கல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி
நினைவேந்தல் நிகழ்வில் பி .எச். அப்துல் ஹமீட்
உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! வணக்கம்!
இந்த நிகழ்வு இரு பெரும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கில் கூடியிருப்போரின் முகங்களைப் பார்க்கும் பொழுது இங்கு வந்திருப்பவர்களுள் ஒருசிலர் அச்சு ஊடகவியலாளரான எப்.எம். பைரூஸுக்காக வந்தவர்களும் இருக்கின்றனர். ஆனாலும், அதே அளவிலானோர் எனது அன்புத் தம்பி மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை மதித்துப் போற்றும் இந்த விழாவுக்காக வந்துள்ளவர்களாகவே எனக்குத் தெரிகின்றது.
ஆனாலும்கூட, அவர்கள் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை ஓர் ஒலிபரப்பாளராக, ஓர் அறிவிப்பாளராக இனங்கண்டு, அவர் மீது அபிமானம் கொண்டு இங்கு வந்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஆனால் ஒரு கல்வித் தந்தையாக அவர் ஆற்றிய அருந்தொண்டினால் பயனடைந்தவர்கள் இந்நிகழ்வுக்கு அதிகமாக வரவில்லை என்பது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. அவர் நடாத்திய மாணவர்களுக்கான பயிற்சிப் பாசறைகள் ஆயிரம் ஆயிரம். அவரது வழிநடத்தலில் ஆசிரியர் பயிற்சிகளில் கலந்துகொண்ட ஆசிரியர்களும் இன்னும் பல்லாயிரம். ஆனாலும் அவர்களுள் அதிகமானவரை இந்த அரங்கிலே காண முடியவில்லை. ஒலிபரப்புத்துறையின் வீச்சு அதிகம் என்பதால் அதன் ஊடாக அவர் மீது அபிமானம் கொண்டவர்கள்தான் அதிகமாக இங்கு வந்திருக்கின்றனர்.
கல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. முஸ்லிம் மீடியா போரம் இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்யக் கடமைப்பட்டுள்ளது. காரணம், அந்த அமைப்பின் உப தலைவராக, பொருளாளராக, ஆலோசகராக பெரும் தொண்டாற்றியவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. அவரைப் பற்றி என்னுடைய நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.
முதன்முறையாக ஏ.ஆர்.எம். ஜிப்ரியை நான் சந்தித்தது இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்பு. அவர் கல்முனை உவெஸ்லி கல்லூரியில் பயின்று உயர் கல்விக்காக கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலே இணைந்த காலத்தில் அங்கு அவருடைய தலைமைத்துவத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவுக்கு என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தார். அந்த வேளையில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு சிறப்பு அதிதியாக வந்து கலந்துகொண்டார். அப்போதுதான் கேள்விப்பட்டேன் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி உவெஸ்லி கல்லூரியில் பயிலும்போதும், கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் பயிலும்போதும், எப்போதுமே முதல் மாணவர் என்ற நிலையைத் தக்கவைத்துக் கொள்பவர் என்று. அதன்பின் அவர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்று, கல்வித்துறையில் கல்விமாணி, கல்வி முதுமாணி, விசேட கல்வித்துறையில் டிப்ளோமா என்று தன்னுடைய கல்வித் தகைமைகளை வளர்த்துக்கொண்டே வந்தவர்.
