முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்ய வேண்டும்
மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்க: தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழு பரிந்துரை
புர்கா , நிகாப் போன்ற ஆடைகளை குறிப்பிட்டு தடை செய்வது ஓரினத்தை சுட்டிக்காட்டுவதாக இருப்பதனால் அப்பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக ஒருவரது முகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத மற்றும் சிரமமான முக மறைப்புக்கள், தலைக் கவசங்களை தடை செய்ய வேண்டுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் இவ்வாறான முக மூடிகளுடன் இருப்போர் அதனை அகற்றாத பட்சத்தில் அவர்களை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தவிசாளர் மலிக் ஜயதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் பெண்களின் ஆடை அணிதல் தொடர்பான பிரச்சினை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கை சமூகத்தில் முக்கிய பிரச்சினையாக காணப்பட்டது. இந்த ஆடைகளில் புர்காவும் நிகாபுமே பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றன. கண்ணியத்துடன் நடந்துகொள்ளும் முஸ்லிம் பெண்கள் தனது கணவரை தவிர்ந்த வேறு ஆண்களுக்கு தமது முகத்தை காட்ட விரும்பாமை காரணமாகவே இந்த ஆடைகளை அணிவதாக அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டாலும் இந்த புதுமாதிரியான அரேபிய ஆடைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த ஆடைகளுக்கு வெளிநாடுகள் பலவும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் பலவும் தடை விதித்துள்ளமையும் எம்மால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் 2019 ஏப்ரல் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் அவசர சட்ட ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட 2121/1ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி பத்திரிகை மூலம் புர்கா, நிகாப் தடை செய்யப்பட்டது. அத்துடன் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரினால் இவ்விடயம் தொடர்பில் பொது இடங்களில் முகத்தை மறைத்தலை தடை செய்தல் என்ற தலைப்பில் 2019.07.17 அன்று அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பினால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் உருவான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து தீவிர கவனம் செலுத்தியது. இந்த ஆடைகளுக்கு ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்ட போதும் அதனை நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் தடை செய்வதற்குரிய சட்டம் வகுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைய இத்தகைய முக மறைப்புகள் அணியப்படுவதை குற்றவியல் சட்டக் கோவைக்கு அமைய ஒரு குற்றமாக அறிவிப்பதற்கு ஏற்புடையதாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எமது குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய புர்கா , நிகாப் போன்ற பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக ஒருவரது முகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத மற்றும் சிரமமான முக மறைப்புகள் , தலைக் கவசங்களை தடை செய்தல் என குறிப்பிடுதல் பொருத்தமானதென்ற கருத்து எமது குழுவில் முன்வைக்கப்பட்டது. புர்கா , நிகாப் என்று குறிப்பிடுவது ஓர் இனத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிடலாம் என்பதாலேயே இம்முடிவு எட்டப்பட்டது.
இது தொடர்பில் தண்டனை சட்டக் கோவையில் இடம்பெற வேண்டுமென எமது குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் வலுவுக்கு வந்த பின்னர் ஒரு நபர் பொது இடத்தில் முகத்தை மூடிக்கொண்டு இருக்கும் போது அந்த நபரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக குறித்த முக மூடியை அகற்றுமாறு கூறுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் அத்தகைய வேண்டுகோளை விடுக்கும் போது குறித்த நபர் அதற்கு கட்டுப்பட மறுப்பாராயின் பிடியாணையின்றி அவரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்க வேண்டுமெனவும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை போன்று முழு உலகையும் உலுக்கியிருந்தது. இதுவரை காலமும் எமது நாட்டின் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே இந்த குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலையடுத்து நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினராலும் கேள்வியெழுப்பப்பட்டது. மீண்டும் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டுமென குறித்த தாக்குதல் எமக்கு எடுத்துக்காட்டியது.
