பூஜித், ஹேமசிறி பிணையில் விடுவிப்பு
வெளிநாடு செல்ல தடை: ஒவ்வொரு மாதமும் சி.ஐ.டி.யில் ஆஜராகவும் உத்தரவு
4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஆதித்த பட்டபெதிகே மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரின் தீர்ப்பை மையப்படுத்தி கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான அனுமதியை நேற்று வழங்கினார்.
தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்லவே இருவருக்கும் மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே அனுமதி வழங்கினார். பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு வேறு பிணை மனுக்களை ஆராய்ந்து மேல் நீதிமன்றம் நேற்றுக் கொடுத்த தீர்ப்புக்கள் மேல் நீதிமன்றப் பதிவாளரூடாக உடனடியாக நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டதையடுத்து, குறித்த இருவரையும் அதனை மையப்படுத்தி இவ்வாறு பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதித்தது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, அவரை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை நேற்று முற்பகல் பிறப்பித்தார். இதனையடுத்து கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை அவரது பிணைக் கோரிக்கை மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகே பிறப்பித்தார். இரு நீதிபதிகளினதும் தீர்ப்பில், அவ்விருவரையும் தலா, இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2 சரீரப் பிணையாளர்களும் கொழும்பில் வசிப்பவர்களாக இருக்க வேண்டுமென நீதிமன்றம் கூடுதல் நிபந்தனையும் விதித்திருந்தது. இதனைத்தவிர, இருவரும் மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட பிணை உத்தரவில் கூடுதல் நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. இதனைவிட இருவரின் வெளிநாட்டுப் பயணங்களும் தடை செய்யப்படுவதாகவும், கடவுச்சீட்டுகளை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் அல்லது அழுத்தம் கொடுத்தல், விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் செய்யக் கூடாதெனவும் இருவருக்கும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இவ்விருவரதும் பிணை மனுக்களை ஆராய்ந்தபோது, அவர்கள் இருவரும் 4 மாதங்களுக்கும் அதிக காலம், விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் அவர்களுக்குப் பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லையென சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தனது வாதங்களின்போது இரு மேல் நீதிமன்ற நீதிபதிகளிடமும் தெரிவித்திருந்த நிலையிலேயே பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “இந்த விவகாரத்தில் 80 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். அசாத் சாலி, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், பொலிஸ் உயர் அதிகாரிகளெனப் பலர் அதில் உள்ளடங்குகின்றனர். இன்னும் 10 பேர் வரையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவ்விருவரும் சுமார் 4 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தொடர்பில் கருணையடிப்படையில் ஆராய்ந்தே சட்டமா அதிபர் இவர்களது பிணைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தார். இவர்களுக்கு பிணை வழங்குவதால் பிணை சட்டத்தின் 14 ஆம் அத்தியாயம் மீறப்படாது” என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மேல் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்தே பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்ய கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் மீள இவ்விவகாரத்துடன் தொடர்புடைய குற்றவியல் வழக்கு நேற்று பிற்பகல் மீள விசாரணைக்கு வந்தது.
இதன்போது, சந்தேக நபர்களான பூஜித் மற்றும் ஹேமசிறி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட மன்றில் ஆஜரானார்.
இந்நிலையில் மேல் நீதிமன்றின் பிணைத் தீர்ப்பு இதன்போது சந்தேக நபர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. இதனையடுத்து மன்றில் ஆஜரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் ஹெல உடகே தலைமையிலான குழு, இந்த விசாரணைகளில் இதுவரை 80 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதன்படி இவ்விரு சந்தேக நபர்களிடமும் மீள வாக்குமூலம் பெற அவர்களை அழைத்தால் உடனடியாக அவர்கள் விசாரணைக்கு வரவேண்டுமென அவர்களை எச்சரிக்குமாறும் கோரினர். இதனைக் கருத்திற்கொன்ட நீதிவான் பிரியந்த லியனகே, சி.ஐ.டி. விசாரணைகளுக்கு அழைத்தால் அதற்காக ஆஜராக வேண்டுமென சந்தேக நபர்களை எச்சரித்தார்.
4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டு பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும் கடந்த 2019 ஜுலை மாதம் 2 ஆம் திகதி சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த இருவரையும் பிணையில் செல்ல கடந்த 2019 ஜுலை 9 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு அளித்த பிணை உத்தரவு தவறானதென்பதை சுட்டிக்காட்டும் 7 விடயங்களை உள்ளடக்கி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. சந்தேக நபர்களான ஹேமசிறி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், பூஜித் ஜயசுந்தர சர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொடவும் ஆஜராகி வாதிட்டிருந்தனர். சட்டமா அதிபர் சர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் வாதிட்டிருந்தார். பிரதான நீதிவான் சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளமை, சம்பவ சான்றுகளை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட தண்டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்த முடியாதெனக் கூறியமை, உறுதியான உளவுத்தகவல்களை தெளிவற்ற உளவுத் தகவல்களெனத் தனது தீர்ப்பில் குறிப்பிடல், சந்தேக நபர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கையை மையப்படுத்தியே கைது செய்யப்பட்டதாக நீதிவான் தீர்ப்பில் தெரிவித்தமை, அடிப்படையற்ற பக்கசார்பான உத்தரவு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய மட்டுமே செயற்பட வேண்டியதில்லையென நீதிவான் கூறியுள்ள விதம் உள்ளிட்ட 7 விடயங்களை மையப்படுத்தி சட்டமா அதிபரால் மீளாய்வு மனு தொடர்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், சந்தேக நபர்கள் தரப்பில் நீதிவானின் உத்தரவு சரியானதேயென வாதிடப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே குறித்த மீளாய்வு மனு தொடர்பில் 2019 ஒக்ரோபர் 9 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்போது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி நீதிவான் லங்கா ஜயரத்ன வழங்கிய பிணைத் தீர்ப்பு தவறானதெனவும் அதனை இரத்து செய்வதாகவும் மேல் நீதிமன்றம் அறிவித்தது.
அதனால் ஜுலை 9 ஆம் திகதி பிணை தீர்ப்புக்கு முன்னர் இருந்த நிலைமையே சந்தேக நபர்கள் இருவர் தொடர்பிலும் செல்லுபடியாகும் எனவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிடுவதாகவும் அந்த மேல் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஹேமசிறியும் பூஜித்தும் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதனையடுத்து விளக்கமறியலில் அடைக்கப்பட்ட பூஜித்தும் ஹேமசிறியும், மீள கொழும்பு மேல் நீதிமன்றில் தனித்தனியாக பிணை விண்ணப்பம் செய்தனர். அவை தொடர்பில் ஆராய்ந்தே நேற்றுத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படியே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த ஜுலை 2 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327,328 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்