ஜனாஸாக்களை எரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

0 1,594

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உறவினர்களால் எரிப்பதற்கு சம்மதம் வழங்கப்படாத சடலங்களை எரிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய ‘கொழும்பு கெஸட்’ இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கமைய, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழு தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரை இந்த செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கொங்கிறீட் இடப்பட்ட குழிகளில் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதற்கான யோசனையை சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் இது தொடர்பான தீர்மானம் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை வரை 9 ஜனாஸாக்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ‘கொழும்பு கெஸட்’ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறவினர்களால் எரிப்பதற்கு சம்மதம் வழங்கப்படாதிருந்த மொத்தம் 20 ஜனாஸாக்களில் 11 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் சம்மதமின்றி பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுள் பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் ஜனாஸாவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelliv

Leave A Reply

Your email address will not be published.