தியாகத்தின் உச்சத்தை எடுத்துக்காட்டும் புனித ஹஜ் கடமை இன்று ஒரு களியாட்டத்தை நோக்கிய சுற்றுலாவாக இலங்கையில் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறு மாற்றம் பெறுவதற்கான காரணங்களை ஓரளவாவது விளக்க இக்கட்டுரையின் மூலம் முயற்சிக்கின்றேன். எமக்குத் தெரிந்த வகையில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ஹஜ்ஜுக்கு ஹஜ்ஜாஜிகளை அழைத்துச் செல்ல ஒருசில பிரயாண முகவர்கள் ஏற்பாடுகளை செய்து வந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும், ஒரு புனிதமான சேவையை செய்கின்றோம் என்ற உணர்வோடு, எவ்வித இலாப நோக்குமற்று இச்சேவையை செய்து வந்ததால் அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் மதிப்புக்குரியவர்களாகவும், அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புனிதக் கடமையின் வழிகாட்டிகள் என்ற உணர்வே மிகைத்திருந்தது. இதன் மூலம் ஹஜ்ஜாஜிகளும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சர்வதேச ரீதியாக மிகக் குறைந்த கட்டணத்திலேயே தமது வாழ்வில் ஒருமுறை மாத்திரம் நிறைவேற்றும் கட்டாயக் கடமையான (வசதி படைத்தோருக்கு) இக்கடமையை நிறைவேற்றி வந்தார்கள். அதற்கான சகல வசதிகளையும் அரசாங்கமும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஹஜ் பிரயாண முகவர்களிடையே எவ்வித போட்டியோ, பொறாமையே, பொய்யான வாக்குறுதிகளோ, ஹஜ் செய்பவர்களை தமது பக்கம் ஈர்ப்பதற்கான வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரங்களோ அப்போது எதுவும் இருக்கவில்லை.
ஹஜ் பிரயாண மாபியாக்களின் தோற்றம்
இன்று ‘மாபியாக்கள்’ என்ற சொல் எமது ஊடகங்களில் பல்வேறு விதமான மனித நாகரிகத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினருக்கு பொதுவாகக் கூறப்படுகின்றது.
‘Any Organized Group of Criminals resembling the Mafia in its way of operating’.
“தமது செயற்பாடுகளில் சட்டவிரோத பயங்கர வழிகளில் செயற்படும் குழுவினரே மாபியா” என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.
இன்று ஹஜ் பிரயாண முகவர்களாக செயற்படுபவர்களில் பலர் இஸ்லாமிய விழுமியங்களை மட்டுமன்றி சாதாரண மனித விழுமியங்களைக்கூட கவனத்தில் எடுக்காது எவ்வழியிலாவது அதிக பணத்தை ஈட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனேயே மிக அதீத வேட்கையோடு செயற்படுவதனாலேயே இவர்களை “மாபியாக்கள்” என அழைப்பதை தவிர வேறு சொற்பிரயோகம் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு இவர்கள் செயற்படுவதை என்னால் பின்வரும் நிலைகளில் உறுதிப்படுத்த முடியும்.
