பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டால் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் 28 ஆம் திகதிக்குமிடையில் ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றம் மார்ச் மாதம் 1 ஆம் திகதிக்குப் பின்பு கலைக்கப்பட்டால் தேர்தலை நடாத்தக்கூடிய திகதி மற்றும் விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கடிதத்துக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே தேர்தல் நடாத்தப்பட முடியுமான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டால் வேட்புமனு கோரல் மார்ச் 11 ஆம் திகதிக்கும் 17 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்குத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் உரிய காலத்துக்கு முன்பு கலைக்கப்படுவதென்றால் வேட்புமனு கோரும் திகதி, தேர்தல் நடாத்தப்படும் திகதி மற்றும் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுத் திகதி என்பன பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவேண்டும். இதனடிப்படையில் புதிய பாராளுமன்றம் கூடும் திகதி மே மாதம் 12 ஆம் திகதி என தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான சட்ட ஆலோசனையை ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் கோரியிருந்தார். 19 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு அமைய எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதிக்குப் பின்பு எந்தச் சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியும் என சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்