பின்னாளில் அவர் கொழும்பிலே விவேகானந்தாமேட்டில் இருக்கும் இராஜேஸ்வரி கல்வியகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தமை பலருக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு விஞ்ஞான ஆசிரியராக, உப அதிபராக, பிரதி அதிபராக, அதிபராக என்றெல்லாம் கல்வித்துறையில் உச்சங்களைத் தொட்டவர். அவருடைய வாழ்க்கையின் இலட்சியம் எதுவாக இருந்தது என்று அவருடன் நான் கலந்துரையாடியுள்ளேன். பல சந்தர்ப்பங்களில் நாம் மனம்விட்டுப் பேசுவோம். தான் ஒரு மேடைப் பேச்சாளராக வரவேண்டும் என்பதுதான் அவருடைய முதல் இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியத்துக்கு அவருக்குத் தூண்டுகோலாக இருந்தவர் வேறு யாருமல்லர், எங்கள் ஒலிபரப்புத் துறைக்கான முன்னாள் பிரதி அமைச்சரான அப்துல் மஜீட்தான். தேர்தல் காலங்களில் அவர் ஆற்றிய உரைகளைக் கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு மேடைப் பேச்சாளனாக வரவேண்டுமென அவர் விரும்பினார். கல்வித்துறையிலே அவர் அடைய விரும்பிய இலக்கு ஓர் ஆசிரியராக வேண்டும் – அதுவும், விஞ்ஞான ஆசிரியராக வேண்டும் என்று. எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு ‘ரோல் மொடல்’ என்று சொல்வார்களே… அதுபோல, உள்ளுணர்விலே அந்த உந்துசக்தியை உருவாக்க யாரோ ஒருவர் காரணமாக இருப்பார். ஜிப்ரியைப் பொறுத்தமட்டில், அவருக்கு இரசாயனவியல் கற்றுக்கொடுத்த ஆசிரியர் மனோகரன்தான் முன்னுதாரணமாக இருந்தார். ஆசிரியர் மனோகரன் பாடம் நடாத்திய விதம், அவருடைய குரல் வளம், அவருடைய நன்னடத்தைகள் என அத்தனையையும் ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப்போல் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் பாருங்கள்… அவருக்கு வழிகாட்டிய, அவருக்கு முன்னுதாரணமாக இருந்த அந்த ஆசிரியர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். ஆனால் அவரை முந்திக்கொண்டு ஏ.ஆர்.எம். ஜிப்ரி விடைபெற்றுவிட்டார்.
ஒலிபரப்புத் துறையில் எனக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் இணைந்துகொண்டார். வயதால் என்னைவிட பத்தாண்டுகள் இளையவர். நான் அடிக்கடி பல மேடைகளிலும் ஒரு விடயத்தை சொல்வேன். அதாவது, ஒவ்வொரு தலைமுறையும் சாதிப்பதைவிட அடுத்துவரும் தலைமுறை இன்னுமின்னும் அதிகமாகச் சாதிக்கும் என்பது காலத்தின் நியதி. உதாரணமாக ஓர் அஞ்சல் ஓட்டப் பந்தயமென வைத்துக்கொண்டால், அதிலே முதல் தலைமுறை 500 கிலோமீற்றர் ஓடியிருந்தால், அடுத்துவரும் தலைமுறை ஆயிரம் கிலோமீற்றர் ஓடும் ஆற்றல் கொண்டிருக்கும். அதற்கு அடுத்த தலைமுறை 2000 கிலோமீற்றர் ஓடக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கும். இது நான் கண்கூடாகக் கண்ட ஒன்று. ஆனாலும், ஒவ்வொரு தலைமுறையும் எங்கிருந்து ஆரம்பிக்கும்? ஆயிரம் கிலோமீற்றர் ஓடக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தாலும், அவர்கள் முதலாவது கிலோமீற்றரில் இருந்து ஆரம்பிக்கமாட்டார்கள். 501ஆவது கிலோமீற்றரில் இருந்துதான் அவர்களுடைய பயணம், அந்த ஓட்டம் ஆரம்பிக்கும். அப்படியென்றால், மூத்த தலைமுறை விட்டுச்சென்ற இடத்திலிருந்துதான் அடுத்த தலைமுறை தன்னுடைய பயணத்தைத் தொடரும். ஆனால், அடுத்துவரும் தலைமுறைகள் எல்லாம் அவற்றை உணர்ந்ததில்லை. ஆனால், அதனை உணர்ந்த, ஒரு நல்ல மனிதர்தான் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. தன்னைவிட மூத்தவர்களை மதித்துப் போற்றி, ஆனால் அதேவேளையில் அவர்களை அப்படியே பின்பற்றாமல் தனக்கெனத் தனிவழி வகுத்துத் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேறியதால் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் சாதிக்க முடிந்தது.
