கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை உடன் நிறுத்தவும்
- கேலிச் சித்திரத்தில் எந்த தவறும் இல்லை ; இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்
எம்.எப்.எம்.பஸீர்
விடிவெள்ளி பத்திரிகைக்கு எதிராகவும், அப்பத்திரிகையில் கேலிச் சித்திர கலைஞராக செயற்படும் இளம் கலைஞருக்கு எதிராகவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உடன் நிறுத்த வேண்டும் என இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டே அச்சங்கம் அதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம், விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கேலிச் சித்திரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
‘உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், இடம்பெற்ற சம்பவமொன்றினை பயிற்சி நிலை கேலிச் சித்திர கலைஞர் ஒருவர் கேலிச் சித்திரமாக வரைந்திருந்ததுடன், அதனை விடிவெள்ளி பத்திரிகை பிரசுரித்திருந்தது. இந் நிலையில் அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இலங்கையின் அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். கேலிச் சித்திர கலைஞர் அந்த உரிமையினையே, தனது கேலிச் சித்திரம் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். அந்த கேலிச் சித்திரம், வெறுப்பு உணர்வை தூண்டும் வகையிலோ அல்லது ஒருவரை அவமதிக்கும் வகையிலோ அமைந்த கேலிச் சித்திரம் அல்ல. இந் நிலையில் சிலர், அந்த கேலிச் சித்திர கலைஞருக்கு எதிராக சேறு பூசும் வண்ணமும், பத்திரிகையை புறக்கணிக்குமாறும் மிகத் திட்டமிட்டு பொது மக்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதையும் நாம் அவதானித்துள்ளோம்.
நாம் அனைவரது உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் அமைப்பினர். ‘நவரசம்‘ கவிதை புத்தகத்தின் ஆசிரியர் அஹ்னாப் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கூட அண்மையில் நாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்தோம். இன மத பேதங்களுக்கு அப்பால், தவறை தவறென காணவும், நல்ல விடயங்களை நல்லவையாகவும் காண வேண்டும். கேலிச் சித்திர கலைஞருக்கும் விடிவெள்ளி பத்திரிகைக்கும் எதிராக முன்னெடுத்து செல்லப்படும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை கைவிடுமாறு நாம் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் என்ற ரீதியில் கோருகின்றோம்.
திட்டமிட்ட குழுக்களுக்கு பயந்து, பத்திரிகைகளை கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டாம் என நாம் கோருகின்றோம். பத்திரிகையின் உள்ளடக்கத்தை வைத்து ஒருவருக்கு அதனை வாங்குவதா இல்லையா என தீர்மானிக்கலாம். இவ்வாறான கேலிச் சித்திரங்களுக்கு எதிராக நிற்கும் பலர், இன, மதவாத தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எதிராக நிற்பதில்லை. தான்தோன்றித் தனமான கைதுகளுக்கு எதிராக நிற்பதுமில்லை. நவரசம் ஆசிரியர் கைது செய்யப்ப்ட்டமை தொடர்பில் இன்னும் ஒரு வசனமேனும் பேசவில்லை. கேலிச் சித்திரத்தை விட இந்த நிலைப்பாடு மிக வேடிக்கையாக உள்ளது.’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. – Vidivelli