வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் அதிபாதுகாப்புக்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை துப்புரவு செய்து மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் செய்துள்ளதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள வழக்கின் மேலதிக விசாரணை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக வனசீவராசிகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சூழல் அதிகாரசபை, மன்னார் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ரிசஷாத் பதியுதீன் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 9 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
தேசிய சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறி வில்பத்து வனபாதுகாப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காடுகள் அழிப்பினால் அங்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு முடிவடைந்த பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நீதிபதி மஹிந்த சமயவர்தன தீர்ப்பு வழங்குவதற்கு தான் விரும்பவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் யசந்த கோதாகொடவுக்கு அறிவித்தார். இதனையடுத்தே இவ்வழக்கினை மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வேறு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் தீர்மானித்தார்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையின் தேசிய வனங்களில் ஒன்றான வில்பத்து தேசிய வனபாதுகாப்பு பகுதிக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் துப்புரவு செய்யப்பட்டு சட்டவிரோதமாக மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
பிரதிவாதியான அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலையீட்டினால் இடம்பெற்றுள்ள இந்த மீள்குடியேற்றத்தில் 1500 குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீள்குடியேற்றம் மூலம் தேசிய சூழலியல் சட்டம் மீறப்பட்டுள்ளது. வரண்ட வலயத்துக்குட்பட்ட இந்த நிலம் மக்கள் வாழ்வதற்கு உகந்ததல்ல. சூழலியல் சட்டம் மற்றும் நடைமுறைகளிலுள்ள சட்டத்துக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுள்ள காடுகள் அழிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொண்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றினைக் கோரியுள்ளார்கள்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்