மூஸா நபி அவர்களின் காலத்தில் அறுபது அடி உயரத்தைச் கொண்ட மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இதுவரலாறாகும். இதனை வரலாற்று நூல்களில் எம்மால் காணலாம். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை சேகு தாவூத் ஒலி அறுபது அடி உயரத்தைக் கொண்டவர். இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை வருடா வருடம் இலட்சக்கணக்கான வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பார்வையிடு கின்றனர். அறுபது அடி உயரத்தைக் கொண்ட பலர் மார்க்கப்பணிக்காக அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். கற்பிட்டி வாசல்துறை கடலோரத்திலும் பாணந்துறை பள்ளிமுல்லையிலும் மாத்தளை கோட்டகொடயிலும் திருகோணமலையில் கண்ணியாவிலும் இவர்கள் மரணமானதன் பின்பு அடக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறான ஓர் ஆன்மிக தீர்க்கதரிசியின் அடக்கஸ்தலமே சிலாபம் – அம்பகந்தவிலவில் அமைந்துள்ளது.
சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் அமைந்துள்ள 60 அடி நீளமான இவ்வாறான அடக்கஸ்தலம் ஒன்றினை மையப்படுத்தி 100 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் நடத்தி வந்த கந்தூரி வைபவத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நீதிவான் நீதிமன்று தடை விதித்தது. இதனையடுத்து வருடாந்தம் நடைபெற்று வந்த கந்தூரி வைபவம் இவ்வருடம் நடைபெறவில்லை.
சிலாபம் – அம்பகந்தவில பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களும் கிறிஸ்தவ தேவாலய அருட்தந்தையும் வெளியிட்ட எதிர்ப்பினையடுத்தே இக்கந்தூரி வைபவம் தடை செய்யப்பட்டதாக சிலாபம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் குறிப்பிட்ட அம்பகந்தவில அடக்கஸ்தலத்தையும் காணியையும் பரிபாலித்து வரும் இந்திய ஹனபி பள்ளிவாசல் என்றழைக்கப்படும் சிலாபம் பஸார் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.ஜே.பைஸ்தீனுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.
அடக்கஸ்தலம் (ஸியாரம்)
அறுபது அடி உயரத்தைக்கொண்ட ஆன்மிக வாதியொருவரின் அடக்கஸ்தலம் இது. இந்நாட்டுக்கு ஆன்மிக நோக்கோடு வருகை தந்த ஒருவரது அடக்கஸ்தலமே இது என கூறப்படுகிறது. சிலாபம் – அம்பகந்தவில கடலோரப் பகுதியில் இந்த இஸ்லாமிய ஆன்மிகவாதியின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது.
சிலாபத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பகந்தவிலயின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. இந்த அடக்கஸ்தலம் பல விஷேட தன்மைகளைக் கொண்டதாகும். 60 அடி உயரமான ஆன்மிகவாதி அடக்கம் செய்யப்பட்டுள்ளதை அடையாளம் காண்பதற்காக அறுபது அடி நீளத்துக்கு மணல் குவிக்கப்பட்டு மேடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மணல் மேட்டை கலைத்து விட்டால் இரவில் தானாக மணல் குவிந்து விடுவதாக இப்பிரதேச மீனவ சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மக்களாக இருந்தாலும் இந்த மீனவ சமூகத்தினர் இந்த அடக்கஸ்தலம் மீது மிகுந்த பற்றுக்கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் வாழும் கிறிஸ்தவ மக்களின் வீட்டு முகவரி கூட முஸ்லிம் கந்த அசல (முஸ்லிம் மலை அருகே) என்றே பதியப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பெரிய புயற்காற்று வீசினாலும் மழை பெய்தாலும் இந்த அடக்கஸ்தலம் மேல் காணப்படும் மணல் குவியல் கலைவதில்லை. இந்த அடக்கஸ்தலம் உட்பட்ட காணி சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும்.
சுனாமி அனர்த்தத்தின் போது கூட இக்கிராமத்தில் வீட்டுக்கூரைகள் காற்றில் பறந்தன. கடல் அலை மேலெழுந்து வந்தது. கடற்கரை காவு கொள்ளப்பட்டு மணல் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் இந்த அடக்கஸ்தலத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இங்கு பிள்ளைப்பாக்கியம் இல்லாத முஸ்லிம்கள் சென்று முழு இரவும் தங்கியிருந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள்.
1900 ஆண்டுகளுக்குப் பின்னிருந்தே முஸ்லிம்கள் இங்கு சென்று வருகிறார்கள். கடலில் மீன் கிடைக்கா விட்டால் அடக்கஸ்தலத்தின் அருகில் அமர்ந்து மன்றாடுவோம் என கிறிஸ்தவர்களும் தெரிவிக்கிறார்கள்.
