வெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்
இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தத்தின் பின் இஸ்லாத்தை ஏற்ற மொஹமட் செங்கின் கதை
இது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர் 2005 ஆம் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் தனது கதையை இவ்வாறு கூறுகிறார்.
நான் சீன வம்சத்தைச் சேர்ந்தவன். தற்போது மூன்று தலைமுறைகளாக இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்தில் எனது குடும்பம் வாழ்கிறது. தென்கிழக்காசியாவின் இந்த இஸ்லாமியப் பிரதேசத்துக்கு எங்களது மூதாதையர்கள் வர்த்தகத்துக்காக வந்தார்கள். எல்லா விடயங்களுக்கும் ஒரு பொருத்தமான சூழலாக இதைக்கண்டதால் இங்கேயே தங்கி விட்டார்கள். இங்குள்ள ஆட்சியாளர்களும் மக்களும் சாதாரணமாகவே நட்பானவர்களாகவும் எங்களைத் தொல்லை செய்யாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனது குடும்பத்தினர் எங்களது முன்னோர்களை வணங்குவதற்காக பல்வேறு சீன மரபுகளை பேணி வைத்திருந்தார்கள். நானும் அதையேதான் செய்தேன். இந்தக் கடையைத் திறக்க முன்னர் எனது முன்னோர்களின் பலி பீடத்துக்கு பிரசாதம் வழங்கினேன். அந்த நாட்களில் அந்த விடயங்களை திரும்பத் திரும்பச் செய்திருக்கிறேன்.
ஆச்சே பெரிய பள்ளிவாசலுக்கு மிக அண்மையில்தான் எனது கடை அமைந்திருந்தது. தொழுகைக்கான அதானின் ஓசை தினமும் என் காதுகளை வந்தடையும். ஆனாலும் அது நான் முஸ்லிமாக மாறுவதற்கு வழிவகுக்கவில்லை. அந்தப் பயங்கரமான காலை நேரம் வரை அப்படியொரு எண்ணம் எனக்குத் தோன்றவேயில்லை.
வழமையான காலை போலவா?
2004 டிசம்பர் 26 ஆம் திகதியில் பண்டே ஆச்சே பெரிய பள்ளிக்கருகில் இருந்த எனது கடையைத் திறக்க ஆயத்தமாகியிருந்தேன். அது ஒரு வழமையான காலைப்பொழுதாகவே இருந்தது. நல்லதொரு காலநிலை. குறைந்தபட்சம் அசாதாரணமானதாக எதுவும் தோன்றவில்லை என்று சொல்ல முடியும்.
ஆனால், ஏதோ சில விடயங்கள் விசித்திரமாகவே இருந்தன. பறவைகள் பாடுவதை நிறுத்தியிருந்தன. எஞ்சியிருக்கும் உணவுகளுக்காக வழக்கமாக என் கடைக்கு முன்னால் காத்திருக்கும் பூனைகளை அன்றைய தினம் காண முடியவில்லை. இருப்பினும் இந்த விடயங்கள் எதையும் நான் கண்டுகொள்ளவுமில்லை.
திடீரென ஒரு வலுவான உரத்த சத்தம் கேட்டது. நான் வெளியில் சென்று பார்த்தேன். “அது ஒரு பூகம்பமாக இருக்கும்” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். மற்ற அனைவரும் தங்களது கடைகளில் இருந்து வெளியே வந்தார்கள். ஒரு சில நிமிடங்களிலே நாங்கள் அனைவரும் திரும்பவும் உள்ளே சென்றோம்.
எது எப்படியிருந்தாலும் மக்கள் அனைவரும் சத்தம் போட்டு கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினார்கள். ‘தண்ணீர்! கடல் வருகிறது! தண்ணீர்” என்று கத்தினார்கள். நான் குழப்பமடைந்தேன். நான் அந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டாலும் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் மீண்டும் வெளியில் சென்றேன். அனைவரும் பயந்து கத்திக்கொண்டே பள்ளியை நோக்கி ஓடினார்கள்.
தண்ணீர் பாய்ந்து வருவதை நான் கண்டேன். எனது தூபியை எடுப்பதற்காக வேண்டி நான் ஓடினேன். எனது முன்னோர்களிடம்தான் உதவி தேடினேன். தண்ணீர் மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தது. தண்ணீர் தெருக்களில் இருந்து பாய்ந்து பள்ளிவாசலை நோக்கிச் சென்றது.
நான் பயந்துகொண்டே மேல்மாடிக்கு ஓடினேன். ஒரு சிறிய பெல்கனியில் இருந்து நான் சுனாமியைப் பார்த்தேன். தண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. இது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.