குறுகிய காலத்தில் அதி உச்ச வருமானம்
சாதாரணமாக ஒரு தொழிலில் ஈடுபடும் ஒருவர் நாட்டின் சட்ட ஒழுங்குகளை பின்பற்றி தொழில் செய்யும்போது அவனால் அதிக இலாபத்தை ஈட்ட முடியாது. அதிலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் அவன் மிக அதிகமான கடப்பாடுகளுடன் ஹறாம், ஹலால் பேணி ஈடுபட வேண்டியுள்ளதால் அவனாலும் மிக அதிகமான கொள்ளை இலாபத்தை ஈட்டமுடியாது. இவ்வளவுக்கும் அவனது பண முதலீடு, நெற்றி வியர்வை சிந்திய உடலுழைப்பு, குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு தியாகங்கள் என்பன எல்லாம் அங்கு முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால், ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் ஈடுபடும் ஒருவர் மிகக் குறுகிய காலத்தில் பல கோடி ரூபாக்களை சம்பாதிப்பதை, இத்தொழிலில் ஈடுபடும் பலரை நாம் அவதானிக்கும்போது, மிக இலகுவாகக் கண்டு கொள்ளலாம். சாதாரணமாக, தாம் அழைத்துச் செல்லும் ஒரு ஹாஜியிடமிருந்து அனைத்து செலவுகளும் போக ஒரு லட்ச ரூபாயை நிகர இலாபமாக ஹஜ் முகவரினால் பெற்றுக்கொள்ள முடிகின்றது. எமது ஊர்களிலேயே ஹஜ் முகவர்களாக செயற்படும் பலர், சாதாரண நிலையிலிருந்த தமது வாழ்வுச் சூழலை, ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் ஈடுபட்ட மிகக் குறுகிய காலத்திலேயே பல்வேறு வாழ்க்கை வசதிகளையும் பெற்று ஊரிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களாகத் திகழ்வதை என்னால் நிரூபிக்க முடியும். தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் வாகனங்கள், பலகோடி செலவிட்ட ஆடம்பர வீடுகள், கொழும்பில் வீடுகள், வங்கிகளில் கோடிக்கணக்கில் பண முதலீடு என்பனவெல்லாம் எனது கூற்றை நிரூபிக்கும் சான்றுகளாகும். இவ்வாறான ஹஜ் பிரயாண முகவர்கள் பலர் தாம் ஏற்கனவே வகித்து வந்த நிரந்தர வருமானமுடைய கொழுத்த சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தையே துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் நிரந்தரமாக ஈடுபடுபவர்களாவர். அண்மையில் ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் ஈடுபடும் ஒருவர், மற்றொருவருடனான வாய்த்தர்க்கத்தின் போது அவரையறியாமலேயே அவர் ஹஜ் பிரயாண தொழிலின் மூலம் தான் சம்பாதித்த பல சொத்துக்களை பட்டியலிட்டு காட்டியதை என்னால் நிரூபிக்க முடியும். இவ்வாறு அதிக கொள்ளை இலாபமீட்டும் தொழிலாக இன்று ஹஜ் பிரயாண முகவர் தொழில் மாற்றம் அடைந்துள்ளதை எம்மில் பலர் நிதர்சனமாக அறிந்தும், அதுபற்றி பகிரங்கமாக கதைப்பதை தவிர்த்துக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொள்ளை இலாபமீட்டும் தொழிலாக எடுத்துக் கொள்ளாமல் அதை ஒரு புனிதமான சேவையாக – குறைந்த இலாபத்துடன் வழி நடாத்திச் செல்லும் பல ஹஜ் பிரயாண முகவர்களும் எமது நாட்டில் உள்ளதையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ‘துஆ’வும் செய்கிறேன்.
ஹஜ்ஜாஜிகளை கவரும் விளம்பரங்கள்
இன்று இலங்கையிலுள்ள வானொலி, தொலைக்காட்சி, தினசரிப் பத்திரிகைகளில் எல்லாம் ஹஜ் பிரயாண முகவர்களின் விளம்பரங்களே நிறைந்து காணப்படுகின்றன. அதிகமான பணத்தை செலவிட்டு செய்யப்படும் இவ்விளம்பரங்கள் மூலமே, ஹஜ் பிரயாண முகவர் தொழில் எவ்வளவு இலாபம் தரக்கூடியது என்பதை எம்மால் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும், ஒரு முஸ்லிம் அதிகாரி பின்வருமாறு கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வருமானத்தில் அதிக வருமானம் முஸ்லிம்களின் விளம்பரங்கள் மூலமாகவே பெறப்படுவதாகவும் அதிலும் 95 வீத வருமானங்கள் ஹஜ், உம்ரா பிரயாண முகவர்களின் விளம்பரங்கள் மூலமாகவே கிடைப்பதையும் ஒளிவு மறைவின்றிக் கூறினார். அந்தளவுக்கு தமது ஹஜ், உம்ரா பிரயாண தொழிலை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி, அதிக வாடிக்கையாளர்களை தம் பக்கம் கவர்வதில் இவர்கள் குறியாக உள்ளனர். அவர்கள் விளம்பரப்படுத்தும் சில வாசகங்கள் பின்வருமாறு உள்ளன.
• “ஹஜ்ஜாஜிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிட வசதி”.
• “கஃபத்துல்லாவுக்கு மிக அண்மையில் ஹோட்டல்கள்”.
• “தினமும் வாய்க்கு ருசியான பிரியாணி சாப்பாடு மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய வகையிலான சாப்பாட்டு ஒழுங்குகள்”
• “நேரடியாக மக்கா, மதீனாவுக்கு செல்லக்கூடிய விமான சேவை ஒழுங்குகள்’’
• “உங்கள் ஊரிலிருந்தே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் வசதிகள்”.
