அனுமதிக்கப்பட்ட முகவர் ஊடாக மட்டுமே ஹஜ்ஜுக்கு செல்லலாம்
திணைக்கள பணிப்பாளர் அஷ்ரப் தெரிவிப்பு
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளவுள்ள ஹஜ் யாத்திரிகர்கள், திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள முகவர் நிலையங்களினூடாகவே பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளமுடியும். தங்கள் பயணத்தை முகவர் நிலையங்கள் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கடவுச்சீட்டு ஒப்படைக்கப்பட்டால் கடவுச் சீட்டு ஒப்படைக்கப்பட்டதற்கான கடிதம் ஒன்றில் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டு அதன் பிரதி திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என ஹஜ் யாத்திரிகர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைப் பேணுவதற்காகவே இப்புதிய வழிமுறைகள் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹஜ் முகவர் நிலையங்கள் இந்தப் பணியை புனித பணியாக மேற்கொள்ள வேண்டும். கடந்தகாலங்கள் இடம்பெற்ற தவறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகவே இவ் ஏற்பாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஓரிரு தினங்களில் இவ்வருடம் அனுமதி பெற்றுள்ள முகவர் நிலையங்களின் பெயர் விபரங்களைத் திணைக்களம் வெளியிடவுள்ளது. திணைக்களத்தின் இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் விபரங்கள் வெளியிடப்படும்.
திணைக்களம் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களுடன் ஓரிரு தினங்களில் உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திடவுள்ளது என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்