இந்தியாவின் டெல்லி மாநிலத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தது. இத்தேர்தலில் வெறும் எட்டு ஆசனங்களை மாத்திரமே அக்கட்சியினால் பெறமுடிந்தது. மோடியின் தீவிர இந்துத்துவ தேசியவாதக் கொள்கையின் கருத்துக் கணிப்பாக நோக்கப்பட்ட இத்தேர்தலில் அக்கட்சி வெறுப்புப் பிரசாரங்களையே முன்னெடுத்திருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி நரேந்திர மோடியின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி 2015 மாநிலத் தேர்தலில் பெற்றுக்கொண்டதைவிட ஐந்து மேலதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட போதும் இத்தேர்தல் முடிவுகள் பாரிய ஏமாற்றமாக மாறி எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இருந்தது. இத்தேர்தலில் பாரிய வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக நாடளாவிய ரீதியில் மோடியின் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் டெல்லி மாநில சட்டசபையின் ஆட்சியைக் கைப்பற்றுவது பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னுரிமைகளுள் ஒன்றாக அமைந்திருந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரிய வெற்றிபெற்ற மோடி தலைநகரையும் வெற்றி கொள்வதில் விரைவாகத் தனது கவனத்தை திருப்பியிருந்தார்.
நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடளாவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. குறித்த சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்குப் பாகுபாடானதென அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இவ்வமைதியின்மை நிலை மோடிக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதுடன், அது வேறு பிரதான பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் வளர்ச்சியடைந்து வருகின்றது. அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்தியாவின் மதச்சார்பின்மை அத்திவாரத்தை தகர்த்து அந்நாட்டை இந்துத்துவத்தை மையமாகக் கொண்ட நாடாக மாற்றுவதற்கு மோடியின் கட்சி நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளதாக கருதுகின்றனர்.
மோடியின் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பிரசாரத்தின்போது பிரிவினைவாத மொழிநடையையே பயன்படுத்தினர். அவர்களின் பிரசாரத் தொனி எதிரணிக்கு ஆதரவு வழங்குவது, இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவது போன்றது மற்றும் அது தேசத்துரோகம் என்பதாகவே அமைந்திருந்தது. ஒரு பிரதி அமைச்சர், “துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” என மக்களைத் தூண்டிய இரண்டு வாரங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன.
தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் மத மற்றும் வகுப்பு பிரிவுகள் இடையே பரந்த ஆதரவைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடியின் கட்சிக்கு வாக்களித்த பலரும் இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தனது பிரசாரத்தின்போது சுகாதார சேமநலன் மற்றும் கல்வி போன்ற பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டையே வலியுறுத்தியிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை, வாக்காளர்கள் கடந்த இரண்டு தடவை ஆட்சிகளின்போதும் சிறப்பாக சேவையாற்றிய கட்சிக்குத் தமது வாக்குகளைப் பரிசளித்திருந்தனர்.
“டெல்லி மக்கள் அரசியல் மற்றும் அரசியல் அபிவிருத்தி என்பவற்றின் கருத்துக்களை தெளிவாக வரையறுத்துள்ளனர்” என வெற்றியைக் கொண்டாடும் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான அரவிந் கெஜ்ரிவால் கூறினார். “டெல்லி மக்கள் தமது பாடசாலைகள், மருத்துவமனைகள் என்பவற்றை முன்னேற்றும், அத்துடன் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவோருக்கே வாக்களிப்போம் எனக் கூறியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்வெற்றியானது இந்தியத் தாய்நாட்டின் வெற்றியாகும். இவ்வெற்றியானது பிரிவினைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இந்திய அரசியல் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
பிரசாரத்தின்போது மோடியின் கட்சியின் பிரதான பிரசார மூலோபாய நிலையாக பிரிவினை அடையாளம், குடியுரிமைச் சட்டம் மற்றும் ஏனைய இந்துத்துவ மையப்படுத்தப்பட்ட முன்னெடுப்புகளை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. தலைநகரின் தனித்துவம் மிக்க தேவைகள் பற்றி இப்பிரசாரங்களில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகர்கள் தமது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிப்பது பாகிஸ்தான் இஸ்லாமிய அரசுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பானது என்ற பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். கெஜ்ரிவால், போராட்டங்களுக்கு இரகசிய ஆதரவு வழங்கும் ஒரு பாகிஸ்தானிய முகவர், முஸ்லிம்களுக்கு உதவப் பணிபுரிபவர் மற்றும் இந்து சனத்தொகைளை அடக்கியாள நினைப்பவர் என்ற பிரதிவிம்பத்தை வரைய தேர்தல் பிரசாரங்களின்போது பாரதீய ஜனதாக் கட்சி முயன்றது.
