உண்மையை உரைப்பதில் பின்னிற்கப் போவதில்லை

0 751

இலங்கையில் முஸ்லிம் சமூகம் மீதான நெருக்குவாரங்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன. குறிப்பாக ஜனாஸா எரிப்பு விவகாரம் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து சர்வதேச ஊடகங்களும் பிரபலங்களும் கூட குரல்கொடுத்து வருகின்றனர் மறுபுறம் உள்நாட்டிலும் இந்த விவகாரம் பலத்த எதிர்ப்பலைகளைச் சந்தித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள மக்களும் வாய்திறக்க ஆரம்பித்துள்ளனர்.  அடுத்த வருட ஆரம்பத்தில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இந்த விவகாரம் இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மனித உரிமை அமைப்புகள் இதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த விடயத்தில் இன்னமும் முரண்டுபிடிக்காது அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இது இவ்வாறிருக்க, கடந்த வார விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தொடர்பான சில ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து சில தெளிவுகளை வழங்க வேண்டியது எமது கடமை எனக் கருதுகிறோம்.

குறித்த ஆக்கங்கள் புனைவுகள் அல்ல. மாறாக முழுக்க முழுக்க உண்மைகளையும் யதார்த்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதை வாசகர்கள் நன்கறிவார்கள்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள எந்தவொரு அரசியல், மார்க்க, சிவில் அமைப்புகளையும் நேரடியாக ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ விடிவெள்ளியின் பணியல்ல. மாறாக அவர்களின் சமூக நல செயற்பாடுகளுக்கு வலுச் சேர்ப்பதும் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் ஊடாக அவர்களது பணியைச் செப்பனிடுவதுமே எமது கடமை எனக் கருதுகிறோம்.

அந்த வகையில் முஸ்லிம் அரசியல்கட்சிகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைக்கும் நாம் அவர்களது கருத்துகளுக்கும் தாராளமாக இடம்கொடுக்கிறோம். இலங்கை முஸ்லிம்களின் மார்க்க விவகாரங்களுக்கு தலைமை வழங்கும் அமைப்பு என்ற வகையில் உலமா சபையின் சகல செய்திகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நாம் அவ்வமைப்பின் குறை நிறைகளையும் தைரியமாகச் சுட்டிக்காட்டி வருகிறோம். அதற்கான முழு உரிமையும் எமக்குள்ளதாக கருதுகிறோம்.

அதன் ஒருபடியாகவே கடந்த வாரம் உலமா சபை மீதான விமர்சனங்களை கார்ட்டூன் வடிவில் முன்வைத்திருந்தோம். உலமா சபைத் தலைவரை இதற்கு முன்னரும் நாம் பல தடவைகள் கார்ட்டூனாக வரைந்துள்ளோம் என்பதையும் அப்போது எவரும் இவ்வாறான எதிர்ப்புகளை முன்வைக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறித்த கார்ட்டூனானது ஊடக தர்மங்களுக்கு உட்பட்டது என்பதையும் அது இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள. சகல பத்திரிகைகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடே என்பதையும் மிகுந்த பொறுப்புடன் சொல்லிக் கொள்ள விளைகிறோம். அத்துடன் அதன் உள்ளடக்கம் கூட புனைவுகள் அன்றி, நடந்த நிகழ்வுகளின்  நேரடிப் பிரதிபலிப்பே என்பதை அதனை மேலோட்டமாக அவதானிப்பவர்களால் கூட புரிந்து கொள்ள முடியுமாகவிருக்கும்.

குறித்த கார்ட்டூனை முன்வைத்து விடிவெள்ளி தொடர்பில் சிலரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்ப்பிரசாரங்கள்  வெளுக்க ஆரம்பித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் எமது பணியை ஆதரித்து குரல் கொடுத்த அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறோம். அந்த கார்ட்டூனின் உள்ளடக்கம் தொடர்பில் சிலருக்கு இருந்த சந்தேகங்கள் இன்றைய விடிவெள்ளி மூலம் நீங்கியிருக்கும் என நம்புகிறோம்.

விடிவெள்ளி எந்தவொரு அரசியல் அல்லது இயக்க முகாமையும் சாராது நடுநிலை பேணுகின்ற ஊடகம் என்பதை அனைவரும் நன்கறிவர். அதேபோன்று யாரினதும் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிகின்ற ஊடகமும் அல்ல என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

விடிவெள்ளி எப்போதும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளித்தே வந்துள்ளது.  எமது பத்திரிகை தொடர்பில் தங்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவற்றை  தபாலிலோ மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அல்லது எமது அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்திக்கலாம். அதற்கான வாயில்கள் திறந்தே உள்ளன.

இப் பின்னணியில் நாம் எமது ஊடகப் பயணத்தை மேலும் துணிச்சலுடன் முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். முஸ்லிம் சமூகம் ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட உரிமைசார் அடக்குமுறைகளைச் சந்தித்துள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும். அதுவே இப்போது நம்முன்னுள்ள பணியாகும்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.