தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது கொரோனா வைரஸாகும்.இது சீனாவின் வுஹான் மாகாணத்தையே பெரிதும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு கல்வி கற்கச் சென்ற இலங்கை மாணவர்களில் 33 பேர் அண்மையில் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 14 தினங்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவரான கசுன் விக்ரமகோ தனது முகநூல் நேற்றைய தினம் பகிர்ந்துள்ள அனுபவக் குறிபபை தமிழில் தருகிறோம்:
இது கனவல்ல; நாம் இப்போது இலங்கையில் இருக்கிறோம். நாட்டைக் காக்கும் தேவதைகளின் உதவியால் நாம் அபரிமிதமான கவனிப்புக்களுக்கு மத்தியில் நல்ல சுகத்துடன் இருக்கிறோம். இதனை எழுதும் சந்தர்ப்பத்திலே எங்களில் எவருக்கும் சுதந்திரமில்லை. ஏன் நாம், இராணுவ முகாமில் இருப்பதனால்தானா? நாம் வரும் வரையிலே வழிபார்த்திருந்த எங்களை இலங்கைக்கு வரவழைக்க, அர்ப்பணித்த எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிய மனிதாபிமானத்துடனான நல்லுள்ளங்கொண்ட மக்களால் நாம் ஏனைய நாடுகளுக்கு இரண்டாம் தரமல்ல என்பதை உணர்த்திய மக்களின் அன்பான அழைப்பினால்தான் இங்குவந்தடைந்தோம்.
அனைவருடனும் அல்லாவிடினும் இயன்றவரையில் எல்லோருடனும் கதைக்கிறோம். சிரமம் பாராது தகவல்களைத் தருகிறோம். அம் மனிதர்களின் அர்ப்பணிப்பாலே நாம் இந்த இடத்தில் இருக்கிறோம். 18 மணி நேர பயண அலுப்பையும் பொருட்படுத்திக் கொண்டு கொஞ்சநேரமேனும் இளைப்பாறாது இருக்க, எங்களை வரவேற்ற எங்களைக் கவனித்த புதுமையான உபசரிப்பின் வெளிப்பாடே காரணமாகும்.
எங்களுக்கு நேற்று முன்தினம் இரவு எமது இலங்கைத் தூதரகத்திலிருந்து மகிழ்ச்சிகரமானதொரு தகவல் வந்தது. ‘பிள்ளைகளே உங்கள் பொருட்களை தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் மாலையாகும்போது போவதற்கு முடியுமாகும்…’ என்ற நல்ல செய்தியே அது. அந்த வசனங்களை நாம் திரும்பத் திரும்ப கேட்டு வந்தோம். பல நாட்களுக்குப் பிறகு செவிகளை எட்டிய மிகவும் இனிமையான வார்த்தைகள் அவை. இம்மகிழ்ச்சிக்கும் இனிமைக்கும் பின்னால் பாரிய காரணியொன்று மறைந்துள்ளது. அதுதான் எங்களை இங்கு வரவழைப்பதற்காக எங்கள் குடும்பங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் சீனாவில் படித்த, இன்னும் படித்துக் கொண்டிருக்கிற இலங்கை நண்பர்கள் தம் நேரகாலத்தை அர்ப்பணித்து வெளிநாட்டு அமைச்சுக்கு விடுத்த கோரிக்கையை எண்ணி மகிழ்கிறோம். மனிதர்கள் மிகவும் கஷ்டமான காலத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். நாமும் கஷ்டம் நிறைந்த சூழ்நிலையில் எங்கள் மத்தியில் இல்லாதோர் குறித்து நாம் மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பார்க்கிறோம். எங்களை அங்கு வைத்திருக்க முனைந்த ஒருவர் இருப்பாரேயானால் அதனால் நாம் மேலும் உற்சாகப்பட்டோம். நாடே எங்களை ஆசீர்வதித்தது. மனிதாபிமானம் எப்போதும் வென்றே தீரும். இது சத்தியம்.
