பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறையால் கொவிட்-19 பரவும் ஆபத்து மிக மிக குறைவு
வைரஸியல் பேராசிரியர் மலிக் பீரிஸ் விளக்கமளிப்பு
எம்.ஐ.அப்துல் நஸார்
கோவிட் -19 உடன் இறக்கும் நோயாளியை பாதுகாப்பாக அடக்கம் செய்யக்கூடிய இடம் இலங்கையில் இல்லை எனக் கூறுவது விஞ்ஞானபூர்வமானது அல்ல. பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறைகளால் கொவிட்-19 பரவும் ஆபத்து ‘மிக மிகக் குறைவு’ என பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களை தகனம் செய்வது மற்றும் அடக்கம் செய்வது பற்றிய விவாதத்தில் வெவ்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், விஞ்ஞானரீதியான நிபுணத்துவ உண்மைகளை நேரடியாகப் பெறுவதற்காக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பீடத்தின் வைரஸியல் பேராசிரியர் மலிக் பீரிஸின் கருத்தை சண்டே டைம்ஸ் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இன்புளூவென்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் (SARS-CoV, MERS-CoV மற்றும் SARS-CoV-2) மற்றும் கொவிட்-19 இற்கான உறுதிப்படுத்தும் சோதனையை வழங்குவதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஹொங்கொங் பல்கலைக்கழக உசாவுகை ஆய்வுகூடப் பணிப்பாளரான பேராசிரியர் மலிக் பீரிஸ் பின்வருமாறு கூறுகின்றார்.
• அடிப்படை உண்மை – இறந்த செல்களில் வைரஸ்கள் மீளுருவாக்கம் பெற முடியாது. அதாவது வைரஸ் மீளுருவாக்கம் மரணத்துடன் நின்றுவிடுவதோடு மீதமுள்ள தொற்று வைரஸ்கள் படிப்படியாக இறக்க ஆரம்பிக்கின்றன.
• அறிகுறிகள் தொடங்குவதற்கு முன் 2-3 நாட்கள் மற்றும் அறிகுறிகள் தோன்றிய 4-5 நாட்களுக்கு பின்னரும் ஒரு நோயாளியின் தொற்று அதிகபட்சமாகக் காணப்படும். பெரும்பாலான நோயாளிகள் நோயின் காரணமாக (பொதுவாக 2 வாரம் அல்லது அதற்குப் பின்னர்) இறப்பதால், அவர்கள் இறக்கும் போது மிகவும் குறைவான தொற்று நிலைமையிலேயே இருப்பார்கள்.
• நேர்மறையான (Positive) RT-PCR என்பது தொற்று வைரஸைக் குறிக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வைரஸின் வளர்ச்சி மட்டுமே தொற்று வைரஸ் இருப்பதை நிரூபிக்கும். இதனால்தான் உலக சுகாதார நிறுவனம் குணமடைந்த நோயாளிகளுக்கு அறிகுறி தோன்றிய பின்னர் 10-14 நாட்கள் தொடர்ந்து ஆர்டி-பி.சி.ஆர் நேர்மறையாக இருந்தாலும் கூட, மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற்றப்படலாம் என பரிந்துரை செய்தது அதனை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அறிகுறி தோன்றிய 10 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் வெளியேற்றப்படுவதை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது. எனவே ஒரு ஆர்டி-பி.சி.ஆர் நேர்மறையாக மாறுவதால் வைரஸ் தொற்று இருப்பதாக அர்த்தமல்ல.
• கொவிட்-19 என்பது சுவாச பாதையால் பரவும் ஒரு நோய். இது நீரினால் பரவும் நோய் அல்ல. இதுவரை நீர் மூலம் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், ஒரு முன்னெச்சரிக்கையாக, நெருப்புக் காய்ச்சல், வாந்திபேதி, அசுத்தமான நீர் அல்லது பழைய உணவை உட்கொள்வதன் மூலம் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா அல்லது பிற வயிற்றுப்போக்கு நோய்கள் உள்ளிட்ட அனைத்து நோய்க்கிருமிகளாலும் தேவையற்ற விதத்தில் நீர் மாசுபடுவதைத் தவிர்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். நீரினால் பரவும் நோய்களுள் கொவிட்-19 நாம் கவலைப்படும் அளவிற்கு நோய்ப் பட்டியலில் முதலிடத்தில் இல்லை. நாட்டின் சில பகுதிகளில் நீர்மட்டம் மிக உயரமானதாகக் காணப்படுமாயின் அங்கு மயானங்கள் இருக்கக் கூடாது. ஆனால் நெருப்புக் காய்ச்சல், வாந்திபேதி, ஷிகெல்லா அல்லது கொவிட்-19 உள்ளிட்ட தொற்றுநோயினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு இந்த நாட்டின் எந்தப் பகுதியும் பொருத்தமானதல்ல எனக் கூறுவது அபத்தமானது.