மேடைப் பேச்சாளராக வரவேண்டும் என விரும்பி, மேடை அறிவிப்பாளராக மாறியிருந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி, 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஒரு பகுதிநேர அறிவிப்பாளராகத் தெரிவானார். குரல் தேர்விலே அவரைத் தெரிவுசெய்த மூவர் அடங்கிய நடுவர் குழுவில் நானும் ஒருவனாக இருக்கும் பாக்கியம் பெற்றேன். அவரைத் தெரிவுசெய்து, பின்னாட்களில் அறிவிப்புத் துறையில் அவருக்கு வழிகாட்டவும், ஆலோசனைகள் கூறவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் அவரிடம், “ஜிப்ரி, உங்களுக்குக் கல்வித்துறையில் சிகரங்களைத் தொடக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. எக்காலத்திலும் இங்கு நிரந்தர அறிவிப்பாளர் பணிக்கு வராதீர்கள்” என்று அவரிடம் சொல்வேன். வேறு யாரேனும் இப்படியான ஓர் அறிவுரையைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? தனக்குப் போட்டியாக இவன் வரக்கூடாது என்ற சுயநலத்தோடுதான் இந்த அறிவுரையைச் சொல்கின்றார் என்று. ஆனால் ஜிப்ரி அப்படியன்றி எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.
வானொலியில் பணியாற்றிக்கொண்டே வெளியில் பல துறைகளில் வெற்றிகரமான உச்சங்களைத் தொட்டவர்கள் இருக்கின்றனர். உதாரணத்துக்கு என்னுடைய பள்ளித் தோழரான போல் அண்டனி. அவர் கல்வித்துறையிலே மிகப் பெரிய பதவிகளைப் பெற்றார். ஆனால், வானொலியிலும் அவர் ஒரு பகுதிநேர அறிவிப்பாளராகத் தனது பணியை ஆற்றினார். இவ்வாறு ஜிப்ரி வானொலிக் கலைஞராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் தெரிவாகிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலத்திலே அவருக்கு ஒரு சோதனையான காலம் வந்தது.
பிரதமர் பிரேமதாஸ அவர்களுடைய காலத்திலே இலங்கை வானொலியிலே “மக்கள் குரல்” என்ற ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது. அது அன்புச் சகோதரர் டக்ளஸ் தேவானந்தாவுடைய நிகழ்ச்சி. இந்த “மக்கள் குரல்” என்ற நிகழ்ச்சி விடுதலைப் புலிகளை விமர்சிக்கின்ற ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்கள் யாரும் இங்கு இருக்கலாம். அந்த நிகழ்ச்சி இலங்கை வானொலியிலே ஒலிப்பதிவு செய்யப்படும். அந்த நிகழ்ச்சிக்குக் குரல் கொடுக்க எங்களைப் போன்ற நிரந்தர அறிவிப்பாளர்கள் பணிக்கப்பட்ட போது, அவர்களுள் முதன் முதலாக நான் எங்கள் பணிப்பாளர் நாயகத்திடம் சென்று, “நான் இப்போதே பதவியை விட்டு விலகிப் போகின்றேன்” என்று பயமுறுத்தினேன். அந்த செய்தி பிரேமதாஸவிடம் தெரிவிக்கப்பட்ட போது, ஹமீட் போன்றவர்களை இதற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று அவரே பணிப்புரை விடுத்ததால், பகுதிநேர அறிவிப்பாளர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதற்கு முதலாவதாகப் பலியாக்கப்பட்டவர்தான் ஏ.ஆர்.எம். ஜிப்ரி.
விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.எம். ஜிப்ரி குரல் கொடுத்தால் அவருக்கு என்ன நடக்கும்? ஆனால் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மிகவும் சமயோசிதமாக ஓர் உத்தியைக் கையாண்டார். அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் குரலைக் கேட்க முடியாது. முழுக்க முழுக்க, அச்சொட்டாக கே.எஸ். ராஜாவின் குரல் ஒலித்தது. கே.எஸ்.ராஜா அக்காலப்பகுதியில் இந்தியாவில் வாழ்ந்து வந்தார். அவ்வளவு அற்புதமாக… இந்த மிமிக்ரி கலையில் வல்லவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. இது பலருக்கும் தெரியாது.