அவர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்
நான் மிகவும் விசித்திரமான ஒன்றைக் கண்டேன். அவர்கள் வெள்ளை ஆடை அணிந்த மிகவும் உயரமான மனிதர்களாக இருந்தார்கள். ஒரு வீதிப் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை வழிகாட்டுவது போன்ற செயலை அவர்கள் செய்தார்கள். பெரிய பள்ளிவாசலுக்கு வெளியில் வெவ்வேறு இடங்களில் அவர்கள் இருந்தார்கள். தண்ணீர் அவர்களுடைய இயக்கத்துக்கு கட்டுப்பட்டது. பள்ளிவாசலின் முன்னால் தண்ணீரின் பாதை இரண்டாக பிளவுபட்டு பள்ளியின் இடது மற்றும் வலது பகுதிகளின் ஊடாக பாய்ந்து சென்றது.
எவ்வாறாயினும் தண்ணீர் மேலும் மேலும் வந்துகொண்டேதான் இருந்தது. கடல் தண்ணீர் பாரிய அமுக்கத்துடன் அந்த நகரத்தையும் பள்ளிவாசலைச் சுற்றியும் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. வெள்ளை ஆடை அணிந்த அந்த மனிதர்கள் ஏனைய மனிதர்களைப் போல ஓடவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பள்ளிவாசலை நோக்கி ஓடினார்கள்.
ஓடிய சிலர் கீழே விழுந்ததால் தண்ணீர் அவர்களை இழுத்துக்கொண்டு சென்றது. நான் இதையெல்லாம் அந்த பெல்கனியில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். தண்ணீர் மேலும் மேலும் வந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் தண்ணீர் பள்ளிவாசலுக்கு உள்ளே செல்லவில்லை. பள்ளிவாசலுக்கு உள்ளே சென்ற மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருந்தார்கள்.
திடீரென வெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் அதிகமாகத் தோன்றி பள்ளிவாசலை உயர்த்தினார்கள். ஆம்! அவர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள். தரைக்கு சற்று மேலே மொத்தப் பள்ளிவாசலையும் உயர்த்தினார்கள். அத்துடன் தண்ணீர் முழுமையாக பள்ளிவாசலுக்கு கீழால் சென்றது. நான் முழுமையாகத் திகைத்துப்போனேன். அது என்னவாக இருக்கும்?
பள்ளிவாசலுக்குள் முதல் முறையாக நான்
நான் கண்ட அதே விடயத்தை யாராவது ஒருவர் என்னிடம் வந்து என்னிடம் சொல்லியிருந்தால் நான் நிச்சயமாக நம்பியிருக்கப் போவதில்லை. ஆனால், எனது இரண்டு கண்களால் நான் அதைப் பார்த்தேன். நான் கண்களை விழித்துப் பார்த்த ஒரு விடயம் அது. ‘கடவுள் இந்தப்பள்ளிவாசலை பாதுகாக்க நினைக்கிறார்” என எனக்குள் நானே பல முறை சொல்லிக்கொண்டேன்.
சுனாமி என்ற பேரனர்த்தம் நடந்த சில வாரங்களுக்குப் பின்னர் எனது கடைக்குப் பக்கத்துக் கடையில் உள்ள முஸ்லிம் கடைக்காரரிடம் நடந்த சம்பவங்களைச் சொல்ல வேண்டுமென என் மனசாட்சி தூண்டியது. அந்தப் பள்ளிவாசலின் இமாமைச் சந்திக்குமாறு அவர் என்னை வலியுறுத்தினார். நான் பெரும்தயக்கத்துடன் அந்தப்பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன்.
ஒரு பள்ளிவாசலுக்குள் நுழைவது அதுதான் முதல் தடவையாக இருந்தது. அப்படியிருந்தும் நான் எனது வாழ்நாள் முழுவதையும் அதற்கு அடுத்தபடியாக வாழந்திருக்கின்றேன். என்னை தூரத்தில் இருந்தே அடையாளம் கண்டுகொண்ட இமாம் என்னை வரவேற்பதற்காக வெளியே வந்தார். ‘காலை வந்தனங்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா அங்கிள்?” என்று அவர் என்னிடம் கேட்டார்.
‘நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்” என்று சொன்னேன்.
நாங்கள் இருவரும் அமர்ந்தோம். அவரிடம் முழுக்கதையையும் சொன்னேன். அதைக்கேட்டு அவர் அமைதியானார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. நான் கதையை முடித்துக்கொண்ட பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டோம். அந்தக் கொடூரமான அனுபவத்திற்கு மக்கள் ஒவ்வொருவரும் அணைத்துக் கொள்ளும் இயற்கையான அணைப்புதான் இது.