எல்லோர் முகங்களிலும் உறுதியற்ற தன்மையால் நிரம்பிய மகிழ்ச்சி. அன்பும் அழகும் நிறைந்த வுஹான் நகரைத் தனிமையில் விட்டுப் பிரிவதனாலான நிலையல்ல அது. மக்களின் வாழ்வைப் பறிக்க வந்த வைரஸிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அன்புள்ள தாயகத்திற்கு மீளுகிறோம் என்ற மகிழ்ச்சிப் பிரவாகமேயாகும்.
பின்னர் காலையில் மற்றொரு தகவல் வருகிறது. தூதரகத்திலிருந்து அன்று மாலையில் விமான நிலையத்திற்குச் செல்ல பஸ் வண்டியொன்று வருகிறது. அதில் புறப்பட தயாராகும்படி அத்தகவல் கூறியது. என்னதான் தயார்படுத்த உள்ளது. போகக் கிடைப்பதொன்றே போதும் என்றது மனம்.
நாம் அங்கிருந்து புறப்படும்போது எமது அடுத்த அறையில் இருக்கும் நேபாள நண்பர் கூறிய வார்த்தைகளை எமது மொழியில் தருகிறேன்.
‘நீங்கள் போகிறீர்களா? எங்கள் நாட்டிலிருந்து இன்னும் எங்களை அழைக்கக்கூட இல்லை. நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். கவனமாகப் போக முடியுமானால் நாம் மீண்டும் சந்திப்போம். அந்த நிச்சயமற்ற முகத்தைப் பார்த்து என்னால் என்ன பதில்தான் பகர முடியும்?
‘பாகிஸ்தானிலிருந்து எங்களை அழைத்துச் செல்வதற்கு எவரும் வருவதில்லையே என்று பாகிஸ்தான் நண்பர்கள் அழுவதாக எங்களில் சிலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. அவர்கள் தாயைப் பார்ப்பதற்குச் செல்வதற்காக ஆவல்படும்போது வேண்டாம் என்று தடுப்பது எந்தளவுக்கு அநாதரவு நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள். எமது நாட்டு தற்போதைய தலைமைத்துவத்தை நினைக்கும்போது பெருமைப்பட வேண்டும்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து எமது சின்னஞ் சிறிய இலங்கையே சீனாவிடம் எமது பிள்ளைகளை எமது நாட்டுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பத்தில் நாம் அமெரிக்காவைப் போன்று வளர்ச்சியடையவில்லை. ஆனால் எங்கள் தூதரகத்திற்கு, எமது வெளிநாட்டமைச்சிற்கு எங்கள் 33 பேரையும் பொறுப்பேற்பதற்குரிய நம்பிக்கை இருந்துள்ளது. எங்களை விட வளர்ச்சி காணாத நாடுகள் அவர்களது மாணவர்களை வரவழைக்க முடியாத நிலையில் உள்ளன. எம் விடயத்தில் எங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் எல்லோரும் ஏககுரல் கொடுத்தமையே எங்கள் விடயத்தில் கை கொடுத்துள்ளது. எனவே எங்கள் நாடு ஓர் அதிர்ஷ்ட நாடாகுமல்லவா?
பெரும் எண்ணச் சுமைகளைத் தாங்கிய 33 பேர்களையும் சுமந்த பஸ் வண்டி வுஹான் நகரிலிருந்து பயணிக்கிறது. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சனநெரிசல் மிக்க கடைத் தொகுதிகள் மூடி அநாதரவாகக் காட்சி தருகின்றன. அழகிய வுஹான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா எங்களைச் சூழ இரை தேடிக் கொண்டிருக்கிறது. எப்படியோ 8 மணியாகும்போது நாம் டியன்ஹே விமான நிலையத்தை அடைந்தோம். ஏராளமான நாடுகள் வுஹானை விட்டு வெளியேறுகின்றன. ஆனால் விமான நிலையத்தில் பணிகளுக்கோ மிகவும் குறைவான ஊழியர்களே கடமையில் இருந்தனர். அதனால் பணிகள் மந்த கதியிலே நடந்தன. ஆனாலும் உயர்ந்தபட்ச பங்களிப்போடு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்நாட்டு மக்களும் விழுந்து கொண்டிருக்கும் நாட்டைக் கரை சேர்ப்பதில் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வைரஸை ஒழித்துக் கட்டுவதில் இயன்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றிக்கொண்டிருந்தனர். நாம் சீனாவை விட்டு வெளியேறினாலும் அது அவர்களது நாடு. எனவே அவர்கள் அங்குதான் வாழவேண்டும்.
