கொழும்பு – கொம்பனித்தெரு புகையிரத வீதியை அண்மித்த பகுதிகளில் வசித்த மக்களின் காணிகளை 2013 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் பொறுப்பேற்று புதிய வீடுகளை வழங்குவதாகத் தெரிவித்திருந்தபோதும் இதுவரையில் அவர்களுக்கான வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கான வாடகைகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கி வருகின்ற போதிலும், அதனையும் பெரும் சிரமத்தின் மத்தியிலே இவர்கள் பெற்றுக் கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன், ‘புகையிரத வீதியோரங்களில் வசித்த மக்கள் வீடின்றி இருக்கின்றனர், ‘கொம்பனித் தெரு மக்களுக்கு இவ்வாறு செய்தால் ஜனாதிபதிக்கு என்ன செய்வார்கள் ‘, ‘வீடும் இல்லை , வீட்டுக்கான வாடகையும் இல்லை நகர அபிவிருத்தி அதிகார சபை மக்களை ஏமாற்றியுள்ளது’ என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பாதாகைகளை ஏந்தியிருந்தனர்.
2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது எமது காணிகளை அவர்கள் பொறுப்பேற்று, எமக்குப் புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். அதுவரையிலும் எம்மை வாடகை வீடுகளில் இருக்குமாறும், அதற்கான வாடகையை நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாகப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்கள். வாடகை செலுத்துவதற்கு இரு மாதங்களுக்கு முன்னரே நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாக அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் காலதாமதத்துடன் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியே இந்தப் பணத்தை பெற்று வருகின்றோமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கடந்த தேர்தலின் பின்னர் அந்தப் பணமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 122 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த வீடுகளை 2 வருடத்திற்குள் நிர்மாணித்துக் கொடுப்பதாகக் கூறியிருந்தனர். பின்னர் இது இன்னும் முழுமைப்படுத்தவில்லை என்று 6 மாதகாலம் அவகாசம் கேட்டனர்.
தற்போது 7 வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் இதுவரையில் எங்களுக்கு வீட்டுரிமை கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இங்கு வருகைதந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது ,
நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். அவர்களே பாகிஸ்தான் நிறுவனமொன்றுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்த மக்களுக்கான வாடகை பணத்தையும் கொடுக்காதிருக்கின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் பகிஸ்தான் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் இவர்களது வீடுகளை ஒப்படைப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் இந்த நிர்மாணப்பணிகளை முடிக்க முடியாது.
மக்களுக்கான ஆறுமாதகால வாடகை பணத்தை மாத்திரம் தம்மால் செலுத்த முடியுமென்று நகர அபிவிருத்தி அதிகார சபை கூறினாலும் , மக்கள் அவர்களது ஆறுமாத வாடகையையும் பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் கூறுகையில்,
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பில் நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். பாகிஸ்தானின் நிறுவனம் ஒன்றுடனே இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்குப் பல நாடுகள் தடைவிதித்திருந்தன. ஆனாலும் அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதுவரையில் எந்த வீடும் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.
இவற்றை முழுமைப்படுத்துவதென்றால் இரண்டு மாதகாலமாவது எடுக்கும். இந்நிலையில் மக்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் நகர அபிவிருத்தி அதிகாரசபை இவர்களுக்கு வாடகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.-Vidivelli