முஸ்லிம் பிரதேசங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது ஏன்?

0 1,231

Dr. கமால் அப்துல் நாசர்

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொரோனா வைரஸின் பரவல் கூடுதலாக இருப்பதை எம்மால் காண முடிகின்றது. இந்த விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றன. முஸ்லிம் ஊர்களில் மாத்திரம் அதிகளவான பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றதா? பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் பொய்யாக காட்டப்படுகின்றதா? அல்லது வேறேதும் சதிகள் இடம்பெறுகின்றதா? என பல சந்தேகங்கள் எம்மவர்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கு மூலகாரணம் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதில் இருந்தே ஆரம்பமாகியிருக்கின்றது. இந்த நிலைமையினால் ஏனைய விடயங்களையும் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் வைத்தியர்கள் என்பதன் அடிப்படையில் பி.சி.ஆர் செய்யப்படும் முறைகள், அவற்றுக்கென வைத்தியசாலைகளில் உள்ள பொறிமுறைகள் மற்றும் இது தொடர்பாக வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஏனைய மருத்துவ முறைகளில் எந்தவிதமான சந்தேகங்களும் எங்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எங்களது முஸ்லிம் ஊர்களில் இவ்வாறான தொற்று நோய்கள் மிக இலகுவாக பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. உதாரணமாக டெங்கு நோயை எடுத்துக்கொண்டால் ஏனைய ஊர்களை விட முஸ்லிம் ஊர்களில் வேகமாக பரவுகின்றது. இருமல், தும்மல் போன்ற அடையாளங்களை ஏற்படுத்தும் காச நோய் போன்ற நோய்களும் ஏனைய ஊர்களை விட முஸ்லிம் ஊர்களில் வேகமாக பரவுகின்றன. இதே போன்றுதான் கொரோனாவும் இருமல் அல்லது தும்மல், கைகளை கழுவாமல் முகத்தை தொடுதல், ஒருவர் தொடுகை செய்த பகுதியை இன்னொருவர் தொடுதல் போன்ற காரணங்களால் மிக வேகமாக பரவுகின்றது. இதில் மிக முக்கியமாக சன நெரிசல் கூடுதலாக உள்ள பகுதிகளில் வேகமாக இந்த நோய் பரவுகின்றது.

முஸ்லிம் ஊர்களைப் பொறுத்தவரையில் சனநெரிசல்மிக்கதாகவும் வீடுகள் மிகவும் நெருக்கமானதாகவுமே அமைந்திருக்கின்றன. அத்துடன் நாங்கள் மிகவும் இறுக்கமான சமூக வாழ்வைக் கொண்டவர்கள். நாங்கள் அனைவருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்ளக் கூடியவர்கள். முஸாஹபா செய்வது, கைலாகு கொடுப்பது மற்றும் திருமணம் போன்ற வைபவங்களில் அதிகம் கலந்து கொள்வது போன்ற வழக்கங்கள் எம்மிடம் அதிகமாக உள்ளன. மேலும் வணக்கஸ்தலங்களில் அதிகம் சந்திக்கக் கூடியவர்களாகவும் வணக்கஸ்தலங்களை அதிகம் பாவிக்ககூடியவர்களாகவும் இருக்கிறோம். எனவே இப்படி வேகமாக பரவக்கூடிய ஒரு நோய் எங்களது சமூகத்திலும் வேகமாக பரவுவது வியக்கத்தக்க ஒரு விடயம் அல்ல.

ஏனைய சமூகத்தவர்களை விட எங்களது சமூகத்தவர்களுக்கு இந்த நோய் தொடர்பாக இருக்கும் பயம் மிகவும் குறைவு. ஏனையவர்கள் தேவைக்கு அதிகமாகவே பயப்பட்டு, அதிகமாகவே கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த நோயின் தீவிரத்தை அறிந்து சந்திப்புகளை குறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எங்களது சமூகத்தில் உள்ளவர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதும் இந்த நிலைமைக்கு காரணமாக அமைகின்றது. அதற்காக தேவைக்கு அதிகமாக பயப்பட வேண்டும் என்பதில்லை. தேவைக்கு அதிகமான பயத்தை விடும் அதேவேளை, இந்த நோய் தொடர்பாக அறவே கவலையில்லாமல் இருக்கும் நிலையில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும்.

