‘பள்ளிவாசலை மினாராவை உள்ளடக்கி கட்டமுடியாது. அவ்வாறு நிர்மாணித்தால் மினாராவில் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகும். மினாராவை நிர்மாணிக்க சிவில் விமான சேவை திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்று வாருங்கள் என்று கூறி நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசல் கட்டட வரைபடத்துக்கு அனுமதி வழங்காது எங்களை அங்குமிங்கும் அலைய வைத்தார்கள். பள்ளிவாசல் நிர்மாணிப்பை தாமதத்துள்ளாக்கினார்கள்’ என திகன வன்முறைகளின் போது முழுமையாக சேதமாக்கப்பட்ட கெங்கல்ல லாபீர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் எ.எஸ்.எம்.ரிஸ்வி எம்மிடம் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி கண்டி– திகன பகுதிகளில் முஸ்லிம்கள் மீது அரங்கேற்றப்பட்ட வன்செயல்களுக்கு வயது இரண்டு பூர்த்தியாகியுள்ளது. அப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தத் துயரங்களிலிருந்து மீளவில்லை. தொடர்ந்தும் அந்த நினைவுகளுடனே நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
அன்று நடைபெற்ற வன்செயல்களின் பின்பும் தொடர்ந்த சவால்கள் அவர்களிடம் ஆயிரக்கணக்கில் குடிகொண்டுள்ளன. அவற்றில் ஒன்றே லாபீர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருக்கேற்பட்ட அனுபவமாகும்.
கெங்கல்ல – பள்ளேகல ஜும்ஆ பள்ளிவாசல் 1838 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகும். வன்செயல்களின்போது அது முழுமையாக சேதமாக்கப்பட்டது. பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்வதற்கு முயற்சித்தபோது அரச அதிகாரிகள் பல்வேறு தடைகளை விதித்தனர்.
பள்ளிவாசலை புதிதாக நிர்மாணிப்பதற்கு தயாரிக்கப்பட்ட கட்டட வரைபடம் மெனிக்ஹின்ன பிரதேச செயலகத்தினால் அனுமதிக்கப்படாது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளே ‘பள்ளிவாசல் அமையவுள்ள மினாராவில் விமானங்கள் மோதலாம் எனக் கூறி நிராகரித்ததுடன் சிவில் விமான சேவை திணைக்களத்தில் அனுமதி பெற்று வருமாறு கூறினார்கள். பள்ளிவாசல் நிர்வாகம் சிவில் விமான சேவை திணைக்களத்துக்குச் சென்ற போது அங்குள்ள அதிகாரிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பள்ளிவாசல் கட்டட வரைபடம் நிராகரிக்கப்பட்டமை குறித்து அதிர்ச்சியடைந்தனர். மினாரா 800 மீற்றர் உயரத்திலே நிர்மாணிக்க முடியாது என்று கூறிய அவர்கள் கட்டட வரைபடத்தில் மினாரா 100 அடி உயரத்திலே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கான அனுமதியும் வழங்கினர்.இவ்வாறு பள்ளிவாசலை மீண்டும் நிர்மாணிப்பதற்கு இனவாத அதிகாரிகள் தாமதங்களை ஏற்படுத்தி வந்தார்கள்.
சேதங்களும், பாதிப்பும்
கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் கண்டி மாவட்டத்தில் 526 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இக்குடும்பங்களைச் சேர்ந்த 2635 பேர் நிர்க்கதிக் குள்ளாக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. 259 வீடுகள் பகுதியளவிலும் 30 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்ததாக தரவுகள் தெரிவித்தன.
முஸ்லிம்களின் 37 கடைகள் முற்றாக எரிக்கப்பட்டன. 180 கடைகள் பகுதியளவில் சேதங்களுக்குள்ளாகின. 80 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இவற்றில் அரைவாசிக்கும் மேலானவை முற்றாக எரிக்கப்பட்டன.
17 பள்ளிவாசல்கள் தாக்கி சேதமாக்கப்பட்டன. இவற்றில் ஒரு பள்ளிவாசல் கென்கல்ல– பள்ளேகால் ஜும்ஆ பள்ளிவாசல் முழுமையாக சேதமாக்கப்பட்டது. இப்பள்ளிவாசலின் கட்டட வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த மினாராவின் வரைபடமே விமான விபத்துக்கு உள்ளாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வன்முறைகளுக்குக் காரணம்
2018 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முஸ்லிம் இளைஞர்களால் தெல்தெனிய அம்பாலயைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் தாக்கப்பட்டார். இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே அவர் தாக்கப்பட்டார்.
எச்.குமாரசிறி (48) என்ற பெயருடைய அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில காலமானார். சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மார்ச் மாதம் 5 ஆம் திகதி சாரதியின் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற அன்றே முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு அவை திகனயிலிருந்து கண்டியின் ஏனைய பகுதிகளுக்கும் பரவின.
