிவாதத்துக்குக் காரணம் அதன் நிரூபிக்கப்படாத மருத்துவச் சித்தாந்தமா, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தாரக மந்திரமா அல்லது வேறு அரசியற் காரணங்களா? முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிவதன் மறுபக்கத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
ராஜபக்ச குடும்பமும் அவர்களின் கட்சியும் ஆட்சிபீடம் ஏறுவதற்கும் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கும் முக்கிய காலாய் அமைந்தது சிங்கள பௌத்த இனவாதிகளின் ஆதரவும் அவர்களால் திரட்டப்பட்ட சிங்கள பௌத்த வாக்குகளும் என்பது உறுதியாகி விட்டது. இந்த இனவாதிகளின் ஒரே நோக்கு இலங்கையை ஒரு தனிச்சிங்கள பௌத்த அரசாக மாற்றுவதே. இது அவர்களின் நீண்டகாலக் கனவு. அதற்குத் தடையாக இருப்பது தமிழினமும் முஸ்லிம்களும். தமிழினம் தனிநாடு கோரி நடாத்திய ஆயுதப் போராட்டத்தை 2009 இல் முறியடித்து, அந்த இனத்தை ஒரு குற்றேவல் புரியும் இனமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளையில் முஸ்லிம்களை முடியுமானால் நாட்டைவிட்டே துரத்தவும் அவர்கள் தயாராக உள்ளனர்.
கடந்த வருடம் ஆனி மாதம் கண்டியில் நடைபெற்ற ஒரு பகிரங்கக் கூட்டத்தில் ஞானசார தேரர், இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம், மற்றவரெல்லாம் வாடகைக் குடிகள் என்று கூறியதும் அதனைத் தொடர்ந்து அவர் முஸ்லிம் அடிப்படைவாதத்தை முறியடிக்க வேண்டும், அதற்காக முஸ்லிம்களை மூளைச்சலவை செய்யவேண்டும் என்ற தொனியில் பேசியதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அவருடைய எந்தக் கூற்றையுமே ஆட்சியாளர்கள் இன்று வரை மறுத்துரைக்கவில்லை என்பதையும் மறத்தலாகாது.
2013 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கெதிராக சிங்கள பௌத்த இனவாதிகளால் அவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்கள் எத்தனையோ. அவற்றால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அனந்தம். ஆனால், இன்று வரை அவ்வன்செயல்களில் ஈடுபட்ட எவருமே தண்டிக்கப்படவில்லை என்பது ஆட்சியாளர்களுக்கும் இவ்வன்செயல்களிற் பங்குண்டென்பதைத் தெளிவுபடுத்தவில்லையா? அது மட்டுமல்ல, இந்த ஜனாதிபதி உருவாக்கிய அகழ்வாராய்ச்சிச் செயலணி தமிழரும் முஸ்லிம்களும் வாழும் இடங்களில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தனியார் நிலங்களை அபகரிப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். இவையெல்லாம் சிறுபான்மை இனங்கள் இரண்டையும் நசுக்கி அவர்களின் வளங்களையும் சுரண்டி அவர்களை இலங்கையின் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் முயற்சிகளுள் ஒன்றென்பது புலப்படவில்லையா? இதைப் பின்னணியாகக் கொண்டு ஜனாஸா பிரச்சினையை நோக்குவோம்.
தொற்று நோய் உயிர்களை மட்டும் பலியெடுக்கவில்லை. பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. ஊழல்களை ஒழித்து, நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டி, தார்மீகப் பண்புகளைத் தழுவி, பொருளாதாரத்தைச் செழிக்கவைப்பேன் என்று கூறித்தானே இந்த ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவிக்கு வந்தன. தமிழினத்தின் பிரச்சினைகளையும் பொருளாதார வளர்ச்சியினாலேயே தீர்த்து வைப்பேன் என்றும் அவர் சூளுரைக்கவில்லையா? அவை எதுவுமே இதுவரை நடைபெறவில்லை. நாட்டின் கடன் பளு உயர்ந்து, விலைவாசிகள் ஏறி, பொருள் பற்றாக்குறைகளேற்பட்டு ஊழல்களும் மலிந்து காணப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தின்மேல் மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதை ஆங்காங்கே நடைபெறும் வீதி ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன. படைகளைக் கொண்டு இவற்றை இப்போது கட்டுப்படுத்தினாலும் பொருளாதாரக் கஷ்டங்கள் பெருகப் பெருக இவ்வார்ப்பாட்டங்களும் பெருகி மக்களும் அரசுக்கெதிராகத் திரண்டெழுவர். அப்போது படைகளும் பயன்தரா.