கந்தூரி வைபவத்திற்குத் தடை
நூற்றாண்டு காலம் அம்பகந்தவில – அடக்கஸ்தலத்தை மையப்படுத்தி வருடாந்தம் நடாத்தப்பட்டு வந்த கந்தூரி வைபவத்துக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவை 106 (1) ஆம் பிரிவின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி, சிலாபம் பஸார் பள்ளிவாசல் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
அம்பகந்தவில – அடக்கஸ்தல வரலாற்றினை ஆய்வு செய்யும்போது அப்பகுதியில் பெரும்பான்மையாக வாழும் கிறிஸ்தவ மக்கள் இந்த அடக்கஸ்தலம் மீது நம்பிக்கை வைத்திருந்துள்ளார்கள். பற்றுக்கொண்டிருந்துள்ளார்கள். அவர்கள் தங்களது குறைகளை அங்கு சென்று அடக்கஸ்தலத்துக்கு அருகில் அமர்ந்து முறையிட்டிருக்கிறார்கள்.
அடக்கஸ்தலத்தில் பல தசாப்தங்களாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சகோதர வாஞ்சையுடன் ஒன்று கூடியிருக்கிறார்கள். இஸ்லாமிய ஆன்மிகவாதி ஒருவரின் மண்ணறை என்று அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. வருடாந்தம் நடைபெறும் மீன் கந்தூரி வைபவத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்துக்கும் கிறிஸ்தவ சமூகத்துக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதை கிறிஸ்தவர்களின் கந்தூரி வைபவத்திற்கான எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
கந்தூரி வைபவம் இடம்பெற்றால் கிராமவாசிகளுக்கு இடையில் கலவரம் ஏற்படும் நிலை உருவாகும். அத்தோடு அமைதிக்கும் சமாதானத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என சிலாபம் பொலிஸார் சிலாபம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்ததையடுத்தே சிலாபம் நீதிமன்றினால் இத்தடை விதிக்கப்பட்டது.
அடக்கஸ்தலத்துக்கு அருகில் கிறிஸ்தவ சிலை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு முன்பிருந்தே இந்த அடக்கஸ்தலம் அமைந்துள்ள காணியை அபகரிப்பதில் சிலர் குறியாக இருந்துள்ளனர். கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு மார்ச் மாதம் அடக்கஸ்தலத்துக்கு 10 அடி தூரத்தில் பலாத்காரமாக கிறிஸ்தவ சிலை ஒன்று நிறுவப்பட்டது. இச்சம்பவம் முஸ்லிம்களை மிகவும் கவலைகொள்ளச் செய்தது. என்றாலும் முஸ்லிம்கள் தமது பள்ளிவாசலுக்கு சொந்தமான அடக்கஸ்தலம் அமைந்துள்ள காணியில் அத்துமீறிய சம்பவத்துக்காக கிறிஸ்தவர்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கவில்லை பிரச்சினையை சமாதானமாக தீர்த்துக்கொள்ளவே விரும்பினர். அதனையடுத்து நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து கிறிஸ்தவர்கள் அப்பகுதியில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதன் பிரதிபலனே கந்தூரி வைபவத்துக்கான தடையாகும்.
பள்ளிவாசலின் சட்ட ஆலோசகர்
அடக்கஸ்தலத்தினை நிர்வகித்து வரும் சிலாபம் பஸார் பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினரும் சட்ட ஆலோசகரும் சிலாபம் நகர சபையின் உப தலைவருமான சட்டத்தரணி சாதிகுல் அமீன் இவ்விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாகும்.
அம்பகந்தவிலவில் குறிப்பிட்ட அடக்கஸ்தலத்துக்கு 2 ஏக்கர் காணி சொந்தமாகவுள்ளது. சிலாபம் பஸார் பள்ளிவாசலே இக்காணியையும் அடக்கஸ்தலத்தையும் நிர்வகித்து வருகிறது. பல தசாப்தங்களாக முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வந்த கந்தூரி வைபவம் இவ்வருடம் கிறிஸ்தவர்களின் முறைப்பாட்டினையடுத்து தடை செய்யப்பட்டுள்ளமை வருந்தத்தக்கதாகும். இக்காணியை ஒரு சமூகம் அபகரித்துக்கொள்ளும் முயற்சியாகவே இதைப்பார்க்கிறேன். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பிருந்தே இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு கிறிஸ்தவ சிலை ஒன்றும் பலாத்காரமாக வைக்கப்பட்டுள்ளது. இக்காணி முஸ்லிம் சமூகத்துக்குரியதாகும். அதற்கான சட்ட ரீதியான ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் இம்முயற்சிகள் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.
கிறிஸ்தவ சிலை நிறுவப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளோம். முஸ்லிம்கள் வன்முறையினை எதிர்ப்பவர்கள். ஏப்ரல் தாக்குதல்களை வன்மையாக நாம் கண்டித்துள்ளோம். ஒரு சிறு குழுவினர் செய்த இஸ்லாத்துக்கு விரோதமான செய்கைகளுக்கு முழு முஸ்லிம் சமுதாயமும் பொறுப்பல்ல. இதை கிறிஸ்தவ மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை எம்மால் விட்டுக்கொடுக்க முடியாது. இதற்கு சமாதானமாகத் தீர்வுகாண விரும்புகிறோம் என சட்டதரணி சாதிகுல் அமீன் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல் பரிபாலனசபை கர்தினாலுக்கு கடிதம்
அம்பகந்தவில அடக்கஸ்தலத்தையும், அதற்கு உரித்தான இரண்டு ஏக்கர் காணியையும் பரிபாலித்துவரும் இந்திய ஹனபி ஜும்ஆ பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் சிலாபம் பஸார் பள்ளிவாசல், கந்தூரி தடை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறது. இது நல்லிணக்கத்திற்கான வெளிப்பாடாகும்.
