இதுகாலவரை இலங்கை ஹஜ் பயணிகள் தமது ஹஜ் பயணங்களை முகவர் நிலையங்களூடாகவே மேற்கொண்டு வந்தனர். தற்போதைய புதிய அரசாங்கத்தின் ஹஜ் கமிட்டி ஹஜ் பயணிகள் முகவர் நிலையங்கள் ஊடாகவன்றி பயணிகள் அனைவரையும் ஹஜ் கமிட்டியே அழைத்துச் செல்லவிருப்பதாக பத்திரிகை மூலம் அறியக்கிடைத்தது. எனவே, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பல தசாப்தங்களாக ஹஜ் விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்ற வகையிலும் ஹஜ் குழுக்களை திணைக்களம் மூலமும் பிரத்தியேகமாகவும் அழைத்துச்சென்ற அனுபவங்களை வைத்து இது சம்பந்தமான சாதக பாதகங்களை இக்கட்டுரை மூலமாக தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
ஹஜ் பயணம் என்பது அதிகமானோருக்கு வாழ்நாளில் ஒரு முறையே கிடைக்கின்றது. அத்துடன் அக்கடமையை அதிக பணம் செலவு செய்தே நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது. அத்துடன் ஹஜ் கிரிகையை பொதுவாக எமது வாழ்வில் செய்து பழக்கப்படாத ஒரு கிரிகையாக இருப்பதினாலும் மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்தே நிறைவேற்றப்படவேண்டி இருப்பதினாலும் இவ்விடயத்தில் அரசாங்கங்களும் ஹஜ் பயணிகளும் அதிக கவனம் செலுத்துகின்றன. ஹஜ் கிரிகைகளை மக்களுக்கு அவர்கள் பயணம் மேற்கொள்ள முன்பு எவ்வளவுதான் தெளிவுபடுத்தினாலும் அக்கிரிகைகளை அவர்களை செய்விக்க வேண்டிய நிலையே இருந்து வருகின்றது. இதனாலேயே சவூதி அரசாங்கம் அங்கு முதவ்விப், முஅல்லிம் போன்ற அமைப்புக்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. முதவ்விப் என்றால் தவாப் செய்ய வைப்பவர். முஅல்லிம் என்றால் ஹஜ் செய்யக் கற்றுக் கொடுப்பவர் என்பது பொருளாகும். உலக நாடுகளில் இருந்துவரும் அனைத்து ஹஜ் பயணிகளும் மேற்கூறப்பட்ட முதவ்விப்களை அல்லது முஅல்லிம்களை தொடர்புகொண்டே ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே, ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற வருபவர்களுக்கு அக்கிரிகைகளை செய்விக்க வேண்டும் என்பதை சவூதி அரசும் உணர்ந்துள்ளது தெளிவாகின்றது. இலங்கை ஹஜ் பயணிகளுக்கு எப்பொழுதும் வழிகாட்டல்கள் மிக அவசியமென்பது எனது அனுபவரீதியான கருத்தாகும்.
