சீனாவின் ஹுபே சுகாதார அதிகார சபை கடந்த புதன்கிழமை மாத்திரம் 242 கொரோனா வைரஸ் தொற்றுடையவர்கள் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளது. அதனால் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் மரணித்தோரின் எண்ணிக்கை நேற்றுடன் 1,358 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு பிலிப்பைன் நாட்டவரும் ஒரு ஹொங்கொங் நாட்டவரும் அடங்குவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹுபே வைத்தியசாலையில் 33,893 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 1,437 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதுடன் 3,441 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் ஹுபே சுகாதார அதிகார சபை தெரிவிக்கிறது.
உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் தாக்கமானது உலகத்திற்கான மரண அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது. மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோ அதனொம் கெப்ரயோஸஸ் உலகின் எந்த தீவிரவாத செயலுக்கும் இல்லாத சக்திவாய்ந்த பின் விளைவை இந்த வைரஸ் கொண்டுவரும் என தெரிவித்துள்ளார். தொற்றிற்கான தீர்வை இறுதியிலேயே இலகுவாகப் பெறமுடியும். இப்போதைய இத்தொற்று வேறு திசைகளில் செல்ல வாய்ப்புகள் அதிகம் என சுகாதார ஸ்தாபனத்தின் நிர்வாக அதிகாரி கருத்து தெரிவிக்கிறார்.
ஆரம்ப கட்ட சிகிச்சைக்காக நான்கு வெக்ஸின்களை பயன்படுத்துகிறோம். நாம் சீக்கிரமாக கொரோனா வைரஸுக்கான தீர்வாக வெக்ஸினொன்றைக் கண்டுபிடிப்போம். அதற்கு சிறிது காலமாகும். ஒரே இரவில் வெக்ஸினொன்றை உருவாக்கிட முடியாது என சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் ஊடகவியலாளரிடம் கூறினார்.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி கொரோனா வைரஸானது மத்திய கிழக்கின் சுவாசநோய் (MERS CoV), (SARS CoV) போன்ற வைரஸ்களை போன்றே சாதாரண தடிமன் முதல் மரணம் வரையிலும் உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய இதற்கு முன் மனிதரில் இனம் காணப்படாத வைரஸாகும்.
வைரஸ் தொற்றிற்கு ஆளான ஒருவருக்குப் பொதுவான நோய் அறிகுறிகள் சுவாச தொகுதியில் வெளிக்காட்டப்படும். அவை காய்ச்சல், இருமல், சுவாசித்தலில் கஷ்டம் ஏற்படல் என்பனவாகும். நிலைமை தீவிரமடையும்போது நியூமோனியா, கடுமையான சுவாசநோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படலாம்.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற தொடர்ச்சியாக கைகளை கழுவல், இருமல் மற்றும் தடிமன் உள்ளோரிடமிருந்து விலகி இருத்தல், தும்மும் போதும் இருமும் போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுதல் மேலும் இறைச்சி, முட்டை போன்றவற்றை முறையாக சமைத்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்துகிறது. மேலும் அதன் கணிப்பீட்டின் படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 82% ஆனோர் சாதாரண நிலைமையில் இருப்பதாகவும் 15% ஆனோர் கடுமையான பாதிப்பிற்கும் 3% ஆனோர் தீவிர கட்டாயமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியில் 25 நாடுகளில் மேற்படி கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படுகிறது. சீனாவிற்கு அடுத்ததாக அதிக தொற்றுள்ளவர்களை கொண்ட நாடுகள் ஜப்பான் மற்றும் ஹொங்கொங் என்பனவாகும். பிரித்தானியாவின் ஒன்பதாவது தொற்றுள்ள நபர் கடந்த புதன்கிழமை இனங்காணப்பட்டார்.
எம்எஸ் வெஸ்டடர்ம் கப்பலானது 2,000 இற்கும் மேற்பட்ட பயணிகளை கொண்டுள்ளது. 5 நாடுகளின் துறைமுக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கம்போடியா அரசு குறித்த கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அடனொம் கெப்ரேயஸஸ் கம்போடியா சுகாதார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் கொரோனா தொற்றுள்ள எவரும் இருக்காதபோதிலும் குறித்த கப்பலை நிறுத்தி வைக்க தாய்லாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மறுப்பு தெரிவித்தன.
மேலும் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமன்ட் பிரின்ஸஸ் அதி சொகுசு கப்பலில் 3,700 பயணிகள் உள்ள நிலையில் அதில் இதுவரையில் 135 கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனம்காணப்பட்டுள்ள அதேவேளை அனைத்து பயணிகளும் இதுவரையில் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அனேகமான பெரும் தொலைபேசி நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளதால் சர்வதேச தொலைபேசி தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு தொலைபேசிகளுக்கான சர்வதேச அமைப்பு (GSMA) இனால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாடு பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான சூழலில் நடைபெற வேண்டும் என விரும்புவதாக GSMA இன் நிர்வாக அதிகாரி ஜோன் ஹொப்மன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய அரசு சீனாவிலிருந்து பயணிகள் வருவதற்கான தடையை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரையில் நீடித்துள்ளது.
ஹொங்கொங்கின் உலகளாவிய பிரசித்தம் பெற்ற விளையாட்டு நிகழ்வான ரக்பி ஸெவன் மற்றும் சிங்கப்பூர் ஸெவன் ஆகியன ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பல மாகாணங்களின் பாடசாலைகளும் பெப்ரவரி மாத இறுதி வரையிலும் மீள திறக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சிலுவை சங்கம் வட கொரியாவிற்கு நிதியைக் கொண்டு தேவையான உபகரணங்களை பெறவும் பரிசோதனைக் கருவிகளையும் பாதுகாப்பு உடைகளைப் பெறவும் தடையை அகற்றும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் இனம்காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.-Vidivelli
- ஷிப்னா சிராஜ்