மக்களின் செல்வாக்கை இழக்கும் அரசுகளுக்குத் தமது ஆட்சியைக் காப்பாற்ற இனவாதம், மதவாதம், பயங்கரவாதம் ஆகியன அற்புதமான ஆயுதங்கள். 2009 வரை தமிழினத்தைப் பணயம் வைத்து இனவாதத்தை வளர்த்து ஆட்சி நடத்திய பெரும்பான்மை இனக் கட்சிகளின் புது வடிவமே இன்று ஆட்சியிலிருக்கும் கட்சியினர். இவர்களுக்குப் பக்கபலமாய் இருப்பவர்களே பௌத்த சிங்கள பேரினவாதிகள். இப்பேரினவாதிகளின் ஆதாரமற்ற பிரசாரங்களிலொன்று இலங்கையின் பொருளாதாரத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியுள்ளனர் என்பதாகும். ஆதலால் முஸ்லிம்களின் பொருளாதார பலத்தை முறியடிக்க வேண்டுமென அயராது துடிக்கின்றனர். துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் உண்மையான பொருளாதார ஏழ்மையை உலகுக்கே எடுத்துக்காட்டத் தேவையான எந்தத் தகவல்களையும் முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இதுவரை சேகரிக்கவில்லை. முஸ்லிம்களுக்கொரு தகவல் பெட்டகம் அவசியம் தேவைப்படுகிறது என்பதை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன்.
இது ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் மத அடிப்படைவாதிகள், வஹ்ஹாபியர்கள், மதத்தீவிரவாதிகள் என்பது அப்பேரினவாதிகளின் இன்னுமொரு பிரச்சாரம். இதைப்பற்றியெல்லாம் வேறு சந்தர்ப்பங்களில் நான் விரிவாக விளக்கியுள்ளேன். ஆனாலும் அவர்களின் வாய்க்கு அரிசி போட்டது போல் அமைந்தது கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் அதனாலேற்பட்ட அகோர உயிரிழப்புகளும். அந்தச் சம்பவத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எவ்வாறு உணர்த்தினாலும் அவர்கள் நம்பப்போவதில்லை. அச்சம்பவம்பற்றி நடைபெறும் ஜனாதிபதி விசாரணைக் குழுவும் அதன் இறுதி அறிக்கையில் உண்மையான காரணங்களைப் பூசிமெழுகி உண்மையான சூத்திரதாரிகளையும் இனங்காணாது விடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்த அளவுக்கு அக்குழுவின்மேல் இப்பேரினவாதிகளின் அழுத்தம் இருக்கும்.
அதே அழுத்தம்தான் ஜனாஸா விடயத்திலும் முஸ்லிம் உடல்களை எரிப்பதில் விடாப்பிடியாகச் செயற்படுகின்றது. அந்த அழுத்தத்தை மூடிமறைக்கிறது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திரம். முஸ்லிம் உடல்களைப் புதைக்க அனுமதித்தால் அது அரசையே புதைப்பதற்குச் சமனாகும் என்று அபயதிஸ்ஸ என்ற ஒரு தேரர் கூறியுள்ளதை மறத்தலாகாது. இந்த அரசின் பலத்துக்கு ஒரு தூணாக அமைந்துள்ள பௌத்த பேரினவாதிகளின் ஆதரவை இழக்கலாமென்ற பயமே ஜனாதிபதியையும் அவரின் பிரதமரையும் இவ்விடயத்தில் உலகத்தையே எதிர்த்துநிற்கச் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களைப் பலியாக்குவதால் தமது அரசின் பொருளாதார ரீதியான தோல்விகளுக்கெதிராகப் பொதுமக்களிடையே எழும் எதிர்ப்பினையும் அரசாங்கத்தால் திசை திருப்பிவிடலாம். ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழுத்த முஸ்லிம் ஜனாஸாக்கள் கருவியாகின்றன.