நீண்ட காலம் கே.எஸ். ராஜாவின் குரலில் அவர் அந்த நிகழ்ச்சியை நடாத்திச் சென்றார். அப்போது அவருடைய இந்த உத்தி என்னவென்று புரியாமல் நான் அவரை அழைத்துக் கண்டித்தேன். உங்களுக்கு இருக்கும் வளமான குரலில்…. அவ்வளவு அழகான குரலில்… ஏன் இன்னொருவரைப் பிரதியெடுத்துப் பேசுகின்றீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்னார், “நான் வார இறுதியில் ஊருக்குப் போக வேண்டுமல்லவா? பொலன்னறுவை தாண்டி கல்முனை வரை போக வேண்டும் என்றால், இதுவொன்றுதான் எனக்குள்ள ஒரே வழி.” என்றார். இந்த விடயம் வெளியே யாருக்குமே தெரியாது. இது ஜிப்ரியின் வாழ்க்கையில் அவர் கடந்த ஒரு சோதனையான காலகட்டம்.
அதன் பிறகு அவர் இந்த ஒலிபரப்புத்துறையிலே எங்களையும் கடந்து உச்சத்தைத் தொட்டார். அவருடைய அணுகுமுறை எப்படி இருந்தது என்றால், ஓட்டப்போட்டி ஒன்றில் பத்துப் பேர் ஓடுகின்றார்கள்… யாராவது ஒருவர் மற்ற ஒன்பது பேர்களையும் தாண்டி முன்னால் வர வேண்டும் என்றால், முன்னால் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தால் சரி வராது. அவரவர் ஓடுபாதை சற்றுத் தள்ளி இருந்தாலும், அந்தப் பாதையின் ஊடாகச் சென்று அவரைத் தாண்ட வேண்டும் என்று ஜிப்ரி நினைத்தார். கல்வித் துறையில் அவர் கைக்கொண்ட உத்தி அதுவாகவும் இருக்கலாம். காரணம், விவசாயத்துறையில் பயின்றவர் ஒரு விஞ்ஞான ஆசிரியராக வந்திருந்தார். ஒலிபரப்புத் துறையில் கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீட் போன்றோர் தொடாத அம்சம் எதுவென்று அவர் யோசித்ததாக அவரே என்னிடம் சொல்லியுள்ளார். அதாவது வானொலி என்பது கல்வி, தகவல் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய மூன்று அம்சங்களுமே என எங்களுக்கு ஆரம்ப காலங்களில் சொல்லித் தரப்பட்டது. முதலில் கல்வி, அடுத்து தகவல், அடுத்து பொழுதுபோக்கு. கொஞ்ச காலம் சென்ற பிறகு கல்வி காணாமல் போய்விட்டது. பெரும்பாலான ஊடகங்களில் இப்போது தகவலும் காணாமல் போய்விட்டது. (நான் எல்லா ஊடகங்களையும் சொல்லவில்லை) இன்று திரைப்படப் பாடல்கள் இல்லை என்றால் வானொலி நிலையங்களை எல்லாம் இழுத்து மூட வேண்டிய நிலைதான் பெரும்பாலான வானொலி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கல்விச் சேவை என்ற ஒன்று தனியாக இருந்தாலும்கூட, தேசிய சேவை மற்றும் வர்த்தக சேவை ஆகிய இரண்டிலும் இந்தக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்த நிகழ்ச்சிகள் என்று கணக்கிட்டால் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். வர்த்தக ஒலிபரப்பில் முதன் முதலாக நட்சத்திர அறிவுக் களஞ்சியம் என்ற ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது. உங்களுக்கும் நினைவிருக்கலாம். இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தவர் காலஞ்சென்ற எனது அருமைச் சகோதரர் எஸ். ராமதாஸ். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய இரண்டுக்குமான பாடத்திட்டங்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்த நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலகட்டத்திலே இதனை நடத்தும்படி எனது அன்புச் சகோதரர் ராமதாஸ் வேண்டிக்கொண்ட போது நான் சொன்னேன், இதற்காக நான் மீண்டும் படிக்க வேண்டும்… கல்வி கற்க வேண்டும் என்று. ஏனென்றால் ஒரு கேள்வியை நான் கேட்டு, அதற்கு பதில் சொல்பவர் எதிர்க் கேள்வியை எம்மிடம் கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய ஆற்றல், அறிவு எனக்கு இருக்க வேண்டும். ஆகவே, இந்த நிகழ்ச்சியை நான் செய்யமாட்டேன். கே.எஸ். ராஜா ஏற்கனவே ஒரு விஞ்ஞான ஆசிரியராக கொழும்பு தெமட்டகொட தேவபாலா கல்லூரியில் பணி செய்தவர். எனவே அவரைக்கொண்டு இந்த நிகழ்ச்சியைச் செய்யலாம் என்றேன். அந்த நிகழ்ச்சி ஓராண்டு தொடர்ந்தது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றிபெற்ற பாடசாலைக்கு ஒரு விஞ்ஞான ஆய்வுகூடத்தையே கட்டிக்கொடுத்தார்கள் அந்த நிகழ்ச்சியின் விளம்பர அனுசரணையாளர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வர்த்தக ஒலிபரப்பிலே கல்வியை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை நடத்தியவர் வேறு யாருமல்லர். அது எனது அன்புத் தம்பி மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரிதான்.
