நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.
குறுகிய காலத்தில் சபையை தந்தது பொதுஜன பெறமுன பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா
‘சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென்று தனியான நிர்வாக அலகொன்றினை உருவாக்கித் தருமாறு கடந்த 4 வருடங்களாகப் போராடினார்கள்.அப்போது ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்றியே வந்தார்கள். தாமரை மொட்டு பதவிக்கு வந்து குறுகிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக் கெளரவித்துள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் வை.எம். ஹனிபா விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுவை தனியான நகர சபையாக உருவாக்குவதற்காக வெளியிடப் பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் வினவியபோதே வை.எம். ஹனிபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘சாய்ந்தமருது புதிய நகரசபை கட்டடத்துக்கான நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். முஸ்லிம் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவை என அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் இதுவரைகாலம் அவர்கள் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள். எங்களை நாங்களே ஆளப் போகிறோம். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எங்களை ஏமாற்றினார்கள். ஆனால் பொதுஜன பெரமுன தாங்கள் பதவிக்கு வந்ததும் எமது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இன்று அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக நாங்கள் ஜனாதிபதி, பிரதமர், பஷில் ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மற்றும் அமைச்சர் வீரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்கள் தமது உரிமைகள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தாமரை மொட்டு சின்னத்துக்கே ஆதரவளிக்க வேண்டும்.
விரைவில் பாரிய விழாவொன்றினை சாய்ந்தமருதுவில் ஏற்பாடு செய்யவுள்ளோம். சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் பஷில் ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர்களான அதாவுல்லாஹ் உட்பட அனைரையும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறவுள்ளோம் என்றார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்