எமது 33 பேர்களதும் சகலவிதமான பதிவுகள், பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு நாம் 3.40 மணிக்கு எமக்குரிய விமானத்தில் ஏறினோம். எமது தேசியக் கொடியுடன் விமானத்தைப் பார்க்கையில் நாம் நாட்டை வந்தடைந்த பிரம்மை கொண்டோம். அங்கும் பலராலும் நாம் வழியனுப்பப்பட்டோம். அவர்களும் உயிரைப் பணயம் வைத்துத்தான் வந்திருக்கிறார்கள். ஒரு சிலர் வீடுகளில் பொய்யைக் கூறித்தான் இங்கு வந்திருக்கிறார்கள். அவ்வளவுக்கு ஆபத்து நிறைந்த வழியனுப்பல்தான். அப்பாவித்தனமான நன்றியுணர்வொன்றை வெளியிட்டோம்.
6 மணி நேர பயணத்தின் பின்னர் மத்தள மஹிந்த ராஜபக் ஷ விமான நிலையத்தை வந்தடைந்தோம். காலை 8.00 மணியளவில் எமது புண்ணிய பூமியில் பாதம் பதிக்கிறோம். நாம் சரியான நேரத்தில் வுஹானிலிருந்து புறப்பட்டுள்ளோம். இப்போது வுஹான் மூடப்பட்டுள்ளது.
விமானத்திலிருந்து வெளியைக் கண்டவுடன் சிறு சஞ்சலம் ஒன்று நெஞ்சை ஆட்கொள்ளவே செய்தது. எமது இராணுவ அதிகாரிகள் வெள்ளை சீருடையுடன் நிற்க அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளிட்ட விசேட செயற்றிட்டங்கள் அங்கு அரங்கேற்றப்பட்டிருந்தன. இவை எல்லாம் எங்களுக்காக, நாட்டுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன எத்தனை அர்ப்பணிப்புக்கள்?
சகல கிருமித் தொற்றுக்குள்ளிருந்தும் இரசாயன சுத்தப்படுத்தலின் பின் குளித்து முழுகிய பின்னர் பிரத்தியேக ஆடைகள் அணிவிக்கப்பட்டோம். அதன் பின்பே பஸ் வண்டியில் ஏற்றப்பட்டோம். நாம் எடுத்து வந்த எந்தப் பொருட்களும் எம்மிடமிருக்கவில்லை. அனைத்தும் கடும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின் தொற்று அகற்றப்பட்ட பிறகே எம்மிடம் ஒப்படைத்தனர். அதுவும் தியத்தலாவ முகாமை நெருங்கும்போதே அவை தரப்பட்டன.
நண்பகல் 12 மணியளவில் நாம் தியத்தலாவ முகாமை அடைந்தோம். அதுவும் இராணுவ பொலிஸ் பாதுகாப்புடனேதான். அழைத்து வரப்பட்டோம். இதனை எழுத்தில் வர்ணிக்க இயலாது.
அங்கு எங்களுக்கென்று பூரணமாக தயார்படுத்தப்பட்ட கட்டடம் ஒன்றில் வேறாக்கப்பட்ட அறைகளே தரப்பட்டன. அங்கு சகல வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. வை பை, சுடுநீர், வோஷிங் மெஷின் என்று சகலதும் நிரம்பியிருந்தன. நாம் எதிர்பார்த்ததை விடவும் கூடிய வசதி வாய்ப்புக்கள்தரப்பட்டன. 48 மணி நேரத்திற்குள்ளே இவ்வளவு முயற்சிகளும் செய்துள்ளார்கள். ஜப்பான், சீனாவில் திடீர் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கும் போது எமது இராணுவ வீரர்கள் அந்நாட்டுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உணர்த்துவது போன்று இக் கைங்கரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தகைய தேசிய செயற்பாடுகளில் எதிர்காலத்திலும் முன்நிற்பர் என்பதில் சந்தேகமில்லை. இவற்றுக்கும் மத்தியில் இன்னும் என்ன தேவையுள்ளன என்று எமது இராணுவ அதிகாரிகள் எம்மிடம் கேட்கின்றனர். இது உலகில் மிகவும் உன்னதமான மனிதாபிமான இராணுவம் அல்லவா? இது நாம் சொல்வதல்ல முழு உலகமும் கண்டு கொண்டுள்ள உண்மையாகும்.
