இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்று அங்கு ஷரீஆ சட்டத்தை மீறி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையர்கள் சுமார் 50 பேர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அந்நாட்டின் சிறைச்சாலைகளில் தண்டனைஅனுபவித்து வருவதாக சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிலுள்ள இலங்கைத் தூதவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 18 பேர் கொலை மற்றும் இஸ்லாத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு மிகவும் பாரிய குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள் என்ற அடிப்படையில் மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களாவர். இவர்களில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்களது எஜமானர்களது பணம் மற்றும் பொருட்களை களவெடுத்தமை, முறைகேடாக நடந்து கொண்டமை போன்ற சிறிய குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டு அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 8 பெண்கள் ஒரு வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அந்நாட்டின் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் இலங்கைத் தூதுவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எட்டுப் பெண்களின் 8 பிள்ளைகளும் அவர்களுடன் சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு மற்றும் பல வேலைவாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்று, தாம் வேலை செய்த இடங்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும் தப்பி வெளியேறிய மேலும் 50 பெண்கள் ரியாதிலுள்ள இலங்கை தூதுவராலயம் நடாத்தும் பாதுகாப்பு இல்லத்தில் (Safe House) தங்கியிருப்பதாக இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தாங்கள் பணிபுரிந்த எஜமானர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். அத்தோடு உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாதவர்களாகும். இதனாலேயே அவர்கள் தாம் வேலை செய்த இடங்களிலிருந்தும் தப்பியோடி வெளியாகியுள்ளனர். இவர்கள் 4, 6, 8, 9 மாதங்கள் மற்றும் ஒரு வருடகாலமாக பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்தனர்.
இந்தப் பெண்களது தேவைகள் மற்றும் உணவுகளை இலங்கைத் தூதுவராலயமே வழங்கி வருகிறது.
இவர்கள் தொடர்பிலான சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டதன் பின்பு அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைத் தூதுவராலயம் ஈடுபட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்