இவ்வாறு பல விளம்பரங்கள். இவைகளில் எதுவுமே புனிதமான – தியாகத்தின் உறைவிடமான – ஹஜ் இபாதத்தின் உயிரோட்டத்தை நினைவுபடுத்துவதாக அமையாதது மட்டுமன்றி, அக்குறிக்கோள்களை மாசுபடுத்துவதாகவே அமைந்துள்ளன.
பொய்யான வாக்குறுதிகள்
ஹஜ்ஜாஜிகளை தொடர்ந்து கவருவதற்காக அவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு என்ற பெயரில், ஹஜ்ஜுக்கு செல்வதற்கு முன்பே, ஆடம்பரமான ஹோட்டல்கள், வரவேற்பு மண்டபங்களுக்கு அவர்களை வரவழைத்து மிக அதிக செலவில் விஷேட சாப்பாட்டு வைபவங்களை ஹஜ் முகவர்கள் பலமுறை ஒழுங்கு செய்கின்றனர். அவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்வதற்கு பதிவு செய்துள்ளவர்களை மட்டுமன்றி அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடியவர்களாக தாம் கருதும் முக்கிய பிரமுகர்களையும் அந்த விருந்து வைபவத்துக்கு மிகத்திட்டமிட்ட முறையில் அழைக்கின்றனர். இவ்வாறு சுமார் 70 ஹஜ்ஜாஜிகளை அழைத்துச் செல்லும் ஒரு முகவர் ஒரு வைபவத்துக்கு மட்டும் வரவேற்பு வைபவ மண்டபம் உட்பட செலவுகளுக்கு சுமார் பத்து லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடுவதை நிரூபிக்க முடியும். இவ்வாறு பல விருந்து வைபவங்கள் பிரயாணத்துக்கு முன்னாலேயே முகவர்களால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இவ்வாறான வைபவத்தின் ஓர் அங்கமாக தம்மோடு இத்தொழிலில் உறுதுணையாக ஈடுபடும் ஒரு மெளலவி மூலம் ஒரு வழிகாட்டல் பயானும் ஒழுங்குசெய்யப்படும். இறுதியில் ஹஜ் முகவர் தமது ஹஜ் குழுவில் இணைந்து கொண்டோருக்கு என்னென்ன வசதிகள், ஏனைய சரித்திர இடங்களுக்கான பிரயாணங்கள் பற்றியெல்லாம் மிக விஷேடமாக உரையாற்றுவார்கள். அவர்களின் உரைகள் எல்லாம் அவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு மட்டுமன்றி, அடுத்தடுத்த வருடங்களில் செல்ல உத்தேசித்துள்ளவர்களுக்கும் நாவூறும் வகையில் மிகக் கவர்ச்சிகரமானதாக அமையும். அவ்வாறு அங்கு வழங்கப்படும் வாக்குறுதிகளில் முழுவதும் நிறைவேற்றப்படுவதில்லை. சில வேளைகளில் அவ்வாறு வாக்குறுதி வழங்கிய சில வரலாற்றுப் பிரயாணங்களுக்கு மேலதிக கட்டணங்களையும் ஹஜ்ஜாஜிகளிடம் அறவிடுவதை நான் கண்டுள்ளேன். இவ்வாறு பொய்யான பல வாக்குறுதிகளை இப்புனித கடமையிலேயே வழங்குவதை பல ஹஜ் முகவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுக்கு சென்று வந்த பல ஹஜ்ஜாஜிகளை நாம் சந்தித்து உரையாடுகின்றபோது, ஹஜ் முகவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், பொய்யும், புரட்டும் நிறைந்த தமது அனுபவங்களையும், புனிதமான கடமையை நிறைவேற்றி வந்த நாம் நாவடக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட கைவிட்டு மிகப் பகிரங்கமாகக் கதைப்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம்.
