ஸஹ்ரானின் பயங்கரவாத கும்பலின் சர்வதேச வலையமைப்பு குறித்து விஷேட விசாரணைகள்
ஆஸி., மாலைதீவு, துருக்கி வலையமைப்பு தொடர்பில் அவதானம்
4/21 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாத கும்பலின் சர்வதேச வலையமைப்பு குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரத்தியேக விசாரணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக அறியமுடிகின்றது. சி.ஐ.டியினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், ஸஹ்ரானின் பயங்கரவாதக் கும்பல் அவுஸ்திரேலியா, துருக்கி மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இயங்கும் சில அமைப்புக்கள் மற்றும் நபர்களுடன் விஷேட தொடர்புகளைப் பேணியுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகளுக்கு அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் இண்டர்போலின் ஊடாக உதவிகளும் பெறப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெற்றுள்ள நபர் ஒருவரின் மகன் ஸஹ்ரான் கும்பலுடன் பேணிய தொடர்பு குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சி.ஐ.டியின் உயரதிகாரி ஒருவர், அந்த விடயத்தை உறுதிசெய்ய மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறினார்.
அத்துடன் ஸஹ்ரான் குழுவின் பிரபல உறுப்பினராகக் கருதப்படும் மாவனெல்லை – புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் சூத்திரதாரியான சாதிக் அப்துல்லாஹ் எனும் சந்தேக நபர், துருக்கியூடாக சிரியாவுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளிலும் குறித்த நபரின் பங்கிருப்பதாக சி.ஐ.டி.யினர் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சாதிக் அப்துல்லாஹ் எனும் ஐ.எஸ். ஐ.எஸ். பயிற்சி பெற்றதாக நம்பப்படும் சந்தேக நபரை, துருக்கியிலிருந்து சிரியாவுக்கு அழைத்துச்சென்று ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மாலைதீவுப் பிரஜை ஒருவரே செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மாலைதீவுப் பிரஜை யார் என்பதைக் கண்டறிய இன்டர்போல் பொலிஸாரின் உதவியுடன் அவர்களது தகவல் கட்டமைப்பை ஆராய்ந்தும் சி.ஐ.டி. விசாரணைகள் தொடர்கின்றன.
4/21 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை பின்னணியிலிருந்து வழி நடாத்தியதாக நம்பப்படும் நான்கு மாலைதீவுப் பிரஜைகளைக் கைதுசெய்ய சி.ஐ.டியின் தனிப்படையொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடந்தவாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடக சந்திப்பில் அறிவித்த நிலையில், அதில் அடையாளம் வெளிப்படுத்தப்படாத இரு மாலைதீவுப் பிரஜைகளில், சாதிக் அப்துல்லாஹ்வை ஐ.எஸ். ஐ.எஸ். உடன் தொடர்புபடுத்தி இணைப்பாளராக செயற்பட்ட நபரும் அடங்குவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்