மாகாண சபை, உள்ளூராட்சி தேர்தல்களை விகிதாசார முறையிலேயே நடத்த வேண்டும்
மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்து
நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறை போலவே மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலமே நடத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளினூடான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான 5சதவீத வெட்டுப்புள்ளியை 12.5வீதமாக அல்லது அதற்கு மேலாக உயர்த்தும் சதி முயற்சியையும் முஸ்லிம் காங்கிரஸ் கண்டித்துள்ளது.
கண்டி, பொல்கொல்லை மஹிந்த ராஜபக் ஷ கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாட்டின்போதே இது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
1. எமது தாய் நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் இறையாண்மை, பாதுகாப்பு, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சட்டவாட்சியை நிலைநிறுத்துதல் போன்ற விடயங்களில் ஒன்றுபட்ட இலங்கை சமுதாயமாக, இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்குவதென இம்மாநாடு தீர்மானிக்கிறது.
2. சமூகங்களுக்கிடையில் இன மற்றும் மதவாதங்களைத்தூண்டி இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் எந்தவிதமான சக்தியையும் இம்மாநாடு வன்மையாக ஆட்சேபிக்கிறது.
3. பரந்து வாழும் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளினூடான பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவை பாதிக்கச் செய்யும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள 5 சதவீத வெட்டுப்புள்ளியை 12.5 சதவீதமாக அல்லது அதற்கு மேலாக உயர்த்தும் சதிமுயற்சியை இம்மாநாடு கண்டிப்பதுடன், அதற்கெதிராகப் போராடுவதற்கு திடசங்கற்பம் பூணுகின்றது.
4. நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறை போலவே மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலமே நடத்த வேண்டுமென இம்மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.
5. இலங்கை அரசாங்கம் தனது குடிமக்கள் அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதுடன், சமூகங்களுக்கிடையேயான மீளிணக்கம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை முன்னெடுப்பதிலிருந்து பின்வாங்காமல் சகலரையும் நீதியாக நடத்துவதன் மூலம் இலங்கை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி தனது பொறுப்புக்களை சரிவர உரிய முறையில் செயற்படுத்த வேண்டுமெனவும் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.
6. 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பாக நியாயமானதும், மிகவும் பொருத்தமுடையதுமான மீள்குடியேற்ற பொறிமுறையினூடாக அவர்களது மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதுடன், அவர்களது பிரத்தியேகமான தேவைப்பாடுகளை உள்வாங்கி அம்மக்களின் வாக்களிக்கும் உரிமையிலும், வாக்காளர் பதிவு தொடர்பிலும் நீதியானதும் நியாயமானதுமான தீர்வை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு தீர்மானித்து வலியுறுத்துகின்றது.
7. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக மேம்பாடு, பாராளுமன்ற சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, சுயாதீனமான ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு சபை போன்றவற்றை இல்லாமல் செய்வதற்கான அல்லது நலிவடையச் செய்வதற்கான திருத்தங்களுக்கு எவ்விதத்திலும் ஆதரவு வழங்குவதில்லை எனவும், நடைமுறைச் சிக்கல்களை உருவாக்குகின்ற அடையாளம் காணப்பட்ட ஒருசில திருத்தங்களுக்கு மாத்திரம் இணங்குவதெனவும், இம்மாநாடு தீர்மானிக்கிறது.
8. எமது தாய்நாட்டில் வசிக்கும் சகல இன மக்களும், சமூகங்களும் சமமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு இசைவான சூழ்நிலையை உறுதிப்படுத்தக்கூடியதும் அரசியல் அபிலாசைகளை அனுபவிக்கக்கூடியதுமான அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
9. முஸ்லிம் தனியார் சட்டத் தை முற்றாக நீக்குவதற்கான எந்தவொரு முன்மொழிவையும் முழுமையாக நிராகரிப்பதுடன், அவசியமான இஸ்லாமிய வரையறைகளை மீறாததும் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உடன்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான சீர்திருத்தங்களுக்கு உடன்படுவதெனவும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.-Vidivelli
- வத்துகாமம், செங்கடகல நிருபர்கள்