கஃபத்துல்லாவில் நடக்கும் மோசடிகள்
2014ஆம் ஆண்டில் நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது கட்டாயமாகக் கொடுக்க வேண்டிய குர்பானி (தம்மு) கொடுப்பதற்காக எமது குழுவில் 20 பேர் வரை தெரிவு செய்தார்கள். தொடர்ந்து தவாப், திலாவத் ஏனைய இபாதத்துகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாம், ஹஜ் முகவரோடு குர்பானி ஆடுகளை பெறக்கூடிய (ஏற்கனவே பணம் கொடுத்து ஓடர் செய்யப்பட்ட) இடத்துக்கு போய் பல மணித்தியாலயம் காத்திருந்தும் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்ட மெளலவியால் ஆடுகள் கொண்டு வரப்படவில்லை. மட்டுமன்றி, அவரிடம் பணம் கொடுத்த வேறு சில முகவர்களும் ஆடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பல நூற்றுக்கணக்கான ஆடுகளை விநியோகிக்கும் ஓடர்களை பெற்ற அவர் அப்போது தலைமறைவாகியுள்ளதை அறிந்து அன்று முழுவதும் எமது பெறுமதியான நாட்கள் வீணாகக் கழிந்தன. இறுதியாக நாமே வேறொரு இடத்துக்கு சென்று புதிதாக ஆடுகளைப் பெற்று குர்பானி கொடுத்து எமது இருப்பிடம் திரும்ப இரவு நேரமாகிவிட்டது. குர்பானிக்காக மக்காவில் இயங்கும் வங்கிகளில் பணம் செலுத்தும் நடைமுறை உள்ளபோதும் ஹஜ் முகவர்கள் தமது மோசடி உழைப்புக்காக அதற்கு ஹஜ்ஜாஜிகளை விடுவதில்லை. இவ்வாறான பல மோசடிகள் மக்கா மதீனாவில் ஹஜ் முகவர்களால் இடம்பெறுகின்றன.
அரசியல் மயப்படுத்தப்பட்ட ஹஜ் இபாதத்
கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் அரசியலிலும் சமூக தளத்திலும் பேசப்படும் முக்கிய விடயமாக ஹஜ் வணக்கம் மாறியுள்ளது. அடுத்தடுத்து வந்த பல அரசாங்கங்களில் ஹஜ் ஏற்பாட்டுக்கென புதிய புதிய அமைச்சுகளும் ஏற்பாட்டுக்குழுக்களும் அமைக்கப்பட்டு ஆளுக்காள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுடன் மட்டுமல்லாது, ஹஜ் முகவர்களால் பல வழக்குகள் பல வருடங்களில் தொடரப்படுமளவுக்கு ஹஜ் பிரயாண ஒழுங்குகள் முகவர் மாபியாக்களிடையே மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளன. இன்று வரை இதற்கான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மட்டுமன்றி, ஹஜ்ஜாஜிகள் ஹஜ் பிரயாணத்துக்கென செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இன்று ஒரு ஹாஜி தனது முகவருக்கு மாத்திரம் ஆறரை இலட்ச ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வதிகரிப்பும் பல உள்நாட்டு வெளிநாட்டுக் காரணங்கள் இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லாவற்றையும்விட ஹஜ் முகவர்களின் அதிக இலாபமீட்டும் பேராசையே இவ்வதிகரிப்புக்கான 70% வீத காரணமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு முகவரும் பல வழிகளில் போட்டியிடுகின்றனர்.
இலங்கையில் ஹஜ் பிரயாணத்தில் வருடாந்தம் ஹஜ்ஜாஜிகளால் ( 6 X 4000) 2400 மில்லியன் ரூபாக்கள் முதலீடு செய்யப்படுவதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
மாற்றத்தை வேண்டி
ஹஜ் பிரயாண முகவர்களின் விடயம் தொடர்ந்து வந்த பல அரசாங்கங்களின் பேசு பொருளாகக் காணப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட புதிய அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் ஹஜ் பிரயாணத்துக்கென புதிய கமிட்டி ஒன்றை தெரிவு செய்துள்ளதோடு, ஹஜ்ஜாஜிகளின் நலன்சார்ந்த பல விடயங்கள் பற்றி முதன் முறையாக பகிரங்கமாக கருத்துக்ளை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கதே. அதில் முக்கியமாக ஒரு ஹாஜியின் பிரயாண செலவை ஐந்து இலட்சமாக குறைக்க வேண்டும் என்பதும், ஹாஜிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பை முழுமையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஹஜ் கமிட்டியே ஏற்க வேண்டும் என்பதும் மிகவும் வரவேற்கத்தக்க விடயங்களாகும். எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட ஹாஜிகளை குறைந்த செலவில் அரசாங்க ஹஜ் கமிட்டியினூடாக அழைத்துச் செல்லும் ஏற்பாடு பல தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. எனது கட்டுரையில் கூறிய பல மோசடிகள் மாபியா செயற்பாடு, கொள்ளை இலாபமீட்டல் போன்ற பல மோசமான செயற்பாடுகளுக்கு புதிய அரசாங்கமும் பிரதம மந்திரியும் முன் மொழிந்துள்ள இவ்வேற்பாடுகள் முற்றுப்புள்ளி வைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். எனினும், சென்றவாரக் கட்டுரையில் கூறப்படுவது போன்று பல எதிர் விளைவுகளையும் நாம் இதில் எதிர்பார்க்கலாம். அதற்கான எதிர் விளைவுகளை தவிர்ந்து கொள்ளக்கூடிய சில ஆலோசனைகளை பின்வருமாறு முன்வைக்கின்றேன்.
