ஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: என்னை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர
ஜனாதிபதி கொலைச்சதி தொடர்பில் என்னை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என குறிப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச அதிகாரியாக செயற்படும் எனக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எனது கடமைகளுக்கு எதுவித இடையூறும் ஏற்படாதவிடத்து அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கொலைத் திட்டம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொடர் இருப்பதாக ஊடக சந்திப்பொன்றின் போது குற்றம்சாட்டியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் கருத்தினை நிராகரித்து கருத்து தெரிவிக்கையிலேயே, பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது பாரிய அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தமக்கு சார்பாக கருத்துக்களை கூறிவருதோடு, பல அரச அதிகாரிகள் மீது சேறு பூசும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானவர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் பல சந்தர்ப்பங்களில் உண்மைக்குப் புறம்பானவையாகவே காணப்படுகின்றது.
அவற்றுடன் அரசியல் நாகரிகமறியாத சில அரசியல் தலைமைகள் ஊடகங்களின் முன் என்ன கூறுகின்றோம் என்ற அறிவு இல்லாமல் பிதற்றுவதையும் காணமுடிகின்றது. இவ்வாறான தெளிவற்ற நிலையில் உரையாற்றுபவர்களின் கருத்துக்களை கவனத்திற்கொண்டு செயலாற்ற ஆரம்பித்தால் நாட்டின் நிலைமையும் போதையேறிய குடிகாரனை போலாகிவிடும்.
அவற்றுடன் உயர் பதவியிலுள்ளவர்கள் சிலரின் பிதற்றல்களுக்கு காதுகொடுப்பது கிடையாது. எனவே எனது கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வரையில் என்மீது சேறும் பூசுவோருக்கு எதிராக பொறுமை காப்பேன். ஆனால் அவை எல்லைமீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
-Vidivelli