இந்தியாவின் தகவல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கெஜ்ரிவாலை ஒரு பயங்கரவாதி என்று கூட வர்ணித்திருந்தார். “நீ ஒரு பயங்கரவாதி, அதற்கு எம்மிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன” எனக் கூறிய ஜாவேத்கார் எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.
எனினும், ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் பாரதீய ஜனதாக் கட்சியின் கொள்கைகளிலுள்ள இந்துத் தேசியவாதத்தின் மென்மையான பகுதி ஒன்றையும் தனது தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தியிருந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சி சிறுபான்மைகளுக்கு எதிரான இந்துப் பெரும்பான்மைக் கொள்கைகளை பிரசாரத்துக்குப் பயன்படுத்திய அதேவேளை, ஆம் ஆத்மிக் கட்சி தனது சொந்த இந்து அடையாளத்தை காண்பித்துக் கொண்டு மத சகவாழ்வு மற்றும் பல்வகைத்தன்மை போன்ற கொள்கைகளைப் பிரசாரம் செய்தது. ஆம் ஆத்மிக் கட்சியின் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களின்போது இந்துக் கோயில்களுக்கு விஜயம் செய்ததுடன், ஆன்மிகப் பாடல்களையும் பாடினர். அத்துடன் ஆர்ப்பாட்டங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருந்தனர். பாரதீய ஜனதாக் கட்சி, ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தோற்றுவாய் எனப் பிரசாரம் மேற்கொண்டிருந்தது.
ஓர் இந்துவான கெஜ்ரிவால் தனது வெற்றியுரையின் பின்னர் நேரடியாக கோயில் ஒன்றுக்கு சென்று தனது விடயத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது கெஜ்ரிவால், பாரதீய ஜனதாக் கட்சி எந்த ஓர் அடைவையும் பெற்றிருக்காத காரணத்தினால் அவர்களுக்கு தேர்தலில் வெற்றிபெற பிரிவினைவாதம் மாத்திரமே உள்ளதாகச் சாடியிருந்தார்.
“இதன் காரணமாகவே அவர்கள் தமது சொந்த அடைவுகளை மக்கள் காண்பதிலிருந்து தூரப்படுத்தவே இந்து – முஸ்லிம் பிரிவினையைக் கையில் எடுத்துள்ளனர்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப்பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
“தேசப்பற்று என்றால் என்னவென்று தெரிவு செய்வதற்கான நேரம் வந்துள்ளது. தேசப்பற்று பற்றி நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டுமா அல்லது இந்து – முஸ்லிம் விவாதத்தை வலியுறுத்துவதா? மக்களுக்கு தாங்கக்கூடிய செலவில் சுகாதார சேமநலன்களை வழங்குவது தேசப்பற்றா அல்லது தேசப்பற்று என்பது இந்து – முஸ்லிம் பிரச்சினையா?” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கெஜ்ரிவால் ஆர்ப்பாட்டங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருந்தார், அதற்குப் பதிலாக தனது கட்சியின் அடைவுகள் மற்றும் ஏனைய பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள் பற்றியே அவரது பிரசாரம் அமைந்திருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகிய தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக அமைந்ததோடு மூன்றாவது முறையாகவும் அவர் டெல்லியின் முதலமைச்சராகத் தேர்வாகியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஏமாற்றம் மிக்கதாக அமைந்திருந்த போதும், அதனது மூலோபாயம் உதவியானதாக அமைந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆளும் பாரதீய கட்சி 3 ஆசனங்களை வென்றிருந்த போதும் இம்முறை அவ்வெண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 67 ஆசனங்களை வென்றிருந்த ஆம் ஆத்மி கட்சியின் ஆசனங்களின் எண்ணிக்கை 62 ஆகக் குறைவடைந்துள்ளது. மேலும் பாரதீய ஜனதாக் கட்சி இத்தேர்தலில் 39 வீத வாக்குகளைப் பெற்றது. அது 2015 ஆம் ஆண்டைய தேர்தலைவிட 7 வீதம் அதிகமாகும்.