மூன்று தசாப்தகாலம் தீவரவாதத்திற்கு நாம் முகங்கொடுத்து வெற்றி கண்டிருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறுதினம் சம்பிரதாயத்துக்கு மாறான ஒரு பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்திருந்தோம். குழுவுக்கு முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளுக்கு அமைய அது முஸ்லிம் அல்லது இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தாது புதிய பயங்கரவாதம் என பயன்படுத்துமாறு முன்மொழியப்பட்டது.
1990களின் பிற்பகுதியில் உலகளாவிய ரீதியில் எழுச்சி கண்ட பயங்கரவாதத்திற்கு புதிய பயங்கரவாதம் என்றே விளக்கமளித்துள்ளனர். என்றாலும், குறித்த பங்கரவாதத்தின் பின்புலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளமை ரகசியமல்ல. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை தொடர்ந்து இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் என்ற பயங்கரவாத சொற்கள் நாட்டில் தலைதூக்கியமையால் பல ஆண்டுகாலமாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவர் மத்தியிலும் குழப்பகரமான சூழ்நிலை தோன்றும் அபாயம் ஏற்பட்டது. இது நல்லிணக்கம் மற்றும் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது.
சில சட்டங்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்பவே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதை எமது குழுவால் அறிய முடிந்தது. இவை ஒட்டுமொத்த அல்லது பெரும்பான்மை முஸ்லிம்களின் கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்றவை அல்ல.
எமது நாட்டைப் போன்று பல நாடுகள் புதிய பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்துள்ளன. பல நாடுகள் ஆயத்தமாக உள்ளன. 1990 களின் பின்னராக புதிய பயங்கரவாதத்திற்கு தேசிய எல்லையொன்று இல்லை. தெளிவான தலைமைத்துவம் அல்லது வழிநடத்தல் இல்லை. மத ரீதியில் செயற்படும் தனிநபர்கள் அல்லது குழுக்களே இந்த புதிய பயங்கரவாதத்தில் அடையாளங்காணப்பட்டுள்ளன.
நாம் ஆய்வுக்கு உட்படுத்தியதில் புதிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய சட்டங்கள் மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இவற்றைதான் செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மற்றும் அதற்கு முன்னர் முதல் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுவரும் முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் வகையில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு சில சிபாரிசுகளை முன்வைக்கிறது.
21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற இலங்கையர்களையும், தமிழ்,முஸ்லிம், சிங்களம் என மூன்று இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உரிய நடவடிக்கைகளையும் சட்டதிருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். மத போதனை நிலையங்களை மூடுவது முதல் மத்ரசா பாடசாலைகள் வரை அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் என்ற சிந்தனையும் தனித்துவத்தையும் பின்பற்றும் சிங்களம், தமிழ், முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் ஒப்பீட்டு மதக் கல்வி,கலாசார பன்மைத்துவம் பற்றிய கல்வி வழங்கப்பட வேண்டும்.இன,மத மற்றும் ஏனைய சமுதாய அடையாளங்களை வெளிப்படுத்துகின்ற பெயர்களுடன் கூடிய பாடசாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும். மத்ரஸா நிறுவனங்கள் விசேட கல்வி நிறுவனங்களாக கருதி மௌலவிமார்களினூடாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். 16 வயது பூர்த்தி செய்யப்பட்டவர்களே மத்ரஸாக்களில் சேர்க்கப்பட வேண்டும்.
மேலும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் விரிவாக கட்டமைப்பு ரீதியில் திருத்தப்பட வேண்டும். மணமகள், மணமகன் இருவரும் திருமணத்தின் போது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். திருமணங்கள் பதிவு செய்யப்படுவதோடு பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறக்கூடியவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
முஸ்லிம் சிவில் சமூகத்தை வலுவூட்ட வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தை வலுவூட்ட வேண்டும்.
வக்பு சட்டத்தை திருத்தி பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.
இன அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவினை இடைநிறுத்த வேண்டும்.இலங்கை அடையாள இலக்கத்தினை கொண்ட பிறப்பு அத்தாட்சி பத்திரமொன்றை வெளியிட வேண்டும். சகல சமயங்களையும் இணைத்து சர்வமத அலுவல்கள் அமைச்சு உருவாக்க வேண்டும்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்