பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை
ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளிடம் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்
முஸ்லிம் சமூகம் எதிர்வரும் தேர்தலில் பிரிந்து நிற்காமல் பிரதான கட்சிகளுடன் இணங்கிப்போவதே நன்மை பயக்கும் எனக்கருதுகிறேன். உலமா சபையும் இது விடயத்தில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இது விடயத்தில் உலமா சபை மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தன்னைச் சந்தித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகளை வேண்டிக் கொண்டார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உயிரித்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் வெளிநாட்டுச் சக்திகளினால் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டவையாகும். இத்தாக்குதல்களே முஸ்லிம் சமூகத்தை தலைகுனிய வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சுமுகமான சந்திப்பொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பேராயரின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. மஃரிப்பையும் கடந்து இடம்பெற்ற இச்சந்திப்பின்போது முஸ்லிம் சமூகத்தின் சமகால பிரச்சினைகள், சவால்கள் மற்றும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள், அரசியல் களநிலைமை என்பன குறித்து கருத்துப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மஃரிப் தொழுகையும் பேராயரின் இல்லத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் பேராயரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
முஸ்லிம் சமூகத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என உலமா சபை பிரதிநிதிகள் பேராயரை வேண்டிக் கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவதாக பேராயர் உறுதியளித்தார்.
பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘நான் இஸ்லாம் உட்பட எல்லா மதங்களையும் மதிப்பவன். இஸ்லாத்துக்கும், கிறிஸ்தவ மதத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரே கடவுள் நம்பிக்கை உள்ள மதங்களாகும். ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பல்ல. அத்தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகளே செயற்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னர் எவரும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவேண்டாம் என எமது மக்களைக் கோரியிருக்கின்றேன்’ இஸ்லாமிய மதத்தையும் நான் மதிக்கின்றேன்.
ஏப்ரல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும். அவர்களுக்கு சட்டரீதியான தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் இதுவே எங்களின் கோரிக்கையாகும்.
நாமனைவரும் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் நன்மைக்காக ஒன்றிணைய வேண்டும். சிங்கப்பூர் பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாடாகும்.
அங்கு அனைத்து மதங்களினதும் தனித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மக்கள் சகவாழ்வு வாழ்கிறார்கள். நாடும் முன்னேற்றமடைந்துள்ளது. இதனை நாம் உதாரணமாகக் கொள்ளவேண்டும்.
ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்காக நாம் கவலையடைகிறோம்.
மஸ்ஜித்கள் நல்லிணக்க மையங்களாகச் செயற்படுவது போன்று ஆலயங்களும் நல்லிணக்க மையங்களாக செயற்படும். நாம் இரு தரப்பும் ஒன்றிணைந்து மக்களிடையில் நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும். இந்நிலைமையே இரு தரப்பினருக்குமிடையில் சுபீட்சத்தை உருவாக்கும்.
நான் எப்போதும் முஸ்லிம் சமூகத்துடன் இருப்பேன். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வருடம்பூர்த்தியாகிறது. அந்த நினைவு நிகழ்வுகள் கொச்சிக்கடை தேவாலயத்திலும் மேலும் பல இடங்களிலும் நடைபெறவுள்ளது. முஸ்லிம்கள் நீங்கள் அனைவரும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்.
எங்களுக்குள் நல்லிணக்கத்தையும், நல்லுறவினையும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் குழுவினர் ‘பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் முஸ்லிம்களின் பெயரால் நடத்தப்பட்டமைக்கு கவலை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள். குண்டுத்தாக்குதல் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் முஸ்லிம்கள் பங்கெடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் எமது உறவுகள் நிச்சயம் பலம் பெறும் என்றும் தெரிவித்தார்கள்’.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவி பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி, பொருளாளர் மெளலவி ஏ.எல்.எம்.கலீல், பொது உறவுகள் அதிகாரி சல்மான் உஸாமா (ரிழ்வானி),மௌலவி அனஸ், மௌலவி ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்