இலங்கை ஹஜ் பயணிகள் பயணங்களின்போது பொதுவாக சொகுசை எதிர்பார்ப்பவர்கள். தங்குமிடவசதி, உணவு வசதி, நீர் வசதி போன்றவற்றை பெரிதும் எதிர்பார்ப்பவர்கள். இதனை அங்குள்ள அரபிகளும் நன்கறிந்து வைத்துள்ளனர்.பொதுவாக, இலங்கை ஹஜ் பயணிகளை அரபிகள் மீன் குஞ்சுகள் என்று அழைப்பர். இலங்கைப் பயணிகள் தண்ணீரை அதிகம் பாவிப்பதினால் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் போலும் . மேலும் இலங்கை ஹஜ் பயணிகள் ஹரம் ஷரீபிற்கு அருகாமையில் கால்நடையாகச் செல்லும் தூரத்திலேயே தங்குமிடங்களை எதிர்பார்ப்பவர்கள். வேற்று நாட்டு ஹஜ் பயணிகள் வெகுதூர இடங்களில் தங்கியிருந்து கால்நடையாகவும், வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியுமே ஹரம் ஷரீபிற்கு வருவர். அத்துடன் அவர்கள் உணவுவிடயங்களை அவ்வளவுதூரம் பொருட்படுத்துவதுமில்லை. கடைகளில் உண்டுவிட்டு ஹஜ் கிரிகைகளில் கவனமாக இருப்பர். இலங்கை ஹஜ் பயணிகளைப் பொறுத்தவரையில் இலங்கை உணவையே பெரிதும் எதிர்பார்ப்பர். அந்நாட்டிலுள்ள அதிக வெப்பநிலையும் சனநெரிசலும் இலங்கை ஹஜ் பயணிகளின் மனோநிலை அங்கு சென்றபின் பொதுவாக மாற்றமடைந்தே காணப்படும். இலங்கை ஹஜ் பயணிகளின் மனோநிலையை நன்கு உணர்ந்துள்ளதாலேயே ஹஜ் முகவர் நிலையங்கள் அவர்களுக்கு ஏற்றாற்போல் பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரிக்கின்றனர். அத்துடன் இலங்கை ஹஜ் பயணிகள், உலமாக்களின் வழிகாட்டல்களையும் உபதேசங்களையும் அடிக்கடி எதிர்பார்ப்பவர்கள். எப்போதும் அவர்களது குழுவுடன் உலமாக்கள் இருப்பதை விரும்புபவர்கள். இலங்கை ஹஜ் பயணிகளில் அதிகமானோரை உலமாக்களே திரட்டுகின்றனர் என்பது முக்கியமான விடயமாகும்.
எனவே, மேற்சொல்லப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்தே இலங்கை ஹஜ் பயணிகளை முகவர் நிலையங்கள் மூலம் அழைத்துச்செல்வதா அல்லது முகவர் நிலையங்களை விடுத்து ஹஜ் கமிட்டியின் மூலம் அழைத்துச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலையும் இருக்கின்றது. ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் பயணிகளை அழைத்துச் சென்ற வரலாறில்லை. மர்ஹூம் எம்.எச் முஹம்மத் அமைச்சராக இருந்தபோது பல வருடங்கள் ஹஜ் கமிட்டியின் மூலம் சுமார் 150 பேர்கொண்ட ஹஜ் பயணிகள் குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று மக்காவிலுள்ள சிலோன் ஹவுசில் தங்க வைப்பதற்காக பிற்காலத்தில் சுமார் 50 ஹஜ் பயணிகள் குறைந்த கட்டணத்தில் சில வருடங்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மற்றைய அனைத்து வருடங்களிலும் முகவர் நிலையங்கள் மூலமாகவே இலங்கை ஹஜ் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கோட்டாமுறை வருவதற்கு முன்பதாக சில வருடங்களில் 8000 ஹஜ் பயணிகள் சென்றுள்ளனர். முன்பு செயற்பட்ட