இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை அரச ஹஜ் குழுவின் பயண நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஐந்து இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கட்டணத்தில் முன்னெடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அலரி மாளிகையில் ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், கலாசார அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பிரதமரினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு குறித்த கட்டணத்தில் ஹஜ் குழு முன்வைத்துள்ள பயண நிபந்தனைகளுக்கு அமைவாக ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை ஊழல்களின்றி ஹஜ் முகவர்கள் மேற்கொள்ளாதவிடத்து அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கமே பொறுப்பெடுத்து மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை மூன்று வகையாகத் தரப்படுத்தி கோட்டா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையில்;
‘தற்போது கிடைக்கப் பெற்றுள்ள 3500 ஹஜ் கோட்டா மூன்று வகையாக தரப்படுத்தப்பட்டு வழங்கப்படவுள்ளது.
5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஹஜ் பொதி (Package) யில் 2000 கோட்டாவும், 6 ½ இலட்சம் ரூபா ஹஜ் பொதியில் ஆயிரத்து 150 கோட்டாவும், 7 ½ இலட்சம் ரூபா ஹஜ் பொதியில் 350 கோட்டாவும் வழங்கப்படவுள்ளன. 6 ½ மற்றும் 7 ½ இலட்ச ஹஜ் பொதிகள் வசதிகள் கூடிய பொதிகளாகும்.
அழைத்துச் செல்லப்படும் ஹஜ் யாத்திரிகர்கள் மக்காவில் ஹரம் ஷரீபுக்கு 300 மீற்றர் தூரத்துக்குள்ளும் மதீனாவில் மிக அருகிலும் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட வேண்டும். மினாவில் ‘பி’ தர கூடாரம் வழங்கப்பட வேண்டும் என ஹஜ் முகவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் யாத்திரிகர்களின் பயணத்துக்கு முன்பே பயண முன்வரைவு (Itinerary) ஹஜ் யாத்திரிகர்களின் குடும்பத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் ஹஜ் முகவர்களினால் வழங்கப்பட வேண்டும். தற்போது ஹஜ் கோட்டா பெற்றுக்கொள்வது தொடர்பில் ஹஜ் முகவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை அல்லது ஹஜ் குழுவை தொடர்புகொள்ள முடியும் என்றார்.
அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரிவிக்கையில்; குறிப்பிட்ட ஹஜ் பொதிகளின் கட்டணங்களுக்கு மேலதிகமாக எவரும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதலான கட்டணம் கோரப்பட்டால் திணைக்களத்துக்கு முறையிடலாம். பிரதமரின் உத்தரவுகளையும் மீறி ஊழல் புரியும் முகவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊழல்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும் என்றார்.
இதேவேளை, உம்ரா முகவர்களும் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கோட்டா வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்