உயிரிழப்புகள்
வன்செயலில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள், ஆகியவற்றை சேதப்படுத்தினார்கள். சிலதை தீயிட்டு எரித்தார்கள். தனது எரியும் வீட்டில் சிக்கிக்கொண்ட சம்சுதீன் அப்துல் பாசித் (24) மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அன்றைய தினம் கண்டி ஹீரஸ்ஸகலையைச் சேர்ந்த மெளலவி சதகத்துல்லா அக்குறணைக்குச் சென்று பஸ் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தபோது மார்ச் 7 ஆம் திகதி இனவாதிகளால் தாக்கப்பட்டு சில மாதங்கள் சுயநினைவற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2018 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வபாத்தானார்.
நஷ்டஈடுகள்
கண்டி திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு கோரி 546 விண்ணப்பங்கள் முன்பு புனர்வாழ்வு அதிகார சபை என்று அழைக்கப்பட்ட தற்போது இழப்பீட்டு பணியகம் என அழைக்கப்பட்டுவரும் அரச நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நஷ்டஈடு கோரி அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள்
பிரதேச செயலாளர் பிரிவுகளும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும்
1. அக்குறணை-35
2. பூஜாபிட்டிய -41
3. குண்டசாலை-243
4. ஹேவாஹட்ட-01
5. பாத்ததும்பறை-48
6. ஹாரிஸ்பத்துவ-134
7. யடிநுவர-07
8. கண்டி நகரம்
கங்கவட்ட கோரள-27
9. மினிப்பே-01
10. உடுநுவர-03
11. மெததும்பற-05
12. உடதும்பற-01
மொத்தம் 546
210 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது
நஷ்டஈடு கோரி 546 விண்ணப்பங்கள் இழப்பீட்டு பணியகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 16 விண்ணப்பங்களைத் தவிர ஏனையவற்றுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் இழப்பீட்டுப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.பதூர்தீன் தெரிவித்துள்ளார்.
நஷ்டஈடாக இதுவரை அரசாங்கம் 210 மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாதுள்ள விண்ணப்பங்கள் குறைபாடுகளைக் கொண்டதாகவும், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமலும் இருப்பதனாலே தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்விண்ணப்பங்களை ஆராய்ந்து உரிய நஷ்டஈடுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் கமிட்டியொன்று நியமிக்கப் பட்டுள்ளது. அக்கமிட்டியின் சிபாரிசுகளுக்கு அமைய விரைவில் அவற்றுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள நஷ்டஈடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கும்படி திறைசேரியிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கெங்கல்ல பள்ளிவாசலின் நஷ்டம் 2 கோடி 30 இலட்சம்
கெங்கல்ல– லாபீர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதம் 2 கோடி 30 இலட்சம் ரூபா என பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.ரிஸ்வி தெரிவித்தார். பள்ளிவாசலின் சேதவிபரத்தை பொறியியலாளர் மூலம் மதிப்பீடு செய்து 2 கோடி 30 இலட்சம் ரூபா கோரி இழப்பீட்டு பணியகத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. உரிய ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இழப்பீட்டுப் பணியகத்தினால் எமது பள்ளிக்கு நஷ்ட ஈடாக 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவே ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட தொகையிலும் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. நாம் பள்ளிவாசல் பதிவு, பள்ளிவாசல் காணியின் உறுதி என்பன உட்பட தேவையான அனைத்து ஆவணங்களை வழங்கியும் எமக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இனவாத அதிகாரிகளின் செயலே இதற்குக் காரணம்
பள்ளிவாசல் மற்றும் நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 3 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது. தற்போது கீழ்மாடி நிர்மாணப் பணிகள் மாத்திரமே பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. திகனயில் நாம் அமைப்பொன்றினை நிறுவி தும்பறைப் பகுதி மக்களின் உதவியுடன் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை நாம் ஒருகோடி ரூபா அளவில் செலவிட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
பிரதி பணிப்பாளரின் மறுப்பு
கெங்கல்ல – பள்ளேகால லாபீர் ஜும்ஆ பள்ளிவாசல் வன்செயல்களின் போது சேதமாக்கப்பட்டதையடுத்து பள்ளிவாசலை முழுமையாக நிர்மூலமாக்கியதன் பின்பே சேதவிபரம் பள்ளிவாசல் நிர்வாகிகளால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே உண்மையான சேத விபரம் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது என இழப்பீட்டுப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.பதூர்தீன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
திகன வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். சிறிது காலம் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளன. அவ்வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சொத்துகளுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதுடன் மாத்திரம் அரசாங்கம் மெளனித்துவிடக் கூடாது. அப்பிரதேசங்களில் நல்லுறவும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பட்டாலே பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதலடைவார்கள்.
அயல் நாட்டிலும் வன்முறைகள்
அண்மைக்காலமாக இலங்கையில் மாத்திரமல்ல அயல் நாடான இந்தியாவிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கண்டி – திகன வன்செயல்கள் போன்றதொரு சம்பவம் அண்மையில் இந்தியாவின் டில்லியில் பல பகுதிகளில் நடந்தேறியுள்ளது. அங்கு நடந்தேறிய வன்முறைகளினால் 48 பேர் பலியாகியுள்ளார்கள். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்களே இனவாதிகளால் பலியெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அரசாங்கம் இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் பலப்படுத்த வேண்டும். நாடு பொதுத் தேர்தலொன்றினை எதிர்நோக்கியுள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசு அதிக கரிசனை கொள்ளவேண்டும்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்