ஹஜ் கமிட்டிகள் ஹஜ் பயணிகளின் தொகை கூடுதலாக இருந்ததின் காரணமாகவும் இலங்கை ஹஜ் பயணிகளைப் பற்றி நன்கறிந்து வைத்திருந்ததினாலும் ஹஜ் பயணிகளை ஹஜ் கமிட்டியின் மூலம் அழைத்துச் செல்வது பற்றி யோசிக்காமல் இருந்திருக்கலாம். தற்போது ஹஜ் பயணிகளின் தொகை குறைவாக இருப்பதன் காரணமாகவும் முகவர் நிலையங்களின் முறையற்ற செயல்கள் அதிகரித்து விட்டதாலும் இவ்விடயம் பிரதமர் வரை சென்றிருப்பதினாலும் தற்போதைய ஹஜ் கமிட்டி இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
ஹஜ் பயணிகளின் நன்மைகருதி ஒரு நல்ல நோக்கத்திற்காக இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இதனை செயற்படுத்துவதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதே எனது அபிப்பிராயமாகும். 3500 ஹஜ் பயணிகளையும் ஓரிரு கட்டிடங்களில் அமர்த்தி அவர்களை பரிபாலிக்கும்போது எவ்வாறேனும் உணவு, தண்ணீர், இடவசதி, போக்குவரத்து போன்ற பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். அதன்போது இப்பிரச்சினைகளை கையாள்வதற்குப் போதியளவு உதவியாளர்கள் இருக்கப் போவதில்லை. அப்படி இருப்பவர்களும் ஹஜ் பயணிகளுக்கு அறிமுகமில்லாத ஒருவராகவே இருப்பார். முகவர் நிலையங்கள் மூலமாக ஐம்பது அல்லது நூறு பேர் கொண்ட குழுவே வேறுவேறு கட்டிடங்களில் தங்கியிருப்பர். பிரச்சினைகள் உருவாகும்போது அங்கு ஒருசிறு குழுவே காணப்படும். அதனால் பிரச்சினைகளை அணுகுவது எளிதாகும். ஆனால், ஹஜ் கமிட்டியின்மூலம் போகும்போது சுமார் 1000 பேர் தங்கக்கூடிய மூன்று அல்லது நான்கு கட்டிடத்தையே வாடகைக்கு அமர்த்துவர். இந்நேரத்தில் ஹஜ் பயணிகள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்றுசேரும்போது அவர்களது பலம் அதிகரிக்கவே அங்கு குழப்பநிலை ஏற்பட வழியுள்ளது. “மஹிந்த ஹஜ்ஜை குழப்பிவிட்டார்” என ஆர்ப்பாட்டம் செய்வர். இதற்கு உறுதுணையாக இம்முறை ஹஜ் அனுமதி வழங்கப்படாத முகவர் நிலையங்கள் செயற்படும். அத்துடன் பயணிகளில் அதிகமானோர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாக இருப்பதினால், சிலர் அரசியல் நோக்கம் கொண்டும் செயற்படுவர். இதனை புகைப்படமெடுத்து சிலர் தொடர்பு சாதனங்களில் பதிவிடுவர். துவேஷ கருத்துக்களை பரப்பிவரும் தொலைக்காட்சி நிலையங்களுக்கு இது நல்ல தீனியாக அமைந்துவிடும். சிங்களப் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரிப்பர். அத்துடன் ஹஜ்ஜை முடித்துவிட்டு வந்த சில கோடாரிக் காம்புகள் பிரதமரிடம் சென்று அவர் பற்றி ஹஜ் பயணிகள் தெரிவித்ததை அள்ளிவைப்பர். “ நான் நல்லது செய்யப்போய் எனக்கு முஸ்லிம்களால் எப்பொழுதும் பிரச்சினைதான்” என்று அவர் கூறுவார். எனவே, தற்போது நாட்டிலிருக்கும் பிரச்சினைகளுடன் நாம் இதனையும் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.