மோடியின் முன்னாள் ஆதரவாளரான ரூபா சுப்ரமண்யா என்ற பிரசித்தம் மிக்க பொருளாதார நிபுணர் பின்வருமாறு கூறுகின்றார்: “அவர்களின் பிரிவினை மற்றும் வன்முறை மூலோபாயம் அவர்களுக்கே வினையாக அமைந்து விட்டது”. முன்னர் மோடியின் ஆதரவாளராக விளங்கிய சுப்ரமண்யா மோடியின் பிரிவினை காரணமாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டவராவார். “அவர்களின் மூலோபாயம் எதிர்ப்பவர்களுக்கு சாதகமாகக் காணப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடையும்” என சுப்ரமண்யா மேலும் கூறுகிறார்.
மோடி வலியுறுத்தும் இந்துத் தேசியவாதக் கொள்கைகள் தொடர்ச்சியாக இரண்டு தேர்தல் வெற்றிகளை அவருக்கு வழங்கியிருந்தன. கடந்த காலங்களில் தோல்விகண்ட மாநிலங்களில் கூட மோடி கடந்த வருடம் வெற்றிபெற்றிருந்தார்.
எவ்வாறாயினும் பொருளாதார ரீதியாக இந்தியா தடுமாறுகின்றது. அந்நாட்டின் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 45 வருடங்களில் காணப்பட்ட அளவுகளில் மிகவும் அதிகமானதாகக் காணப்படுகின்றது. டெல்லியில் கிடைத்த படுதோல்வி போன்ற விடயங்கள் நாட்டில் பிரிவினை வன்முறைகளைத் தூண்டி முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயங்கும் நிலையை உருவாக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
இந்தியா மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வரவு – செலவுத்திட்ட வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரதியமைச்சர் அனுருக் தாக்கூர், ஆர்ப்பாட்டக்காரர்களை குறிக்கும் விதமாக “காட்டிக்கொடுப்பவர்களை சுட்டுத்தள்ளுங்கள்” என தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் கூறியிருந்தார்.
சிலர் இந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டனர். கடந்த வாரம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தின்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். தாக்கூர் சுட்டுக் கொல்லுங்கள் எனக் கூறிய பின்னர் இடம் பெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூட்டு சம்பவமாக அது அமைந்திருந்தது.
எனினும், மோடியின் பிரசாரம் சில எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடமும் மாற்றத்தை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. தினேஷ் சௌகான் என்ற 27 வயது நிரம்பிய வாடகை வாகனச் சாரதி தக்லாகபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் காணப்பட்ட நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்துக்கொண்டிருந்தார். “கெஜ்ரிவால் பாடசாலைகள் மற்றும் மின்சாரம் போன்றவற்றை முன்னேற்றுவதில் சிறப்பாகப் பணியாற்றுகின்றார். நான் அவரை விரும்புகிறேன், எனினும் நான் இம்முறை பாரதீய ஜனதாக் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளேன்” என சௌகான் கூறுகிறார்.
“கெஜ்ரிவால் முஸ்லிம்கள் மற்றும் சாஹீன் பார்க் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்” என சௌகான் கூறுகின்றார். டெல்லியில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதான சாலைகளை மறித்து மேற்கொள்ளப்படுகின்றன. அவை பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் இலச்சினையாக மாறியுள்ளன. “இதன் காரணமாகவே நான் அவருக்கு எதிராக வாக்களிக்கவுள்ளேன்” சௌகான் கூறுகின்றார்.
எவ்வாறாயினும் 62 வயது நிரம்பிய நசீமா பிரவீனுக்கு அபிவிருத்தியே பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. “வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றை வழங்கும் தலைவர்களே எமக்குத் தேவை. மதங்களின் அடிப்படையில் மக்களை பிரித்து வெறுப்பை வளர்க்கும் தலைவர்கள் எமக்குத் தேவையில்லை” என பிரவீன் கூறுகிறார்.-Vidivelli
- மூலக் கட்டுரை: மரியா அபிஹபீப் மற்றும் சமீர் யாசிர்
தமிழ் வடிவம்: அதீக் சம்சுதீன்