இதைவிடவும் பயங்கரமான இன்னுமொரு விளைவும் ஜனாஸா பிரச்சினையால் ஏற்படலாம். இதனைத் தடுப்பது முஸ்லிம்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஜனாஸா எரிக்கும் விடயத்தில் மொத்த முஸ்லிம் சமூகமுமே கொதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் ஆத்திரங்கொண்ட ஒருவர் சட்டத்தை தன்கையிலெடுத்துக் கொண்டு ஏதோ ஒரு அசம்பாவிதத்தை உண்டாக்கலாம். அவ்வாறு நடைபெற்றால் அது பேரினவாதிகளுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். ஜூலை 1983 இல் தமிழினத்துக்கு நடந்ததுபோன்ற அழிவு இம்முறை முஸ்லிம்களுக்கும் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் சீனாவில் உய்கர் முஸ்லிம்களுக்கு நடப்பதுபோன்று இங்கேயும் முஸ்லிம்களை முகாம்களுக்குள் அடைத்து மூளைச்சலவை செய்ய பேரினவாதிகளுக்கு அது ஒரு சந்தர்ப்பமாக மாறும். ஆட்சியாளர்களும் முஸ்லிம்களைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அவ்வாறான முகாம்களை ஏற்படுத்திக் கொடுப்பர்.
இவ்வாறான ஆபத்துகளிலிருந்து விடுதலை பெறவேண்டுமானால் முஸ்லிம் சமூகம் ஒரு புதிய பாதையிற் செல்லவேண்டும். அந்தப் பாதையைப்பற்றி ஏற்கனவே எனது கட்டுரைகள் சிலவற்றில் தொட்டுக் காட்டியுள்ளேன். அதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன்.
ஜனாஸா எரிப்புக்கெதிரான தமது நிலைப்பாட்டை கத்தேலிக்க, மெதடிஸ்ற், அங்கிலிகன் அருட்தந்தையர்கள் அமைதியான முறையில் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம். முஸ்லிம் சமூகம் அதற்கெதிரான இனவாதிகளின் செயற்பாடுகளை தனித்துநின்று போராடி வெல்ல முடியாது. பௌத்த சிங்கள மக்களெல்லாருமே அவர்களின் இனவாதிகளின் பொறிக்குள் சிக்கவில்லை. ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். அதேபோன்றுதான் தமிழினத்துக்குள்ளும் முஸ்லிம்களின் அவல நிலைகண்டு கைகொடுக்கத் தயாராக அநேகர் உளர். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே சுமேந்திரன், சாணக்கியன் ஆகியோர் ஜனாஸா எரிப்புபற்றி ஆற்றிய உரைகள் முஸ்லிம் பிரதிநிதிகளை வெட்கித் தலைகுனியச் செய்துள்ளன. கடந்த வருடம் ஆனி மாதம் கண்டியில் ஞானசாரர் பேசிய “நாடெல்லாம் பௌத்த சிங்களவருடையதே“ என்ற கருத்துக்கு மறுப்புரை கொடுத்த மங்கள சமரவீரவும் ஒரு பௌத்தரே.
இவ்வாறான தலைவர்களையும் அமைதியோடு இருக்கும் நல்ல உள்ளங்களையும் சேர்த்து ஒரு பல்லினக் கூட்டணிமூலமே முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களை இணங்க வைக்கலாம். இக்கூட்டணிமூலமே ஆட்சியாளர்களை பதவியிலிருந்து இறக்கவும் முடியும். அவ்வாறான ஒரு கூட்டணிக்காக ஆயத்தங்களை மேற்கொள்வதுதான் முஸ்லிம் புத்திஜீவிகளின் தலையாய கடமை. அந்தக் கூட்டணிக்கு முஸ்லிம்களே தலைமை தாங்கவேண்டும் என்பது அவசியமில்லை. முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக் கட்சி தேவையுமில்லை. அந்தக் கட்சிகள்தான் இன்று முஸ்லிம்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.
அமெரிக்காவிலே எவ்வாறு கறுப்பின மக்கள் வெள்ளைக்காரரோடு சேர்ந்தே தமது உரிமைகளை வென்றெடுத்தார்களோ அதேபோன்ற ஒரு வழியைத்தான்; இலங்கை முஸ்லிம்களும் கைக்கொள்ள வேண்டும். ஆண் பெண் இணைந்த இளைய தலைமுறையொன்று அவ்வாறான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. அவர்களுக்குக் கைகொடுத்துதவுவது ஏனைய முஸ்லிம்களின் கடமையாகும். – Vidivelli