அதிகமான நாடுகளில் ஹஜ் கமிட்டியே அந்த நாடுகளின் ஹஜ் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. மலேசியாவில் ‘தபுங் ஹஜ்’ எனும் கமிட்டி பெரிய திட்டங்களுடன் செயற்படுகின்றது. இந்தியாவின் ஹஜ் கமிட்டியும் இவ்வாறே செயற்படுகின்றது. இலங்கையின் ஹஜ் விடயங்களை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமே மேற்கொண்டு வருகின்றது. இலங்கையில் ஹஜ் கமிட்டி என வக்ப் சட்டத்திலோ அல்லது திணைக்கள செயற்பாடுகளிலோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பொறுப்பாக இருக்கும் அமைச்சர் சில காலங்களில் ஹஜ் கமிட்டி என்ற ஒன்றை அமைப்பார். சில காலங்களில் அமைக்காமலும் விடுவார். ஹஜ் விடயங்களை திணைக்களம் கவனிப்பதால் ஹஜ் கமிட்டி அவசியப்படுவதில்லை. அவ்வாறு அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டி அங்கத்தவர்கள் வெறும் ஆலோசகராக இருந்து குறிப்பிட்ட காலத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றிக்கொள்வர். ஆனால் ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணிகளை அழைத்துச்செல்வதாக இருந்தால் அந்த ஹஜ் கமிட்டி முன்பு போல் செயற்பட முடியாது. ஹஜ் கமிட்டி ஒரு சட்டரீதியான அமைப்பாக உருவாக்கப்படவேண்டும். அதன் பொறுப்புக்களும் கடமைகளும் வரையறுக்கப்பட்டு வருடம் முழுவதும் தொடர்ச்சியாக செயற்பட வேண்டும். இதற்காகத் திணைக்களத்தில் பிரத்தியேக இடம், அதிகாரிகள் இருத்தல் வேண்டும். திணைக்களப் பணிப்பாளர் இக்கமிட்டியின் அங்கத்தவராக இருப்பார் அவரே பொறுப்புக் கூறுபவராகவும் இருப்பார். திணைக்களத்தினால் இவ்விடயத்தைக் கையாள்வது கடினமாகும். 3500 ஹஜ் பயணிகளையும் பதிவுசெய்து அவர்களது அனைத்து தகவல்களையும் திரட்டுதல், மாகாண மட்டத்தில் அவர்களை கூட்டி உபதேசம் வழங்குதல், அவர்களிடமிருமிருந்து கட்டணம் சேகரித்தல், அவர்களுக்கான விமானம் தயார்பண்ணுதல், மக்காவிலும் மதீனாவிலும் அவர்களுக்கான தங்குமிடம் தயார்பண்ணுதல், அவ்வாறு தயார் பண்ணப்பட்ட கட்டிடத்தின் மாடி மற்றும் அறை என்பன போன்ற விபரங்களை இங்கு வைத்தே ஹஜ் பயணிகளுக்கு அறிவித்தல், அவர்களுக்கான சவூதி முஅல்லிம் ஒழுங்கு செய்தல், ஒவ்வொரு ஹஜ் குழுவுக்குமாக இலங்கையிலிருந்து மௌலவிமார்களையும் உதவியாளர்களையும் தெரிவு செய்தல், ஹஜ்ஜின்போது உணவு தயாரித்து வழங்குவதாக இருந்தால் இங்கிருந்தே 3500 பேருக்குமான சமையல்காரர்கள், உதவியாளர்கள், தளபாடங்கள் போன்றன தயார்படுத்தல், போக்குவரத்து வசதிகள் செய்தல், ஹஜ் பயணிகளின் உதவிக்காக ஹஜ் காலத்தின்போது ஜித்தா விமான நிலையத்திலும் மக்காவிலும் இலங்கை விமான நிலையத்திலும் குழுக்களை அமர்த்துதல் போன்ற ஒரு பாரிய வேலைத்திட்டமாக இது அமைந்து காணப்படுவதால் ஒரு பாரிய மனித வளம் இதற்கு அவசியமாகின்றது.
முகவர் நிலையங்கள் ஒரு ஹஜ் பயணியிடமிருந்து அதிக இலாபம் பெறுவதும், அத்தோடு அவர்களால் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படாமையும், பல ஹஜ் பயணிகள் ஏமாற்றப்பட்டிருப்பதும் உண்மையே. எனவே, ஹஜ் கமிட்டி இக்கடினமான பொறுப்பை இவ்வருடம் கைவிட்டு இவ்வருட ஹஜ்ஜின்போது நேரகாலத்துடன் சென்று அனுபவங்களைப் பெற்று அடுத்த வருடத்திற்காகத் தற்போதிருந்தே நல்லதோர் குழுவைத் தயார்படுத்தி செயற்படுவதே நல்லது என்பது எனது ஆலோசனையாகும். எனவே, இவ்வருடத்திற்காகப் பின்வரும் அடிப்படையில் செயற்படுவது நல்லதாகும்.
