சாய்ந்தமருதுவுக்கு என அரசாங்கம் தனியான நகரசபை வழங்கியமை குறித்து எவரும் குழப்பமடையத் தேவையில்லை. சாய்ந்தமருதுவுக்கு தனிநாடு கொடுக்கவில்லை. அங்கு வாழும் மக்கள் தொகையைக் கருத்திற்கொண்டே தனியான உள்ளூராட்சி அலகு வழங்கப்பட்டுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுவுக்கென தனியான நகரசபை அலகு வழங்கப்பட்டமை தொடர்பில் ஞானசார தேரரிடம் ஊடகங்கள் கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், சாய்ந்தமருதுவுக்கு நகரசபை அலகு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு வழங்கப்பட்டமை தொடர்பில் பலர் அச்சமடைந்துள்ளனர். எவரும் அச்சமடையத் தேவையில்லை. அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்க வேண்டும்.
சாய்ந்தமருதுவில் முஸ்லிம்களுக்கென்று தனியான சபை உருவாக்கப்பட்டுள்ளது போன்று கல்முனையில் தமிழர்களுக்கென்று தனியான சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். கல்முனையில் தங்களுக்குத் தனியான பிரதேச செயலகம் வேண்டுமென அப்பகுதி தமிழ் மக்கள் 30 வருடகாலமாக போராடி வருகிறார்கள். அவர்களது நியாயமான கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
கல்முனையில் தமிழ் மக்களுக்குத் தனியான பிரதேச சபையொன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கிறது. நாங்கள் எந்த இனத்திற்கும் எதிரானவர்களல்ல. எந்த இனத்தினதும் அடிப்படைவாதத்தையே நாம் எதிர்க்கிறோம்.
ஏப்ரல் குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானை தொடர்புபடுத்தி சாய்ந்தமருதுவுக்கான தனியான நகரசபை விவகாரத்தை சிலர் எதிர்த்தாலும், எதிராக கருத்து வெளியிட்டாலும், அரசாங்கத்தின் இது தொடர்பான தீர்மானம் குறித்து எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்