• நீர்புகாவண்ணம் சுற்றப்பட்ட நிலையில் மண்ணில் கிருமிநாசினி இரசாயனங்கள் ஆகியவற்றை மண்ணில் சேர்த்து அடக்கம் செய்வதால் இறந்த உடலில் எஞ்சியிருக்கும் வைரஸ் வெளியேறும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
• இறந்த உடலில் இருந்து கசியக்கூடிய எஞ்சிய வைரஸ் இருந்தால், அவை மண்ணின் வழியாகச் செல்வதால் அது மண்ணால் வடிகட்டப்படும்.
• இந்த தடைகள் அனைத்திலிருந்தும் மீறி நிலத்தடி நீரில் சிறிய அளவில் வைரஸ் கலக்கிறது (மிகவும் சாத்தியமற்றது) என ஒரு ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், நிலத்தடி நீரின் பெரிய அளவு காரணமாக அவை நீர்த்துப் போகும். ஒரேயொரு வைரஸ் கிருமியினால் மாத்திரம் கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்படுத்தப்படுவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரியதொரு அளவில் வைரஸினை பெறுவதால்தான் தொற்றுப் பாதிப்பு ஏற்படுகின்றது. சுவாச பாதையால் தொற்று ஏற்படுவதோடு ஒப்பிடுகையில், தண்ணீரை அருந்துவதால் பெருமளவிலான கிருமிகள் உள்ளெடுக்கப்படும். எனினும் அவை வைரஸால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சுவாசத் தொகுதி செல்களுக்குச் செல்வதற்கு முன்னதாக அவற்றுள் பெரும்பாலானவை நேரடியாக வயிற்றுக்குள் சென்று இரைப்பை அமிலத்தன்மையால் கொல்லப்பட்டுவிடும். காற்றுவழித் தொற்று என்பதில் இதுதான் நடைபெறுகின்றது.
• இலங்கையில் சில அசாதாரண புவியியல் அம்சங்கள் இருப்பதனால், உண்மையில் நிலத்தடி நீர் மாசுபடுதலில் பெரிய ஆபத்து இருக்கிறது என வைத்துக்கொண்டால், நிலத்தடி நீர் ஏற்கனவே பெரிதும் மாசுபட்டிருக்க வேண்டும். ஏனெனில் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களின் கழிவுகளில் அக் கிருமிகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தொற்று ஏற்பட்ட பெரும்பாலான மக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டதன் பின்னர் பல நாட்கள் அல்லது ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர், அந்த காலப் பகுதியில் அவர்கள் வைரஸைக் கொண்ட கழிவுகளை வெளியேற்றுகின்றனர். இறந்த உடலில் காணப்படும் வைரஸை விடவும் இவை அதிகமானதாக இருக்கலாம். இலங்கையில் பெரும்பாலான மக்கள் கழிவுநீரை அகற்றுவதற்காக குழிகளைப் பயன்படுத்துவதால், கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னர் பலர் இந்த வசதிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், நீர் மாசுபாடு ஒரு பிரச்சினையாக இருக்குமாக இருந்திருந்தால், அது ஏற்கனவே பல முறை நடந்துவிட்டது என்றே கருத வேண்டும்.
• அனைத்து அல்லது பெரும்பாலான கொவிட்-19 நோயாளிகள் தற்போதுள்ள தொற்றுக் கொத்தணிகளை எம்மால் கண்காணிக்க முடியும் என எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் (அதாவது ‘சமூகத் தொற்று’ இல்லை), கொவிட்-19 கிருமி, நீர் வழியாக பரவியதற்கான எந்த ஆதாரமும் காண்பிக்கப்படவில்லை. அப்படியானால், அடக்கம் செய்வதன் மூலம் நீர் மட்டம் மாசுபடுவதற்கான மிகவும் குறைவான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமான மற்றும் புறக்கணிக்கக்கூடிய ஆபத்து குறித்து நாம் ஏன் கவலைப்படுகிறோம்?