1. ஹஜ் கமிட்டி ஐந்து அல்லது ஆறு இலட்சம் ரூபாவெனத் தீர்மானித்தால் அதில் என்னென்ன சேவைகள் வழங்கப்படவேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். இக்கட்டணத்தில் கொண்டுசெல்ல இணங்கும் முகவர் நிலையங்களை மாத்திரம் உள்வாங்கி ஒவ்வொரு முகவர் நிலையத்திற்கும் 100 பயணிகளையாவது கையளிக்க வேண்டும். ஏனெனில், இலாபம் குறைவாக இருப்பதினால் ஓரளவிற்கு அவர்களது இலாபத்தினையும் கருத்திற்கொள்தல் வேண்டும். நூற்றிற்கும் மேற்பட்ட முகவர் நிலையங்கள் சென்ற வருடம் பதிவாகியிருந்தாலும் இம்முறை 35 முகவர் நிலையங்களையே நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் புதிதாகவே விண்ணப்பங்கள் கோரப்படுவதால் முன்பிருந்தவர்கள் அனைவரும் உள்வாங்கப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. முன்னைய வருடங்களில் நல்ல முறையில் செயற்பட்ட முகவர் நிலையங்களையே கருத்திற்கொள்ள வேண்டும். முகவர் நிலையங்களிடமிருந்து போதுமானளவு உத்தரவாதப் பணம் பெறுதல் வேண்டும். இலங்கையிலிருந்து பயணமாகும் அனைத்துப் பயணிகளினதும் கட்டணம் ஒன்றாகவே இருத்தல் வேண்டும். இக்கட்டண முறையை உடைப்பதற்காக முகவர் நிலையங்கள், “சில ஹஜ் பயணிகள் கூடுதல் வசதி கேட்பதாகவும் அவர்களுக்காக கட்டணத்தை அதிகரிக்க முடியுமா” எனக் கேட்பர். இங்கு எல்லோரிடமும் சமமான கடடணமே அறவிடப்படவேண்டுமென உத்தரவிடவேண்டும். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட முகவர் நிலையங்கள் நீதிமன்றம் செல்வதாகக் கூறுவர். அவர்கள் ஒவ்வொரு வருடமும் நீதிமன்றம் செல்லத்தான் செய்கின்றனர். அதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஹஜ் பயணிகளுக்காகவே முகவர் நிலையங்களேயன்றி முகவர் நிலையங்களுக்காக ஹஜ் பயணிகள் இல்லை என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.
2. ஹஜ் கமிட்டியானது இவ்வருடத்தில் அவர்களது கட்டணத்தில் ஹஜ் கமிட்டியின்மூலம் 100 பேரையாவது அழைத்துச்சென்று பரீட்சார்த்தமாக செய்து பார்த்தால் அடுத்த வருடத்திற்கு ஒரு அனுபவமாக அமையும். இக்குழுவிற்குள் திணைக்கள அதிகாரிகள் குழு, வைத்தியக்குழு மற்றும் அமைச்சர் குழு போன்றவற்றையும உள்வாங்கக் கூடியதாக இருக்கும். இதன்மூலம் ஹாஜிகளுக்கும் பேருதவியாக அமையும். மர்ஹூம் எம். எச். முஹம்மதின் காலத்தில் இவ்வாறே மேற்கொள்ளப்பட்டது.
3. அஸீஸியாவில் இருக்கும் சிலோன் ஹவுஸில் 242 ஹஜ் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. இதில் மிகக்குறைந்த கட்டணத்தில் இலங்கை ஹஜ் பயணிகளை தங்கவைக்கலாம். எனவே, இது விடயத்திலும் இலங்கை ஹஜ் கமிட்டி கவனமெடுத்தல் நல்லது. எனவே, புதிய அரசாங்கத்தின் புதிய ஹஜ் கமிட்டி ஆரம்பத்திலேயே பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாது விடயங்களை நுணுக்கமாகக் கையாள்வதே நல்லது.-Vidivelli
- மெளலவி
ஜே.மீரா மொஹிதீன் (கபூரி)