1. ஹஜ்ஜுக்குப் பதிவு செய்யும் நடைமுறையை ஒவ்வொரு ஊரிலுமுள்ள பிரதேச காரியாலயம், குறிப்பாக முஸ்லிம் சமய கலாசார உத்தியோகத்தர் மூலம் மேற்கொண்டு பதிவுகளை பெறலாம். அதற்காக அவ்வூழியருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளையும் வழங்கலாம்.
2. ஒவ்வொரு ஊரிலுமுள்ள பள்ளிவாசல் நிர்வாகம் உலமா சபைகளின் ஒத்துழைப்பையும் பெறலாம். ஹஜ் செய்பவர்களுக்கான விஷேட சொற்பொழிவுகளை இந்நிறுவனங்களின் மூலம் ஏற்பாடு செய்வதோடு அதற்கான கொடுப்பனவுகளையும் வழங்கலாம்.
3. ஹஜ்ஜாஜிகள் மக்கா, மதீனாவில் தங்குவதற்கான போதுமான ஹோட்டல்கள், தங்குமிடங்களை எவ்வித குறையுமின்றி முற்பதிவு செய்வதற்கான முன்னேற்பாடுகளை ஹஜ்கமிட்டி மிகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும்.
4. அவ்வாறே விமானப் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அதிக விமானப் பதிவுகள் செய்யப்படும்போது அதிகளவிலான விலைக்கழிவுகளும் எமக்கு கிடைக்கும்.
5. ஹஜ் ஒழுங்குக்கென சவூதியில் செயற்படும் அமைச்சர், அமைச்சு, முஅல்லிம், முஹத்திப் போன்றோரோடு இலங்கை அரசாங்கத்தின் அனுமதிபெற்ற ஹஜ் கமிட்டி கமிட்டி ஊடாக அரச உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
6. இலங்கை ஹஜ் கமிட்டியில் மிகவும் தைரியமும் அனுபவமும் தகைமையும் கொண்ட உறுப்பினர்களின் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
7. ஹஜ்ஜின் இறுதியில் ஒவ்வொரு ஹாஜியிடமும் வினாக்கொத்தின் மூலம் (Questionnaire) அவர்களின் கருத்துக்களை இரகசியமாகப் பெற்று எதிர்காலத்தில் மேலும் பல நல்ல நடைமுறைகளை அமுல்படுத்தலாம்.
ஜம்இய்யத்துல் உலமாவின் பாரமுகம்
ஹஜ் பிரயாண விடயத்தில் பல இழுபறிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளபோதும் இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்விடயத்தில் இன்றுவரை பாரமுகமாகவே இருந்து வருகின்றது. புதிய அரசாங்கத்தால் இப்போது கூறப்படும் முன்மொழிவுகளைக் கூட அவர்கள் சில வேளை எதிர்க்க முற்படலாம். ஏனெனில், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் முக்கிய பதவிகளில் உள்ள பலர் இலங்கையின் மிக முக்கிய பிரசித்திபெற்ற ஹஜ் முகவர்களாக உள்ளார்கள் என்பதையும், உலமாசபை அவர்களின் நலனிலேயே அதிக அக்கறை செலுத்தும் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
‘அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.’-Vidivelli
- பேராசிரியர் மெளலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன்
(முன்னாள் பீடாதிபதி; இஸ்லாமியக் கற்கை அரபு மொழிபீடம்,
தென்கிழக்கு பல்கலைக்கழகம்)