• கொவிட் -19 இனை விட ஏனைய தொற்று நோய்களில் பாதிப்பு அதிகம், அதனால் நான் மேலே கூறிய காரணங்களுக்கமைவாக ஓர் உடலை நீர் மட்டத்திலோ அல்லது அதற்கு அருகிலோ அடக்கம் செய்வதை யாரும் பரிந்துரைக்கவில்லை. ஆனால், பாதுகாப்பாக அடக்கம் செய்வதைச் சாத்தியமாக்கும் அளவிற்கு நீர் மட்டம் தரை மட்டத்திற்கு கீழே போதுமானதாக இலங்கையின் எந்தப் பகுதியும் இல்லை எனக் கூறுவது அபத்தமானது.
பேராசிரியர் பீரிஸ் திட்டவட்டமாக இவ்வாறு கூறுகிறார்: ‘இந்த காரணிகளையெல்லாம் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, கோவிட் -19 உடன் இறக்கும் நோயாளியை பாதுகாப்பாக அடக்கம் செய்யக்கூடிய இடம் இலங்கையில் இல்லை எனக் கூறுவது விஞ்ஞானபூர்வமானது அல்ல. உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல நாடுகள் தனிப்பட்ட சமய நம்பிக்கைகளுக்கு அமைவாக அடக்கம் செய்வதில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றன. நாட்டில் எந்தெந்த பகுதிகளில் இத்தகைய அடக்கத்தினை பாதுகாப்பான முறையில் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதை அடையாளம் காண்பதும் இரசாயன தொற்று நீக்கம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் புத்திசாலித்தனமானதாகும், ஆனால் இலங்கையில் எங்கும் பாதுகாப்பான அடக்கம் சாத்தியமில்லை எனக் கூறுவது விஞ்ஞானபூர்வமானது அல்ல.
‘தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு (கொவிட்-19 போன்றவை) விதிமுறைகளை விஞ்சிய தேவைப்பாடுகள் உள்ளன. இதற்கு சமூக பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது 2014 இல் மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் நெருக்கடியின் போது கற்றுக்கொண்ட ஒரு தெளிவான பாடமாகும். சமூகங்கள் மீது நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சமூக ஆதரவை இழக்கும் ஆபத்து காணப்படுகின்றது. மேலும் இது பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அடக்கம் செய்வது தொடர்பில் உறுதியான மத நம்பிக்கையினைக் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சர்ச்சை, பரவல் அதிகரித்துவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக பங்களிப்பை இழக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தும் என நான் அஞ்சுகிறேன். எனவே, ஆபத்தை குறைப்பதை விட, இந்தக் கொள்கை ஏற்கனவே ஆபத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது.
நிபுணர்களின் வழிகாட்டுதல்களை முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மீளப் பெற்றுள்ளார், இது அடக்கம் செய்வதில் ஆபத்து இல்லை என்பதைக் காட்டுகின்றது.
கொவிட்-19 இனால் இறப்பவர்களின் அடக்கம் மற்றும் தகனம் தொடர்பான விவாதம் தொடர்கிறது, எனினும் விஞ்ஞானம் தெளிவாக இருக்கின்றது.
‘நிபுணத்துவ தொழில்நுட்பக் குழுவின்’ முடிவு என கூறப்படும் விடயத்தினை சுகாதார அதிகாரிகள் மறைக்க முயன்றுகொண்டிருக்கையில், சண்டே டைம்ஸ் விஞ்ஞானபூர்வமான பதிலுக்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கின்றது.
கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த எவரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்பதில் உலக சுகாதார நிறுவனம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக உள்ளது என்பதை சண்டே டைம்ஸ் அறிந்துகொண்டுள்ளது.
முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் நிஹால் அபேசிங்க, நான்கு அறிக்கைகளை மேற்கோள் காட்டுகிறார். மூன்று உலக சுகாதார நிறுவனத்தினுடையவை, நான்காவது அறிக்கை தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்தினுடையது. இவை அனைத்தும் கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை என்பதையே குறிப்பிடுகின்றன. – Vidivelli