நகர் பிராந்தியங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும், முகாமைத்துவம் செய்யும் பணிகளில் போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேற்று கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இந்நடவடிக்கை முழு கொழும்பு நகருக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
பின்னர் அந்த வேலைத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல்மிக்க ஏனைய நகரங்களிலும் பொலிஸாரின் உதவிக்கு இராணுவ பொலிஸாரை கடமையிலீடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவிடம் வினவிய போது,
“பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனை பிரகாரம் கொழும்பு நகரத்தினுள் வாகன நெருக்கடிகளை குறைப்பதற்காக இலங்கை பொலிஸாருக்கு உதவும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதிக்கு வழங்கிய விஷேட ஆலோசனைக்கமைய இராணுவத் தளபதி இந்த திட்டத்தை அமுல் செய்துள்ளதுடன், நேற்று காலை முதல் அது குறித்த நடவடிக்கைகளை கொழும்பு நகருக்குள் அவதானிக்க முடிந்தது.
கொழும்பு நகர வீதிகளில் ஏற்படும் பாரிய நெரிசல்களை குறைக்கும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸார் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 6.00 – 10.00 வரையும் மாலை 4.00 – 7.00 மணி வரை நகர போக்குவரத்துக்கு கடமைகளுக்காக பொலிஸாருடன் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ பொலிஸாருக்குரிய நடமாடும் கார் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், விஷேடமாக அவர்கள் கண்காணிப்பு கடமைகள், தொடர்பாடல் நடவடிக்கைகள் மற்றும் மாற்று வீதிகள் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தும் பணிகளிலேயே ஈடுபடுவரென இராணுவம் தெரிவித்துள்ளது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்