அடுத்து, “அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம்” என்றொரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வெறுமனே திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி, தொலைபேசி வழியாக உரையாடி, நேரத்தைக் கடத்தி, அவர்கள் விரும்பிய பாடலொன்றை ஒலிபரப்பிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அவருடைய இலக்கு முழுக்க முழுக்க மாணவப் பரம்பரையை நோக்கியதாகவே இருந்தது. வெறும் ஜனரஞ்சகமாக நடாத்தப்பட வேண்டிய இந்த நிகழ்ச்சி, மாணவர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சியாக, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தூண்டிக் கேட்கவைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து “அறிவுச் சுரங்கம்”, “எங்கள் பாடசாலை” போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ஜிப்ரி நடத்தினார்.
நான் ஏற்கனவே சொன்னேனே… மூத்தோரை மதிக்கும் பண்பு என்பதைக் காத்த அடுத்த தலைமுறையாக என் கண்ணுக்குத் தெரிந்தவருள் முதன்மையானவர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி என்று. அவர் உண்மையாக எந்தளவுக்கு என்னை நேசித்தார் என்றால், இங்கே அவருடைய வாரிசுகள் மின்ஹாஜ் மற்றும் மின்ஹாம் ஆகிய இருவரும் வந்திருக்கின்றார்கள். அவருடைய மூத்த வாரிசு மின்ஹாஜ் பிறந்தபோது அவருடைய இல்லம் சென்று, அவருக்குப் பெயர் சூட்டும் நிகழ்விலே அவரை என் கரங்களில் ஏந்தி தாலாட்டி இருந்தேன். ஜிப்ரியை நான் முதன்முதலாகக் கல்முனை ஸாஹிறாவிலே பார்த்தபோது அவர் எந்த அளவில்… எந்த வயதில் இருந்தாரோ… அதேபோன்றுதான் இங்கே அவரின் வாரிசுகளும் இருக்கின்றனர். அந்த இருவருமே தமது தந்தையைப் போல் கல்வித்துறையில் தங்களை வளர்த்துக்கொண்டுள்ளனர்.
கடைசியாக ஜிப்ரியை நான் வைத்தியசாலையில் சந்தித்த போதும், தனது உடல் நோய்வாய்ப்பட்டிருந்த அந்தத் தருணத்திலும்கூட தனது வாரிசுகளின் கல்விசார் அடைவுகளைப் பற்றி என்னுடன் பேசியிருந்தார்.
