ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

உயர் நீதிமன்றில் இரு தினங்களும் நடந்தது என்ன?

0 1,028

எம்.எப்.எம்.பஸீர்

கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்)  உயர் நீதிமன்றம் கடந்த 30.11.2020 திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் இந்த 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 5 மனுக்கள் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக ஒரு மனுவும்,  முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களாலும் இந்த 11 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக சட்டத்தரணி சபீனா மஹ்ரூப்  ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரசன்னமானார். இதனைவிட,  சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த 5 மனுக்களில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி  புலஸ்தி ஹேவாவசம் முன்னிலையானார். இதனைவிட  கொவிட் தொற்றுக்குள்ளாகி  மரணமடைந்த நிலையில் தகனம் செய்யப்பட்ட இருவரின் மகன்மாரான  பயாஸ் யூனுஸ் மற்றும்  ரபாய்தீன் நெளபர் சார்பில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் அஜராகினர்.

இதேவேளை  கத்தோலிக்கர்களான ஓசல லக்மால் சார்பில் தாக்கல்  செய்யப்பட்ட மனுவில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும்,  சிரந்த ரன்மல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ரவும் ஆஜராகினர். இம்மனுக்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனைவிட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான  பைசர் முஸ்தபா,  நிசாம் காரியப்பர் உள்ளிடோரும் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயாவும் மன்றில் வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் பிரசன்னமாகினர்.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் அனைத்து மனுக்களிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே ஆஜரானார்.

இந் நிலையில் முதலில் எஸ். சி. எப்.ஆர். 502 எனும் மனு  பரிசீலனைக்கு வந்தது. முற்பகல் 10.40 மணியளவில் அம்மனு விசாரணைக்கு வந்தது. அம்மனு சார்பிலும் பிறிதொரு மனு சார்பிலும் ( முஸ்லிம், கத்தோலிக்க ஒருவர்) சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை ஆரம்பித்தார். அவரது வாதங்கள் சுமார் இரு மணி நேரம் வரை நீடித்தது.

இதன்போது முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும், உயிரிழந்த பின்னர் ஒரு நாள் மீள தாங்கள் எழுப்பப்படுவோம் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளதாக  சுட்டிக்காட்டிய அவர், தமது நம்பிக்கை பிரகாரம் செயற்படுவதற்கான உரிமை அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரை ஊடாகவும்  அதுசார்ந்த மதத்தை தடையின்றி பின்பற்றுவதற்கான உரிமை 14 ஆவது உறுப்புரை ஊடாகவும் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டினார்.

அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பு ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்த  அவசர கால நிலைமையின் போதே முடியும் எனவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

அத்துடன்  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என தெரிவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனத்தின்  வழிகாட்டலையும் விஞ்சிய செயற்பாடுகலின் பின்னணி என்ன என கேள்வி எழுப்பினார்.

கொரோனா காரணமாக முதல் முஸ்லிம் நபர்  ஒருவர் கடந்த மர்ச் 30 ஆம் திகதி உயிரிழக்கும் போதும், உலக சுகாதார  ஸ்தாபனத்தின் ஆலோசனைகள், சுகாதார சேவைகள் பணிமனையின் இணையத்தில் இருந்த போதும்,  உடனடியாக இரவோடிரவாக அது மாற்றப்பட்டது எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது என அவர் உயர் நீதிமன்றில் கேள்வி எழுப்பி அதன் நோக்கத்தை  நியாயமற்றது என விளக்கினார்.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்  தனது வாதங்களை முன்வைத்தார். இதுவரை கொரோனவால் பாதிக்கப்படும் நபர்களின் சடலங்களை எரிப்பதால் அந்த வைரஸ் பரவும் என எந்த ஆய்வுகள் ஊடாகவும் கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக  தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றில் வாதிட்டார்.

இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட  அபிவிருத்தி அடைந்த நாடுகளில்  கூட கொவிட் தொற்றினால் உயிரிழந்த தமது உறவுகளை அடக்கம் செய்ய அனுமதியுள்ள நிலையில், அங்கு அதனூடாக வைரஸ் பரவியதாக எந்த  விடயமும் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழும் ,  அடக்கம் செய்ய அனுமதியுள்ளதாக சுட்டிக்காட்டி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாட்டில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்தும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் கழிவுகள் திறந்த சூழலுக்கே செல்வதாக சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலை புறக்கணித்து செயற்படுமளவுக்கு இலங்கையில் இந்த விடயத்தில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவுபூர்வமான உறுதிப்படுத்தல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பிய   சுமந்திரன், அவ்வாறான ஆய்வுகள் இருப்பின் அதனை உலக சுகாதார ஸ்தாபனமே தனது வழிகாட்டலில் உள்ளீர்த்திருக்கும் என்றார்.

இதன்போது இந்தியாவின்  மும்பை மற்றும் கல்கத்தா மேல் நிலை நீதிமன்றன்றங்களில், கொவிட் மரணங்களின் போது சடலங்களை எரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், அந் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இலங்கையை உதாரணம் காட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அம்மனுக்களை,  உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை விட சிறந்ததாக இலங்கையின் நடைமுறையை ஏற்க முடியாது என கூறி  அந் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்  குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

இந் நிலையில்  மனித உரிமை என்பது, இறந்த ஒருவரின் சடலத்துக்கும் உள்ளது என அந்த தீர்ப்புக்களில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், கெளரவமான இறுதிக் கிரியைகள் ஒவ்வொருவரினதும் உரிமை என வாதிட்டார்.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2170/8  ஆம் இலக்க வர்த்தமானி சட்டவிரோதமானது என வாதிட்ட சுமந்திரன், மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறும், தற்காலிக நிவாரணமாக உடனடியாக சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கோரினார்.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளான  பைசர் முஸ்தபா,  நிசாம் காரியப்பர் ஆகியோர் உணர்வுபூர்வமாக மன்றில் வாதங்களை முன்வைத்தனர். மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும்,  தனகம் மட்டும் செய்யப்படல் வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் அதனால் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்ட வலுவற்றது எனவும் வாதிட்டார். ஏனைய சட்டத்தரணிகளும் அதனை ஒத்த வாதங்களையே மன்றில் கொண்டு வந்தனர்.

இந் நிலையில் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரில் புள்ளே வாதங்களை ஆரம்பித்தார். சடலங்களை தகனம் செய்யும் தீர்மானம் எந்தவொரு மதம், இனத்தவரை வெறுப்பூட்டுவதற்காக அல்லது பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என குறிப்பிட்ட நெரின் புள்ளே, அது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.  கொவிட் தொற்றினால் மரணமடைபவரை   அடக்கம் செய்யலாம் என வழிகாட்டல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டிருந்தாலும்,  1998 ஆம் ஆண்டு அந்த ஸ்தாபனம் சடலங்கள் ஊடாகவும் வைரஸ் பரவலாம் என்ற  கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.

இதனையடுத்து இம் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் மறுநாள் வரை ஒத்தி வைக்கப்பட்டன. மறுதினமும் பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே  வாதங்களை தொடர்ந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில்  விஷேட வைத்திய நிபுணர்கள்,  விஞ்ஞானிகள் தொடர்ந்தும் பரிசோதனைகளை  முன்னெடுத்துவரும் நிலையில்,  சடலங்களை அடக்கம் செய்வதூடாக வைரஸ் பரவாது என  முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்ற அறைக்குள் இருந்து கூறுவதை ஏற்க முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே வாதிட்டார்.

சடலங்களை எரிக்கும் தீர்மானத்தை எடுக்க முன்னர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உரிய தொழில் நுட்பக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளார். அந்த தொழில்நுட்பக் குழுவின்  பரிந்துரைக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது எந்த மதத்தையும், இனத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவல்ல.

