உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 59 பேரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய 59 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சந்தேக நபர்களும் இரு சரீரப் பிணைகளிலும் 25000 ருபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் சாய்ந்தமருதில் 26.04.2019 அன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் போது உயிரிழந்த ஸஹ்றான் குழு உறுப்பினரான முகம்மது நியாஸ் என்பவரின் மனைவியெனத் தெரிய வருகின்றது.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 28.04.2020 அன்று நீதிமன்றில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமையவே மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது நீதிமன்றத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருந்ததுடன் நீதிமன்றுக்கு வெளியே சந்தேக நபர்களின் உறவினர்களும் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எஸ்.எம்.நூர்தீன்