எமது தாய்மார்கள் எம்மை அன்பொழுக வரவேற்பது போல பாற் சோறுடன் நாம் நன்கு உபசரிக்கப்பட்டோம். நாம் எங்களது அறைகளுக்குள் அங்குமிங்கும் சுதந்திரமாக நடமாடினோம். இது எங்கள் நாடு, எங்கள் பூமி. இறைவன் காவலில் எத்தகைய சந்தேகமோ பீதியோ எமக்கில்லை.
நாம் இங்கு வந்து சேர்ந்தமை எங்களை விட எம்மை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மக்களே மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். எங்களுக்காக தொலை பேசியில் ஆவலுடன் கதைத்தவர்களுக்குக் கூட எங்களால் பதிலோ அல்லது குறுகிய தகவல்களோ பரிமாறக்கூட வாய்ப்புக்கிடைக்கவில்லை. இங்கு வந்தவுடன் பல சேவைகளைப் பூரணப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாலே இதனைச் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
கவலையின் போது எங்களுக்காக வருந்தியிருந்த மக்களுக்கு புண்ணியம் மட்டும் கிடைத்தால் போதாது. எமது வாயிலிருந்து ஒரு வார்த்தையேனும் பகர்வதற்கு காத்திருக்கிறோம். நாம் இங்கு வந்து சேரும் வரை ஊடகங்களில் ஒவ்வொரு செய்தி வாசிப்பின் போதும் எங்களைப் பற்றிய தகவல்களை அறிவதில் ஆர்வத்துடன் காத்திருந்ததுடன் இறைவனிடம் பொறுப்புச் சாட்டியும் தர்மங்கள் செய்தும் எமது மனநிலையை சீர்செய்தும் எங்களுக்காக காத்திருந்த எல்லா மக்களுக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும்.
வந்து சேருவோமா இல்லையோ என்றிருந்த எமக்கு இல்லை இல்லை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக வந்து சேருவீர்கள் என்று வாயார வாழ்த்தியோர் பலர். நாம் வந்து சேர்ந்தோம். ஆனால் சாவதற்கு சரி வரவும் என்று கூறிய மனிதர்கள் உள்ள நாட்டில் நாம் வந்துள்ளது சாவதற்கல்ல. எல்லோரையும் பாதுகாத்து வாழ்வதற்கே பல நாட்களாக உண்ணாமல் பருகாமல் காத்திருந்த தாய் தகப்பனிடம் செல்வதற்கு நாம் காத்திருக்கிறோம். எமது குடும்ப உறவுகளிடம் சுருக்கமாக சொல்வதானால் எங்களுக்காக ஆவலோடு பார்த்திருப்போரிடம் செல்வதற்காக எதிர்பார்த்திருக்கிறோம்.
இந்தப் புனித பூமியில் மக்கள் புரியும் பிரார்த்தனைகள் எப்போதும் புறந்தள்ளப்படுவதில்லை. கொரோனா வைரஸ் எடுத்த எடுப்பிலேயே பரவிய வுஹான் பிராந்தியத்திலிருந்து நாம் மீண்டு வந்து நாட்டை அடைய எமது மக்கள் புரிந்த பிரார்த்தனைகளின் ஆசிர்வாதமே காரணமாகும். நாம் 33 பேரும் எத்தகைய பாதிப்புமின்றி சுகதேகிகளாக வந்துள்ளோம்.
14 தினங்களின் பின்னர் நாம் சுக புருஷர்களாக சமூகத்துடன் வந்துசேருவோம்.
இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று பட்டு கைகோர்த்து கொரோனாவை வெற்றி கொண்டு எழில் மிகு இலங்கையை இப்புவி மீது காண இறை கருணை கிடைக்க மீண்டும் பிரார்த்திப்போம்.-Vidivelli
- தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்