உலக நாடுகளில் அடக்கம் செய்வது குறித்து எந்த தடைகளும் இல்லை என்பதற்காக  எமது உள்ளூர் நிபுணர்களை நாம் நிராகரிக்க முடியாது.  உலக சுகாதார ஸ்தாபனம், அடக்கம் செய்வது, தகனம் செய்வது இரண்டையும் பரிந்துரைத்திருந்தாலும், உள்ளூர் நிபுணர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற  தடையேதும் இல்லை.   தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம், முழு பொது மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒன்று. எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானதே என வாதிட்டார்.

இதனையடுத்து இடையீட்டு மனுதாரர்கள் இருவர் மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், இடையீட்டு மனுதாரர் ஒருவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன வாதிட்டார்.  அவரும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவான  குறித்த வர்த்தமானியை தடை செய்யக் கூடாது என வாதிட்டார். இதனையடுத்து  மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அந்த வாதங்களுக்கு பதில் வாதங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக  ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் உள்ளிட்டோரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான  விரான் கொரயா, புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்டோரும்  பதில் வாதங்களை முன்வைத்தனர்.

இதன்போது, உலக நாடுகளில்  கொரோனாவால் மரணிப்போர் அடக்கம் செய்யப்படும் நிலையில், அங்கு அது குறித்து ஆராய்ந்து அனுமதியளித்துள்ள நிபுணர்களின் ஆய்வுகள் தொடர்பில் சட்டத்தரணிகள் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந் நிலையிலேயே, வாதங்களின் நிறைவில் 10 நிமிடங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்த பின்னர், மீள மன்றின் நடவடிக்கைகளை ஆரம்பித்து, குறித்த மனுக்களை விசாரணைக்கு ஏற்காது நிராகரிப்பதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அறிவித்தார். மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையின் அடிப்படையிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக காலத்துக்கு காலம் திருத்தப்பட்டமைக்கு அமைவாக 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள  தானியங்களை களஞ்சியம் செய்தல் மற்றும் அங்கிலொஸ்டோமியாசிஸ்  ஒழுங்கு விதிகளை மேலும் திருத்துவதாக  சுட்டிக்காட்டி  2170/8   எனும் வர்த்தமானி கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டம் எனும் தலைப்பின் கீழ் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதில்  முதல் மூன்று திருத்தங்களாக 46,47 மற்றும் 48 ஆம் ஒழுங்கு விதிகளில் உள்ள சில சொற்பதங்கள் திருத்தப்பட்டிருந்த நிலையில்,  பிரதானமாக  நான்காவது அம்சமாக 61 ஆவது ஒழுங்கு விதியுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டிருந்தன.   61. அ எனும் புதிய பிரிவூடாக கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின் பிரேதத்தை தகனம் செய்தல் எனும் விடயம் பேசப்பட்டுள்ளது.

அதன்படி 61 ,62 ஆம் ஒழுங்கு விதிகளில் எது எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19 தொற்றினால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் பிரேதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தரவுகளுக்கு அமைய, உயிரியல் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில்  800 முதல் 1200  பாகை செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை எரித்தல் வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு எரித்தல் அல்லது தகனம் செய்யும் செயற்பாடானது  உரிய அதிகாரியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுடலை அல்லது இடத்திலேயே இடம்பெற வேண்டும் என அந்த வர்த்தமானியின் 4 ஆவது பிரிவின் 1. அ, ஆ பகுதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2170/8  ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (2) ஆம் பிரிவின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த அல்லது  அந்த தொற்று காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் பிரேதத்தை, தகனம் செய்தல் தொடர்பில் உரிய அதிகாரியினால் நியமிக்கப்படும் அதிகாரி தவிர்ந்த வேறு எவரிடமும் கையளிக்கலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 (3) ஆம் பிரிவின் பிரகாரம், பிரேதத்தை தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் உடை, மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சவப் பெட்டியுடன் சேர்த்து எரித்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2170/8  ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (4) ஆம் பிரிவில், மீள பயன்படுத்த முடியுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பின் அவற்றை சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உரிய உத்தரவுகளுக்கு அமைய தொற்று நீக்கல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் 4 (5) ஆம் பிரிவில் பிரேதத்தின் சாம்பலை, உறவினர்கள் கோருவார்களாயின், அவர்களுக்கு கையளிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.