இந்தியத் தலைநகரில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குழுக்களுக்கிடையேயான மோதல் வன்முறையாக வெடித்ததையடுத்து நேற்று மாலை வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்துபோகச் செய்யுமாறு ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான கபில் மிஷ்ரா கட்டளை பிறப்பித்ததைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறைகள் ஆரம்பமாகின.
வடகிழக்கு டில்லியில் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்களை நடத்தினர். வாகனங்களுக்கும் கடைகளுக்கும் தீ மூட்டினர்.
புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மோசமாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சமயச் சிறுபான்மையினருக்கு குடியுரிமையினை வழங்குவதற்கு அனுமதிக்கின்றது.
இந்தச் சட்டம் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையினை அப்பட்டமாக மீறுவதாகவும் நாட்டின் 200 மில்லியன் முஸ்லிம்களையும் ஓரம்கட்டுவதற்கு மோடி அரசாங்கம் எடுக்கும் தற்போதைய முயற்சி என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ரட்டன் லால் என அடையாம் காணப்பட்டுள்ளார்.
வன்முறைகள் உச்ச அளவில் இடம்பெற்ற பிரதேசத்திற்கு இவர் பொறுப்பாக்கப்பட்டிருந்தார்.
கிழக்கு டில்லியின் பிரதிப் பொலிஸ் ஆணையாளர் அமித் வர்மாவுக்கு தலையிலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு அண்மையிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொதுமக்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஆறு பொலிஸார் உள்ளடங்கலாக 45 பொதுமக்களும் டில்லியிலுள்ள வைத்திய சாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.-Vidivelli