ஆரம்ப காலத்தில் ஒலிபரப்புத் துறையில் எத்தனையோ ஆலோசனைகளை அவர் என்னிடம் கேட்பார். அடிக்கடி என்னுடன் உரையாடுவார். அவர் பணிபுரிந்த கல்லூரிகள் அனைத்திலுமே விழாக்களுக்கு என்னை ஒரு பிரதம அதிதியாக, சிறப்பு அதிதியாக அழைத்து கௌரவப்படுத்தி இருக்கின்றார். அவ்வப்போது நாம் இந்த ஒலிபரப்புத் துறை சம்பந்தமாக தொலைபேசி ஊடாகவேனும் அளவளாவுவோம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு நீரிழிவு நோய்தான் எங்களுடைய பேசுபொருளாக இருந்தது. என்னுடைய அனுபவங்களை அவரிடம் சொல்வேன். அவருடைய அனுபவங்களை என்னிடம் சொல்வார். யார் யாரோ சொன்னவற்றை எல்லாம் கேட்டு நீரிழிவு நோய்க்குத் தீர்வுகாணப் போய் தன்னுடைய உடல் நலத்துக்கு மிகப் பெரிய பாதிப்பைத் தான் ஏற்படுத்திக் கொண்டதாக அவரே என்னிடம் சொன்னார். தான் முயன்ற வைத்திய முறைகள்தான் தனது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொன்னார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை அன்புச் சகோதரர் அமீன் ஊடாகக் கேட்டறிந்து மறுநாள் அவரை வைத்தியசாலை சென்று பார்த்தேன். அவருடைய மகன் அருகில் நின்றிருக்க, அவர் என்னுடன் ஓர் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது நான் அவருக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும், இறைவன் கைவிடமாட்டான் என்றும் ஆறுதல் வார்த்தைகள் கூறினேன். நம்பிக்கையே நமது உயிர்நாடி என்று விஞ்ஞான ஆசிரியரான அவருக்கே நான் விஞ்ஞான ரீதியிலான தகவல் ஒன்றுடன் ஆறுதல் கூறினேன். எல்லோருடைய நடு மூளையிலும் அரிசி மணி அளவிலான ஒரு விடயம் இருக்கின்றது. அது அற்புதமான வித்தைகள் எல்லாம் செய்ய வல்லது. நாம் எதனைத் திடமாக நம்புகின்றோமோ அதற்கேற்ப இரசாயன மாற்றத்தை நமது உடலில் அது ஏற்படுத்தும். ஆகவே நீங்கள் நம்புங்கள் உங்களால் மீண்டுவர முடியும் என்று. இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று அவருக்குக் கூறினேன். இவ்வாறெல்லாம் நான் ஆறுதல் வார்த்தைகள் கூறி, நான் மறுநாளும் உங்களைப் பார்க்க வருவேன் என்று உறுதியளித்து, தலை குனிந்து அவருடைய நெற்றியில் முத்தமிட்டேன். அப்போது அவருடைய கண்களில் நீர் துளிர்த்தது. அந்தக் கண்ணீரின் அர்த்தம் என்னவென்று மறுநாள் இரவுதான் எனக்குப் புரிந்தது.
கல்முனையில் இருந்து அன்புத் தம்பி அப்துல் கையூம் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு தொலைபேசியில் அழைத்து ஜிப்ரியின் மரணச் செய்தியைச் சொன்னார். இந்த மண்ணில் பிறப்பவர்கள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும் என்ற யதார்த்தம் எமக்குத் தெரிந்தாலும்கூட, நாம் நேசித்த, நம்மை நேசித்த எவரேனும் ஒருவர் பிரியும் போது வரும் துயரைத் தாங்க முடியாது. (அரங்கிலுள்ள பலரினதும் கண்களில் நீர் ததும்புகின்றது).
நான் அதிகமாகப் பாடல்களுடன் சங்கமித்தவன் என்ற அடிப்படையில் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு “இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்….” என்ற ஒரு பழைய பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. இங்கே இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் இறந்தவர்களைச் சுமந்திருப்பீர்கள். நாமும் இருக்கப் போவதில்லை. நிச்சயம் நாமும் அந்த மறுமை உலகில் அன்புச் சகோதரர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியைச் சந்திப்போம்.
ஆனால் அதற்கிடையில் மண்ணறையில் சில வேதனைகள் நம்மை எதிர்நோக்கக் காத்திருக்கின்றன என்று சொல்வார்களே. அப்படியான வேதனைகளில் இருந்து அன்புச் சகோதரர் ஜிப்ரியை இறைவன் காக்க வேண்டும். மறுமை உலகிலே… அந்த நியாயத் தீர்ப்பு நாளிலே… அவருக்கு சுவனத்தின் வாசல்களைத் திறந்துவிடுமாறு இருகரமேந்தி துஆச் செய்து விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.-Vidivelli
- இர்ஹாம் சேகுதாவூத்