இது தொடர்பில் பள்ளிவாசல் பரிபாலனசபை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. பள்ளிவாசலின் பரிபாலனசபையின் சார்பில் அதன் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஏ.டப்ள்யூ. சாதிகுல் அமீன் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
கர்தினால் அவர்களே; எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க அருட் தந்தையர் தொடர்பில் நாம் எத்தகைய முறைப்பாடும் செய்திராத நிலையில் சிலாபம் பொலிஸார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் சமாதானத்திற்கு எம்மால் குந்தகம் இழைக்கப்படவில்லை. கத்தோலிக்க அருட் தந்தை தெரிவித்துள்ளதை நோக்கும்போது சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்க வேறு தரப்பினர் முயல்வதாக எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இச்சந்தர்ப்பத்தில் இனம் தெரியாத சிறு குழுவினர் சமய சகவாழ்வினைச் சீர்குலைப்பதற்காக அம்பகந்தவில மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இதன் மூலம் முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியை பலாத்காரமாக அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்பதே முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாகும்.
சிலாபம் – இரணவில பாதையில் அம்பகந்தவில கிராமத்தில் “ ஹெடரியன் கந்த” எனும் இடத்தில் முஸ்லிம்கள் வருடாந்தம் கந்தூரி வைபவம் நடத்துகிறார்கள் என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம். இந்த நிகழ்வில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்களும் ஏனைய இன மக்களும் கலந்து கொள்கிறார்கள்.
அம்பகந்தவிலவில் முஸ்லிம் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஈராக்கில் இருந்து சிலாபம் கடலோரப்பகுதிக்கு வருகை தந்தவர் ஆவார். அவர் மரணித்ததன் பின்பு இப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.
முஸ்லிம்களால் அம்பகந்தவில ’40 முழத்தடி ஸியாரம்’ என இது அழைக்கப்படுகிறது. அவரது பெயரால் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விடுமுறை தினமொன்றில் இந்த கந்தூரி வைபவம் நடத்தப்படுகிறது.
இந்த அடக்கஸ்தலம் அமைந்துள்ள காணி 1969.11.23 ஆம் திகதி 6920 ஆம் இலக்க காணி உறுதி மூலம் சிலாபம் பஸார் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு எழுதப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அங்கு கத்தோலிக்க சிலையொன்று நிறுவப்பட்டு “சாந்தியாகு விளையாட்டு மைதானம்” எனப் பலாத்காரமாக பெயர் பலகையொன்றும் நடப்பட்டு உள்ளது. இது தொடர்பில் அப்பகுதி கத்தோலிக்க தேவாலயத்திற்கு அறிவிக்கப்பட்டது என்றாலும் நாட்டில் நிலவிய அசாதாரண நிலை காரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என்பதை அறியத்தருகிறோம். என்றாலும் பின்பு நாங்கள் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்தோடு பள்ளிவாசல் பரிபாலனசபை மூலம் அருட் தந்தை வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலே 2020 .02.09 ஆம் திகதி கந்தூரி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரின் கோரிக்கையையடுத்து நீதிமன்றத்தினால் கந்தூரிக்கு தடைவிதிக்கப்பட்டது.
பள்ளிவாசலுக்கு சொந்தமான இந்த காணியை எவ்வித தடைகளுமின்றி சுதந்திரமாக முஸ்லிம்கள் கையாள்வதற்கு நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்று நம்புகின்றோம். உங்களின் தலையீட்டினால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புகிறோம். இவ்வருடத்திற்கான கந்தூரி வைபவத்தை 2020.03.08 அல்லது 2020.03.09 ஆம் திகதி நடத்துவதற்கு உங்களது ஆசீர்வாதமும் அனுமதியும் கிடைக்கும் என பள்ளிவாசல் நம்புகின்றது.
தரீக்கா கவுன்ஸில் பிரதிநிதிகள் உங்களுடன் இது தொடர்பில் நேரில் கலந்துரையாடி விளக்கமளிக்க விரும்புகிறார்கள். அதற்கான திகதியை ஒதுக்கித்தருமாறு வேண்டுகிறோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமுக தீர்வு வேண்டும்
இவ்விவகாரத்தில் தாமதமின்றி துரித தீர்வுக்காணப்படவேண்டும். தாமதங்கள் மேலும் இனங்களுக்கிடையில் விரிசல்களையே உருவாக்கும். தரீக்கா கவுன்ஸில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்பியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
அம்பகந்தவில பகுதியில் கடந்த காலங்களில் நிலவிய இரு இனங்களுக் கிடையிலான சகோதரத்துவம், நல்லிணக்கம், சகவாழ்வு மீண்டும் ஏற்படுத்தவேண்டும். மீண்டும் அவர்கள் பிரதேசத்தில் வாழ வேண்டும். இதுவே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்