இமாம் கூறினார். ‘அங்கிள் நீங்கள் கண்டது இறைவனின் மலக்குமார்கள் அவனது கட்டளையைப் பின்பற்றும் காட்சியாகும். இந்த சுனாமி அனர்த்தத்தின் மூலம் அவனது இறையில்லம் அழிந்து விடக்கூடாது என இறைவன் விரும்பியிருக்கின்றான். அங்கிள் இறைவன் ஏதோ ஒன்றை உங்களுக்குக் காட்டி அவனுக்கு நீங்கள் நெருக்கமாக வேண்டும் என விரும்பியிருக்கின்றான். அவன் உங்களை நேசிக்கிறான். ஏனென்றால் உங்களை ஒரு நல்ல மனிதானாக அவன் பார்த்திருக்கின்றான். அவன் இந்த உலகத்திலும் மறுமையில் சுவர்க்கத்திலும் உங்களுக்கு சந்தோஷத்தைத் தர எண்ணியிருக்கின்றான். நீங்கள் ஒரு முஸ்லிமாக விரும்புகிறீர்களா?
நான் எப்படி முஸ்லிமாக முடியும்?
நான் இமாமுடைய கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். என்னை அது குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு சீன இனத்தைச் சேர்ந்த நான் எப்படி முஸ்லிமாக மாற முடியும். சீனர்களாகிய எங்களுக்கு தமக்கேயுரிய பாரம்பரியங்கள், நம்பிக்கைகளோடு சடங்குகளும் உள்ளன. நான் இமாமுக்கு நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினேன்.
நான் எனது கடைக்குத் திரும்பிச் சென்றேன். கடையின் கதவுகளை மூடிவிட்டு ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்து யோசித்தேன். மீண்டும் மீண்டும் சுனாமி தினத்தன்று நடந்த காட்சிகள் என் கண்களுக்கு முன்னால் வந்து சென்றன. வெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள், தண்ணீரை இயக்குதல், பள்ளிவாசலை தூக்குதல், இறைவனின் மலக்குமார்கள் அதைச் செய்கிறார்கள், அதற்கு சாட்சியாக நான் அனுமதிக்கப்பட்டுள்ளேன்….. எல்லாம் என் மனக் கண்முன்னே ஓடின. நான் எனது கடையை இரண்டு நாட்களாக திறக்கவில்லை. நான் அங்கேயே உட்கார்ந்து யோசித்தேன்.
நான் முஸ்லிமானேன்
மூன்றாவது நாளில் யாரோ கதவைத் தட்டினார்கள். அது வேறு யாருமல்ல. என்னைத் தேடிக்கொண்டிருந்த பள்ளிவாசல் இமாம் தான். முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு எனது கடை மூன்று நாட்களாக மூடியிருந்ததைக் கண்டு அவர் கவலைப்பட்டார். ‘நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன். இறைவன் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறான். அது ஒரு பெரிய அடையாளம். நான் இனிமேலும் ஒரு முட்டாளாக இருக்கக் கூடாது. நான் பழையதை மறந்து விடுகிறேன். தயவு செய்து முஸ்லிமாவது எப்படியென்று சொல்லித் தாருங்கள்” என்றேன்.
‘அது மிகவும் இலகுவானது” என்று இமாம் கூறினார். ‘நீங்கள் இந்த வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்” என்று கூறி எனக்கு ஒரு துண்டு காகிதத்தைத் தந்தார். நான் அந்த வார்த்தைகளை உச்சரித்தேன். எனது கடை முழுக்க பிரகாசமான வெளிச்சம் ஒன்று பரவியதைப் போலிருந்தது.
அந்த நாளில் இருந்து தினமும் இஸ்லாத்தைப் பற்றி எனக்குக் கற்பிக்க இமாம் என்னைத் தேடி வருவார். எப்படித் தொழ வேண்டும் எப்படி குர்ஆனை ஓத வேண்டும் என்பதை எனக்கு அவர் கற்றுக்கொடுத்தார். அதிலிருந்து நான் தொழுகிறேன். பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகையிலும் கலந்து கொள்கிறேன். இது எனது வாழ்க்கையில் நடந்த மிக அழகான ஒரு விடயமாகும். அல்ஹம்துலில்லாஹ்!-Vidivelli
இந்த ஆக்கம் About Islam இணையத்தளத்திற்காக மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக கடமையாற்றும் க்ளோடியா அஸீஸா அவர்களால் எழுதப்பட்டதாகும். இவர் இந்தோனேசியாவில் Ulu-Ilir எனும் இஸ்லாமிய நிறுவனத்தையும் நடாத்தி வருகிறார்.
- ஆங்கிலத்தில்: க்ளோடியா அஸீஸா
தமிழில்: எம்.ஏ.எம்.அஹ்ஸன்