சு.க.வும் பொ.ஜ.பெ.வும் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்
கூட்டணியின் தலைவர் மஹிந்த; தவிசாளர் மைத்ரி; செயலாளர் பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ‘தாமரைமொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சன்தானய’ (ஸ்ரீலங்கா சுதந்திர பொது ஜன கூட்டணி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ, தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளராக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தேசிய அமைப்பாளர்களாக அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய கூட்டணி நியமனம் தொடர்பில் தான் தேர்தல் ஆணையாளருக்கு முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று இரு கட்சிகளினதும் உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்துக்குச் சென்று தங்களது தீர்மானத்தையும், இணக்கப்பாட்டினையும் தேர்தல் செயலகத்துக்குத் தெரிவித்தனர்.
இதனையடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்