இதை விட மிக முக்கியமான விடயம் என்னவென்றால் எமது சமூகத்தினர் உடலுக்கு சரியாக வேலை கொடுப்பதில்லை. பெரும்பாலானவர்கள் உடற்பருமன் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.  எம்மவர்களுடைய உடல் தகுதி (Physical Fitness) மிகக்குறைவாக காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலகுவாக நோய் தொற்றக்கூடிய நிலையும் அவ்வாறு நோய் தொற்றினால் வெகுவாக பாதிக்கப்படக்கூடிய நிலையும் எம்மவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இது கொரோனாவுக்கு மாத்திரம் அல்ல, இருக்கின்ற எல்லா நோய்களுக்கும் பொருந்தும். முக்கியமாக பெண்கள் நடப்பது கூட குறைவு. எந்தவித உடற்பயிற்சியிலும் ஈடுபடாத ஒரு சமூகமாகவே நாங்கள் வாழப்பழகி விட்டோம்.

மேலும் எமது சமூகத்தில் உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவு. ஏனென்றால் அதிகமாக நீரிழவு நோய், சிறுநீரக நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டவர்கள் பரவலாக எமது சமூகத்தில் இருக்கிறார்கள். இதனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அதிகமான சாத்தியங்களும் அவ்வாறு ஏற்படும்பட்சத்தில் இலகுவாக மரணம் எற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாக இருக்கின்றன. எனவே உடற்பயிற்சிகள் செய்து உடலை திடகாத்திரமாக வைத்துக்கொண்டால் நோயெதிர்ப்பு சக்தியினை கூட்டிக்கொள்ளலாம்.

விட்டமின் டி குறைபாடு உடையவர்கள் எமது சமூகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். நாம் வெளியே சென்று சூரிய வெளிச்சத்தில் வேலை செய்தால்தான் எங்களுக்கு விட்டமின் டி அதிகமாக கிடைக்கும். விட்டமின் டி அதிகமாக உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகும். எனவே விட்டமின் டி குறைபாடும் எமது சமூகத்தில் அதிக கொரோனா நோய் தொற்றாளர்கள் அதிகரித்ததற்கு ஒரு காரணமாகும்.

நீங்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஒரு மணித்தியாலம் சூரியவெளிச்சத்தை பெறாதவராக இருந்தால் விட்டமின் டி வில்லைகளை சாப்பிடுவதன் ஊடாக சூரியவெளிச்சத்தை பெற்றுக்கொள்ளலாம். நோய்த்தொற்று ஏற்பட்டதன் பின்னர் இதை செய்வதில் பயனில்லை. முடிந்தவரை சூரிய வெளிச்சத்தின் ஊடாக விட்டமின் ‘டி‘ யை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது எமது சமூகம் இலகுவாக நோய்த்தொற்றை பெற்றுக்கொள்ளக்கூடிய சமூகமாக இருப்பதை எங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது. எனவே நாம் வீண் சந்தேகங்களில் இருந்து வெளிவந்து எமது சமூகத்தில் இந்த விடயங்களை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதைப்பற்றி கவனிக்க வேண்டும். நாங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மாஸ்க் அணிவது மற்றும் கைகளை கழுவுவது போன்ற விடயங்களை பின்பற்ற வேண்டும். அத்துடன் முடிந்தவரை வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். நிலைமை சுமுகமாகும் வரை பக்கத்து ஊர், பக்கத்து வீடுகளுக்குக் கூட செல்லாமல் யாரையும் சந்திக்காமல் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் வெளியில் சென்று விளையாடுதல், கூடி நின்று கதைத்தல் என்பவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிட்ட சில காலத்திற்கு திருமணம் மற்றும் ஏனைய வைபவங்களை இடைநிறுத்தி ஒரு ஒழுங்கைப் பேணினால் நாம் இந்த தொற்றில் இருந்து இலகுவாக விடுபடலாம்.

நாம் அவதானித்ததன்படி 80 வீதம் நோய்த்தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து இன்னொருவருக்கு தொற்று பரவும். அதனால்தான் நோய் அறிகுறி இல்லாதவர்களும் சிகிச்சை நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் நோயின் தாக்கம் கூடுதலாக உள்ள வயதானவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகளுக்கு தொற்று பரவி அவர்களுக்கு மரணம் ஏற்படும்.

எங்களுக்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் எங்களால் இன்னொருவர் வெகுவாக பாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதற்காகவாவது கொஞ்ச காலத்திற்கு கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு நாம் செயற்பட வேண்டும்.  – Vidivelli

தொகுப்பு: எம்.ஏ.எம். அஹ்ஸன்

 

Leave A Reply

Your email address will not be published.